2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 சுற்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அனைத்து அணிகளும் பிளே ஆஃப் செல்வதற்கான போராட்டத்தில் இருந்துவருகின்றன.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தொடரை விட்டே வெளியேறியபோதும், இன்னும் ஒரு அணி கூட பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
அந்தளவு நடப்பு ஐபிஎல் சீசன் கடினமான ஒன்றாக இருந்துவரும் சூழலில், இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்டன லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள்.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என விளாசி 91 ரன்கள் குவித்து மிரட்டினார். உடன் கேப்டன் ஸ்ரேயாஸ் 45, ஜோஸ் இங்கிலீஸ் 30, ஷசாங் சிங் 33 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 236 ரன்கள் என்ற இமாலய டோட்டலை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
237 ரன்கள் என்ற மிகப்பெரிய டோட்டலை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஸ் 0, நிக்கோலஸ் பூரன் 6 மற்றும் எய்டன் மார்க்ரம் 13 ரன்கள் என வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அதற்குபிறகு களத்திற்கு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 18, டேவிட் மில்லர் 11 என வந்தவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேற லக்னோ அணி தடுமாறியது.
என்னதான் ஒருபுறம் விக்கெட்டாக விழுந்தாலும் 74 ரன்கள் அடித்த பதோனி தனியாளாக போராடினார். ஆனால் முடிவில் அவரும் அவுட்டாகி வெளியேற 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே அடித்த லக்னோ அணி படுதோல்வியை சந்தித்தது.
தரம்சாலா மைதானத்தில் 12 வருடங்களுக்கு பிறகு வெற்றிபெற்று பஞ்சாப் அணி அசத்தியுள்ளது.