2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிளே ஆஃப்க்கு செல்லக்கூடிய அணிகளை கணித்த பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளின் பெயர்களையே அதிகமாக தெரிவித்தனர்.
ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கிய பிறகு சிஎஸ்கே, மும்பை மற்றும் SRH மூன்று அணிகளும் தொடர் தோல்விகளையும், மோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கியுள்ளன.
இந்த சூழலில் 3 போட்டிகளில் வரிசையாக தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை தேடி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று களம்கண்டது. சண்டிகரில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது.
தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஸ் ஆர்யா முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி அதிரடியாக தொடங்கினார். ஆனால் அடுத்தபந்தில் பிரியான்ஸ் கேட்ச் கொடுக்க, அதை பந்துவீச்சாளர் கலீல் அகமது கோட்டைவிட்டார். அவருடைய கேட்ச்சை சிஎஸ்கே தவறவிட்டாலும் மறுமுனையில் இருந்த பிரப்சிப்ரனை 0 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 9 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றிய சிஎஸ்கே பவுலர்கள் கலக்கிப்போட்டனர்.
ஆனால் யார் போனா என்ன, என்னோட ஒரே வேலை அடிக்கிறது மட்டும் தான்’ என்று ஓவருக்கு ஓவர் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்ட 24 வயதேயான பிரியான்ஸ் ஆர்யா 19 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். முதல் 6 ஓவரில் அவர் மட்டும் 53 ரன்கள் அடித்தார், இது ஒரு அன்கேப்டு வீரர் பவர்பிளேவில் அடித்த அதிகபட்ச ரன்களாக பதிவுசெய்யப்பட்டது.
ஒருபுறம் புறம் பிரியான்ஸ் ஆர்யா அதிரடியாக ஆடினாலும், மறுமுனையில் அடுத்தடுத்து வந்த ஸ்டொய்னிஸ் 4, வதேரா 9 மற்றும் மேக்ஸ்வெல் 1 ரன் என அவுட்டாகிக்கொண்டே இருக்க 83 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி தடுமாறியது.
இங்கிருந்து எப்படியும் 170 ரன்களுக்குள் பஞ்சாபை சுருட்டிவிடலாம் என நினைத்தபோது, ’உங்க டீம்க்கு நான் ஒருத்தனே போதும்’ என 9 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என சிக்சர் மழை பொழிந்த பிரியான்ஸ் ஆர்யா 39 பந்தில் சதமடித்து சிஎஸ்கே அணிக்கு மரணஅடி கொடுத்தார். இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இந்திய வீரரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். 103 ரன்கள் குவித்த பிரியான்ஸ் வெளியேற 14 ஓவரில் 154 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி.
அதற்குபிறகாவது சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என நினைத்தபோது, கைக்கு வந்த கேட்ச்சை எல்லாம் கோட்டைவிட்ட சிஎஸ்கே ஃபீல்டர்கள் படுமோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினர். ஒன்றா இரண்டா பல கேட்ச்களை கோட்டைவிட, ’உங்க டீம்க்கு ஃபீல்டிங் கோச் யாரு பா? நாங்க அவர பார்க்கனும்’ என விரக்தி மனநிலைக்கே சென்றனர் ரசிகர்கள்.
பிரியான்ஸ் வெளியேறினாலும் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷஷாங் சிங் மற்றும் மார்கோ யான்சன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அச்சமற்ற கிரிக்கெட்டையே விளையாடினர். இவர்கள் இருவரை கட்டுப்படுத்த சிஎஸ்கே அணியிடம் பந்துவீச்சாளர்களே இல்லை. கடைசிவரை ஆட்டமிழக்காத ஷஷாங் சிங் மற்றும் யான்சன் இருவரும் சேர்ந்து 5 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என துவம்சம் செய்ய 20 ஓவரில் 219 ரன்கள் என்ற அபாரமான டோட்டலை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
5 விக்கெட்டுகளை இழந்த பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு அணி 136 ரன்களை குவிப்பது இதுவே முதல்முறை. அதற்கான அனைத்து பெருமையும் கேட்ச்சை கோட்டைவிட்ட சிஎஸ்கே வீரர்களுக்கே சேரும், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரையிலான 5 போட்டிகளில் 11 கேட்ச்களை கோட்டைவிட்ட சிஎஸ்கே அணி அதிக கேட்ச்களை கோட்டைவிட்ட முதல் அணியாக சம்பவம் செய்துள்ளது.
175-க்கு மேல போனாலே அடிக்கமாட்டோம், இவ்வளவு பெரிய டோட்டலையா அடிக்கப்போறோம் என்ற மனநிலையில் தான் சிஎஸ்கே பேட்டிங் செய்யும் என்ற விரக்தியில் ரசிகர்கள் இருக்க, தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரச்சின் மற்றும் கான்வே ஜோடி 6 ஓவரில் விக்கெட்டையே இழக்காமல் 59 ரன்களை அடித்து மிரட்டியது.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால் பஞ்சாப் அணி 16 சிக்சர்களை அடித்திருந்த நிலையில், சென்னை அணி 10 ஓவர்களாக ஒரு சிக்சரைகூட அடிக்கவில்லை. விக்கெட்டையே இழக்காமல் 6 ஓவரை கடந்தாலும் அடுத்த 6 பந்தில் ரச்சின் 36 ரன்னிலும், கேப்டன் ருதுராஜ் 1 ரன்னிலும் நடையை கட்டினர். ’சேஸிங் என்றாலே அடிக்கவராது சார்’ என்ற மனநிலையில் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார் கேப்டன் ருதுராஜ்.
’யார் தான் பா சிக்சர் அடிக்க போறீங்க’ என்று சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளிக்க இம்பேக்ட் வீரராக உள்ளே வந்த ஷிவம் துபே 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு ஆட்டத்தில் உயிரை எடுத்துவந்தார். ஆனால் மறுமுனையில் தட்டித்தட்டி ஆடிய டெவான் கான்வே 37 பந்தில் அரைசதமடித்தார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட மெதுவான அரைசதமாக பதிவுசெய்யப்பட்டது.
தேவைப்படும் ரன்ரேட் 15ஆக மாற அடித்துஆட முயன்ற துபே 42 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக களத்திற்கு வந்த தோனி 2 சிக்சர்களை பறக்கவிட்டு இண்டண்ட் காமித்தாலும், கான்வே ரன்களை அடிக்க தடுமாறினார். அவரை ரிட்டயர்டு அவுட் மூலம் வெளியேற்றிய சிஎஸ்கே அணி, ஜடேஜாவை களமிறக்கியது.
கடைசி 2 ஓவருக்கு 43 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் போராடினாலும் இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவர் முடிவில் 201 ரன்களை அடித்த சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவிற்கு 4வது தொடர் தோல்வியாகும். பவுலிங் சிறப்பாக இருந்தால், பேட்டிங் சிறப்பாக இல்லை.. பேட்டிங் சிறப்பாக இருந்தால் ஃபீல்டிங் சிறப்பாக இல்லை என சிஎஸ்கே அணி தொடர்ந்து கையில் இருந்த போட்டிகளை எல்லாம் கோட்டைவிட்டுவருகிறது.
4 போட்டியில் 3 வெற்றிகளை ருசித்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம்பிடித்துள்ளது.