பாகிஸ்தான் சூப்பர் லீக் எக்ஸ் தளம்
T20

போர்ப் பதற்றம் | PSL போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Prakash J

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. தவிர, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்

இந்த நிலையில், இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளைப் போலவே, பாகிஸ்தானும் ’பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்து நடைபெற உள்ள 10 போட்டிகளும் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நகருக்கு மாற்றுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ராவல்பிண்டி வந்துள்ள கிரிக்கெட் வீரர்கள் உடனே நகரை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, லாகூர், குஜ்ரான்வாலா மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் சமீபத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்தே, இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. PSL தவிர, வங்கதேசத்திற்கு எதிரான வரவிருக்கும் T20I தொடரும் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நிலைமை மேம்படவில்லை என்றால், PCB மாற்றுத் திட்டங்களை வகுத்து வருகிறது. போட்டிகள் எந்த பிரச்னையும் இல்லாமல் நடைபெறுவதை உறுதிசெய்ய அவர்கள் வெளிநாடுகளில் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.