Deepti sharma
Deepti sharma PTI
T20

WPL 2024: எப்படி இருந்தது உபி வாரியர்ஸின் சீசன்?

Viyan

2024 WPL சீசனில் உபி வாரியர்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றிகளும், 5 தோல்விகளும் கண்டு 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் முடித்தனர். தீப்தி ஷர்மா மற்றும் சோஃபி எகில்ஸ்டன் சிறப்பிடம் பெற்றனர், கேப்டன் அலீஸா ஹீலி மற்றும் தாலியா மெக்ரா ஏமாற்றம் அளித்தனர்.

2024 WPL சீசனின் லீக் சுற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த உபி வாரியர்ஸ், இம்முறை நான்காவது இடம் பிடித்து வெளியேறியிருக்கிறது. அந்த அணியின் சீசன் எப்படி அமைந்தது. இந்த சீசனின் சாதக பாதகங்கள் என்னென்ன? ஓர் அலசல்.

போட்டிகள்: 8
வெற்றிகள்: 3
தோல்விகள்: 5
முடிவு இல்லை: 0
புள்ளிகள்: 6
நெட் ரன் ரேட்: -0.371

இந்தத் தொடரின் முதலிரு போட்டிகளிலுமே தோல்வியடைந்து மோசமாகத்தான் சீசனைத் தொடங்கியது உபி வாரியர்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர் அணியுடனான முதல் போட்டியை கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போராடி 2 ரன்களில் தோற்றது அந்த அணி. முதலிரு போட்டிகளில் தோற்றிருந்தாலும் அடுத்த 2 போட்டிகளையும் வென்று நல்ல நிலைமைக்கு வந்தது வாரியர்ஸ். ஆனால், அடுத்த 4 போட்டிகளில் அந்த அணியால் நல்லபடியாக செயல்பட்டு அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

டாப் 2 பேட்டர்கள்

1. தீப்தி ஷர்மா - 8 போட்டிகளில் 295 ரன்கள்
ஆரம்பத்தில் சுமாராகவே சீசனைத் தொடங்கிய அவர், கடைசி 3 போட்டிகளில் 3 அரைசதங்கள் விளாசினார். வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் அரைசதங்கள் அடித்த மூன்றே வீராங்கனைகளில் (மற்றவர்கள் மெக் லேனிங் & பெத் மூனி) அவரும் ஒருவர் ஆனார்.

Deepti sharma

2. கிரேஸ் ஹாரிஸ் - 8 போட்டிகளில் 188 ரன்கள்
வழக்கம்போல் வாரியர்ஸின் மிடில் ஆர்டரில் மிகப் பெரிய நம்பிக்கையாகத் திகழ்ந்தார் கிரேஸ். ஜெயின்ட்ஸுக்கு எதிராக இன்னொரு அரைசதம் அடித்து மிரட்டிய அவரால், கடந்த சிசனைப் போல் போட்டிகளை முடித்துக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் 31.33 என்ற சராசரியில் தன் பங்களிப்பைக் கொடுத்தார் அவர்.

டாப் 2 பௌலர்கள்

1. சோஃபி எகில்ஸ்டன் - 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்
எப்போதும் போல் எகில்ஸ்டனே இப்போதும் டாப் விக்கெட் டேக்கர். சுற்றிலும் மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கினாலும், இவர் தன் வேட்டையை நடத்தினார். வாரியர்ஸின் ஃபீல்டிங் நன்றாக இருந்திருந்தால் இன்னும் சில விக்கெட்கள் கிடைத்திருக்கும்.

Sophie Ecclestone

2. தீப்தி ஷர்மா - 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்தி, WPL தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீராங்கனை என்ற பெருமை பெற்றார் தீப்தி!

பிளேயர் ஆஃப் தி சீசன்

டாப் ரன் ஸ்கோரர், இரண்டாவது டாப் விக்கெட் டேக்கர் என மிகச் சிறப்பாக சீசனை முடித்திருக்கும் தீப்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்!

ஏமாற்றங்கள்

கேப்டன் அலீஸா ஹீலியின் செயல்பாடே அந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் தான். 8 போட்டிகளில் 175 ரன்களே எடுத்தார் அவர். அதோடு, கடந்த சீசன் 4 அரைசதங்கள் அடித்து மிரட்டியிருந்த தாலியா மெக்ரா, இம்முறை 4 போட்டிகளில் வெறும் 27 ரன்களே எடுத்தார். அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் களமிறக்கப்பட்ட சமாரி அத்தப்பத்து 4 இன்னிங்ஸ்களில் எடுத்த ரன்கள் 28. இப்படி வெளிநாட்டு பேட்டர்களின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.

புதிய நம்பிக்கைகள்

தீப்தி ஷர்மா மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது தான் அந்த அணி மூலம் கிடைத்திருக்கும் நம்பிக்கை. அந்த அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் இளம் வீராங்கனைகள் யாரும் பெரிதாக சோபித்திடவில்லை.