ஆதித்யா அசோக் espn, x page
T20

'என் வழி தனி வழி’ | நியூசி. பவுலரின் கையில் ரஜினி பட வசனம்.. பின்னணியில் உருக்கமான காரணம்!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆதித்யா அசோக், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’படையப்பா’ படத்தில் வரும் பிரபல பஞ்ச் டயலாக்கான ‘என் வழி தனி வழி’ என்கிற வசனத்தைப் பச்சை குத்தியுள்ளார்.

Prakash J

ஒவ்வொரு நடிகருக்கும் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள், தங்கள் நடிகருடைய முகத்தை, தமது உடலில் பச்சைகுத்திக் கொள்வார்கள் அல்லது டாட்டூ போட்டுக் கொள்வார்கள். அந்த வகையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆதித்யா அசோக், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’படையப்பா’ படத்தில் வரும் பிரபல பஞ்ச் டயலாக்கான ‘என் வழி தனி வழி’ என்கிற வசனத்தைப் பச்சை குத்தியுள்ளார். அவரது இந்த செய்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. எதற்காக, ரஜினி பட டயலாக்கை அவர் பச்சை குத்திக் கொண்டார். அவருக்கும் அந்த வசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஆதித்யா அசோக்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஆதித்யா அசோக், தமிழ்நாட்டின் வேலூர் மாவடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அங்குதான் அவர் பிறந்து வளர்ந்தார். அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது அவரது குடும்பம் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் இரண்டு வார சுழல் பயிற்சி முகாமில் தனது திறமைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா வந்தபோது, அவர் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “என் தாத்தா உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ’படையப்பா’ படம் குறித்து நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் இறந்த பின்பு, அவருக்கும் எனக்கும் நெருக்கமான உரையாடலை நினைவூட்ட, ’என் வழி தனி வழி’ எனப் பச்சை குத்திக் கொண்டேன். மேலும் இந்த நிகழ்வு மூலம் என் தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இது எனது தமிழ் வேர்கள், வேலூர் மற்றும் ஒரு பிரபலமான தமிழ் சின்னம் மற்றும் உலகளாவிய சின்னத்துடனும் தொடர்புடையது” எனக் கூறியிருக்கிறார். இந்த வசனம், நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்தை வெல்வதற்கான ஆதித்யாவின் தனித்துவமான பாதையின் விளக்கமாகவும் பொருந்துகிறது.