ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. ஸ்காட்லாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் நடந்த முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது.
இரண்டாவது போட்டி நெதர்லாந்துக்கும் நேபாளத்திற்கும் இடையில் நடந்தது. க்ளாஸ்கோவிலுள்ள டிட்வுட் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 152 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தேஜா நிதாமனாரு 35 ரன்களையும், விக்ரம்ஜித் சிங் 30 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய நேபாள் அணியில் லமிசானே 3 விக்கெட்களையும், நந்தன் யாதவ் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
153 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நேபாள் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 152 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் நேபாள் அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை சமன் செய்து கொடுத்தார். அந்த அணியில் அதிகபட்சமாக ரோகித் 48 ரன்களை எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன்பின் முதல் சூப்பர் ஓவர் தொடங்கியது.. முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி சூப்பர் ஓவரில் 19 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பூர்ட்டல் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி 2 என 5 பந்துகளில் 18 ரன்களைக் குவித்திருந்தார். 20 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓ’டூட் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரை 19க்கு கொண்டு வந்து நிறுத்தினார். முதல் சூப்பர் ஓவரில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனையடுத்து இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது. இம்முறை நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது. ஸ்டாட் எட்வார்ட்ஸ் மற்றும் மேக்ஸ் ஓ’டூட் தலா ஒரு சிக்சரை அடித்து அணியின் ஸ்கோரை 17 ஆகக் கொண்டு வந்தனர். 18 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நேபாள் அணியில் தீபேந்திர சிங் ஒரு பவுண்டரி ஒரு சிக்சரை அடித்து 17 ரன்களை அடித்து இரண்டாவது சூப்பர் ஓவரையும் சமனில் கொண்டு வந்து முடித்தார்.
இதன்பின் மூன்றாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது. நேபாள் அணி பேட்டிங் செய்தது. இம்முறை நெதர்லாந்தின் ஆஃப் ஸ்பின் ஆல் ரவுண்டர் சாக் லயன் கேசெட்டிடம் பந்து கொடுக்கப்பட்டது. அவரோ நான்கு பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் சூப்பர் ஓவரை முடித்துக்கொடுத்தார். இறுதியில் நெதர்லாந்தின் மைக்கேல் லெவிட் ஒரு சிக்சரை விளாசி நெதர்லாந்த் அணியை வெற்றிபெறச் செய்தார். ஆட்ட நாயகனாக சாக் லயன் கெசெட் தேர்வு செய்யப்பட்டார்.
கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் கூட அரிதாகத்தான் நிகழும்.. ஆனால், ஆடவர் தொழில்முறை டி20 அல்லது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது இதுவே முதல்முறை.