பிரியான்ஸ் ஆர்யா - நவ்ஜோத் சிங் சித்து web
T20

”சச்சினுக்கு பிறகு இரண்டாவது அதிசய வீரர்..” பிரியான்ஸ் ஆர்யாவை புகழ்ந்த முன்னாள் IND வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 39 பந்தில் சதமடித்து அசத்திய 24 வயது பிரியான்ஸ் ஆர்யா இந்திய கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார். பல முன்னாள் வீரர்கள் அவரை புகழ்ந்துவருகின்றனர்.

Rishan Vengai

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் திறமையான இந்திய வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அந்த பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற பல்வேறு திறமையான வீரர்களை இந்திய அணிக்கு கொடுத்த பெருமை ஐபிஎல்லையும் சேரும்.

அந்தவகையில் 2025 ஐபிஎல் தொடரில் சிறந்த கண்டுபிடிப்பாக பிரியான்ஸ் ஆர்யா என்ற டெல்லியை சேர்ந்த 24 வயது வீரர் கண்டறியப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 39 பந்தில் சதமடித்து அசத்திய அவர், 9 சிக்சர்களையும் 7 பவுண்டரிகளையும் விளாசினார்.

பிரியான்ஸ் ஆர்யா

ஒருகட்டத்தில் 83-5 என்ற மோசமான நிலையில் இருந்த பஞ்சாப் அணியை, தன்னுடைய அச்சமற்ற ஆட்டத்தால் 219/6 என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

இந்த சூழலில் பதிரானா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது முதலிய ஸ்டார் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பிரியான்ஸ் ஆர்யாவின் ஷாட் சலக்சன், பேட் ஸ்விங், பிளேஸ்மெண்ட் என அனைத்தும் முன்னாள் வீரர்களிடமிருந்து பாராட்டைப் பெற்று தந்தது.

சச்சினுக்கு பிறகு 2வது அதிசய வீரர்..

24 வயதில் தன்னுடைய திறமையால் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்கவைத்திருக்கும் பிரியான்ஸ் ஆர்யாவை முன்னாள் இந்திய வீரரான நவ்ஜோத் சிங் சித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

பிரியான்ஸ் ஆர்யாவை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் சித்து, “பிரியான்ஷ் ஆர்யா நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடுவார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, அவர் ஒரு அதிசயமான இரண்டாவது வீரர். ஏனென்றால் இன்று அவர் கடினமான சூழ்நிலையில் சதம் அடித்தார். கிட்டத்தட்ட தோல்வியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை மீட்டெடுத்துவந்து வெற்றியை தேடித்தந்துள்ளார்.

அவர் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களைப் பாருங்கள், அவர்களுக்கு எதிராக 250-ஸ்ட்ரைக்ரேட்டில் சதமடித்து ஆச்சரியப்படுத்தினார்.

ஷ்ரேயாஸ், நேஹல் வதேரா மற்றும் பிரப்சிம்ரன் ஆகியோர் ஆட்டமிழந்தபோது, ​​அவர் தனது வலுவான மணிக்கட்டுகளை பயன்படுத்தி சிறந்த ஷாட்கள் மூலம் ரன்கள் எடுத்தார். பாயிண்ட் மற்றும் கவர்களில் அவர் சிக்ஸர்கள் அடிக்கும் விதம், அவரிடம் அனைத்து ரேஞ்ச் ஷாட்களும் இருப்பதை காட்டுகிறது” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.