MI vs PBKS
MI vs PBKS PTI
T20

ஒரே போட்டி: 2 சாதனைகள் படைத்த மும்பை இந்தியன்ஸ் - மோசமான சாதனையில் இணைந்த ரோகித், அர்ஷ்தீப் சிங்

சங்கீதா
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க! IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTAnApp

16-வது ஐபிஎல் சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொஹாலியில் நேற்றிரவு (03.05.2023) நடைபெற்ற 46-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் 5 வெற்றிகள், 5 தோல்விகளுடன் பஞ்சாப் அணி, 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 சாதனைகளைப் படைத்துள்ளது. அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் அதிகப்பட்சமாக நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரை சேஸ் செய்து வெற்றிக்கண்ட அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. அந்தவகையில், சார்ஜாவில் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 226 ரன்கள் அடித்து வெற்றிக்கண்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில், 218 ரன்களை சென்னை அணி குவித்திருந்த நிலையில், அதனை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவரில் 219 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது. இதேபோல், கடந்த 2008-ம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ரன்கள் அடித்து வெற்றிக்கண்டது.

தற்போது நேற்று (03.05.2023) நடைபெற்ற 46-வது லீக் போட்டியில், பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்த நிலையில், அதனை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் எடுத்து வெற்றிக்கண்டுள்ளது.

224 -ஆர்.ஆர். vs பஞ்சாப் கிங்ஸ், சார்ஜா 2020

219 -மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே, டெல்லி 2021

215 -ஆர்.ஆர். vs டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத் 2008

215 -மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மொஹாலி 2023

213 -லக்னோ vs பெங்களூரு, பெங்களூரு 2023

213 -மும்பை இந்தியன்ஸ் vs ஆர்.ஆர்., மும்பை 2023

மேலும், ஒரு சீசனில் ஒரே அணி, இரண்டு முறை 200+ ரன்களை சேஸ் செய்து வெற்றிபெற்ற அணிகளின் வரிசையிலும் மும்பை இந்தியன்ஸ் அணி இணைந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் -2018

மும்பை இந்தியன்ஸ் - 2023

கடந்த 2014-ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 206 ரன்களும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 211 ரன்களும் சேஸ் செய்து பஞ்சாப் அணி வெற்றிக்கண்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு சென்னை அணி கொல்கத்தாவுக்கு எதிராக 205 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக 207 ரன்களும் எடுத்து வெற்றிப்பெற்றிருந்தது. 2023-ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 214 ரன்களும், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக 216 ரன்களும் சேஸ் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

MI vs PBKS
குறிப்பாக, தொடர்ச்சியாக (consecutive games) இரண்டு போட்டிகளில் 200+ ஸ்கோரை சேஸ் செய்து வெற்றிப்பெற்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

அதேவேளையில், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் பந்து வீச்சில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கிய முதல் அணி என்ற மோசமான வரலாற்றுச் சாதனையையும் மும்பை அணி படைத்துள்ளது. அதேசமயத்தில் இந்த சீசனில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, தொடர்ச்சியாக கடந்த 4 போட்டிகளிலும், 200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளது.

Rohit sharma

மேலும், ஐபிஎல் போட்டிகளில் அதிக டக் அவுட் ஆன வீரர்களில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4-வது இடத்தில் உள்ளார். நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆன ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் 15-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். அவருக்கு முன்னதாக சுனில் நரேன் (157 போட்டிகளில் 15 டக் அவுட்), மந்தீப் சிங் (111 போட்டிகளில் 15 டக் அவுட்), தினேஷ் கார்த்திக் (238 போட்டிகளில் 15 டக் அவுட்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மாவுக்கு அடுத்து 14 டக் அவுட்களுடன் அம்பத்தி ராயுடு உள்ளார்.

இதேபோல், பஞ்சாப் மிகவேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மோசமான சாதனையில் இணைந்துள்ளார். அதன்படி, 3.5 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங், 66 ரன்கள் மும்பை அணிக்கு விட்டுக்கொடுத்து 5-வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டில் பாசில் தம்பி 4 ஓவர்களை வீசி பெங்களூரு அணிக்கு 70 ரன்களும், குஜராத் அணி பௌலர் யஷ் தயாள் இந்த சீசனில் (2023)கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் 4 ஓவர்களை வீசி, 69 ரன்களும் கொடுத்து முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.

Arshdeep Singh

சென்னை அணிக்கு எதிராக 4 ஓவர்களை வீசி கடந்த 2013-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி பௌலர் இஷாந்த் சர்மா 66 ரன்களும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் பௌலர் முஜீப் உர் ரஹ்மான் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்களை வீசி 66 ரன்களும் கொடுத்திருந்தனர். இதற்கு அடுத்து அர்ஷ்தீப் சிங் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் 3.5 ஓவர்களை வீசி 66 ரன்களை விட்டுக் கொடுத்த முதல் பஞ்சாப் வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

MI vs PBKS

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி ,மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்து வீசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் குறிப்பாக திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோரின் ஸ்டம்புகளை சிதறடித்து போல்டாக்கிய புகைப்பபடங்களும் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.