’மற்ற ஐபிஎல் அணிகள் எல்லாம் வியாபாரத்திற்காக விளையாடுகின்றன, மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும்தான் இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த திறமையான வீரர்களை உருவாக்கி கொடுக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் விளையாடுகிறது. அவர்களின் விஷனே வேறு’ என முன்னாள் வீரர் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணியை பாராட்டி பேசியிருந்தார்.
அதற்கு காரணம் 2025 ஐபிஎல் தொடர் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், அதற்குள் அஸ்வனி குமார் மற்றும் விக்னேஷ் புதூர் என்ற இரண்டு திறமையான வீரர்களை பற்றி எல்லோரையும் பேசவைத்துள்ளது.
பஞ்சாபை சேர்ந்த விவசாயி மகனான 23 வயது அஸ்வனி குமார் ஐபிஎல் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். அதேபோல கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகனான 23 வயது விக்னேஷ் புதூர் இந்தியாவின் அடுத்த சைனாமேன் பந்துவீச்சாளர் என வல்லுநர்கள் புகழும் ஒரு திறமையாக விளங்குகிறார். அவர் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹுடா மூன்று பேரின் விக்கெட்டுகளை சாய்த்தார்.
இப்படி சிறந்த வீரர்களை கண்டறியும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் டீம் எப்படி செயல்படுகிறது என்பது தெரியுமா? அவர்கள் ஒரு வீரரின் திறமையை கண்டறிவதோடு நிறுத்திவிடாமல், அவர்களை அடுத்தக்கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வது என்ற குறிக்கோளுடன் அவர்கள் மேல் பணத்தை செலவிட்டு, நேரடியாக விமானம் மூலம் அழைத்துவந்து பயிற்சி குழுவில் இணைத்துக்கொண்டு அவர்களின் திறமையை வளர்த்தெடுக்கின்றனர்.
சையத் முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, ரஞ்சிக்கோப்பை முதல் தொடங்கி மற்ற உள்நாட்டு டி20 லீக் வரை பல்வேறு உள்நாட்டு போட்டிகளில் இளம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களின் முழுமையான மதிப்பீட்டோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் செயல்முறை தொடங்குகிறது.
கிரண் மோர், அபே குருவிலா, டி.ஏ. சேகர் மற்றும் ஜான் ரைட் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திறமையான கிரிக்கெட்டர்கள் MI-ன் ஸ்கவுட்டிங் குழுவில் ஒருங்கிணைந்துள்ளனர். இந்த நிபுணர்கள் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதோடு, அடுத்தடுத்த கட்டங்களில் அவர்களின் செயல்திறனைப் பின்பற்றி, அவர்களை சோதனைகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பாக சொல்லப்போனால் கேராளவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புதூர், கேரளாவின் சீனியர்களுக்கான அணியில் கூட விளையாடியதில்லை. அப்படி ஒரு வீரரை தேடிக் கண்டறிந்த மும்பை இந்தியன்ஸ் ஸ்கவுட்டிங் குழு அவரின் திறனை பரீசலித்து, அவரை முதலில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி பட்டரைக்கு வரவழைத்துள்ளது. அங்கு அவருக்கான திறமையை வளர்க்கும் அத்தனை பயிற்சிகளையும் கொடுத்த மும்பை இந்தியன்ஸ், அவரை விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கிற்கு அழைத்துச்சென்றது. அங்கு அவர் ரசீத் கானிடம் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பை பெற்றார், அவருடைய அனுபவத்தை கற்றுக்கொண்டார்.
அதற்குபிறகு 2025 ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சத்திற்கு ஏலமெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அழுத்தம் நிறைந்த போட்டியிலேயே விக்னேஷ் புதூரை களமிறக்கியது. அங்கு அவர் 4 ஓவரில் 32 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியின் சிறந்த வீரராக விளங்கினார்.
இப்படித்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கவுட்டிங் டீம் இளம் வீரர்களை நாடு முழுவதிலுமிருந்து கண்டறிந்து வருகிறது.
1. ஜஸ்பிரித் பும்ரா - 10 லட்சம்
வித்தியாசமான பவுலிங் ஆக்சனோடு இருந்த ஜஸ்பிரித் பும்ராவை வெறும் 10 லட்சத்திற்கு அணிக்குள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அவருடைய ஆக்சனை பார்த்து இவரெல்லாம் நீண்டகாலத்திற்கு கிரிக்கெட்டில் நிலைக்க முடியாது, ஒரே தொடரிலேயே காயமடைந்து வெளியேறிவிடுவார் என்ற விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் உலகத்தின் தலைசிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார் பும்ரா.
2. ஹர்திக் பாண்டியா - 10 லட்சம்
பணமில்லாமல் வெறும் நூடுல்ஸ் மட்டுமே சாப்பிட்டிருக்கிறோம் என ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தார். அப்படி வறுமையின் பிடியிலிருந்த ஹர்திக் பாண்டியாவை இந்தியாவின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டராக மாற்றிய பெருமை மும்பை இந்தியன்ஸையே சேரும். அவருடைய சகோரர் க்ருணால் பாண்டியாவையும் மும்பை இந்தியன்ஸ் அணியே அறிமுகப்படுத்தியது, அவரும் பிரகாசமாக செயல்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவை வெறும் 10 லட்சத்திற்கு அணியில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
3. சூர்யகுமார் யாதவ் - 10 லட்சம்
மைதானத்தில் எந்த இடத்திற்கு பந்தை அடிக்க நினைக்கிறாரோ, அந்த இடத்திற்கு சூர்யகுமார் யாதவால் அடிக்க முடியும், அதனால் 360 டிகிரி பிளேயர் என அவரை அழைக்கலாம் என்று ஏபிடி வில்லியர்ஸே கூறுமளவு ஒரு சிறந்த திறமையை கண்டறிந்த பெருமையும் மும்பை இந்தியன்ஸையே சேரும்.
4. யுஸ்வேந்திர சாஹல் - 10 லட்சம்
ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக விளங்கும் யுஸ்வேந்திர சாஹலை ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்திய பெருமையும் மும்பை இந்தியன்ஸையே சேரும்.
5. குல்தீப் யாதவ் - 10 லட்சம்
இன்றைய இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஸ்பின்னராக விளங்கும் சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவை அறிமுகப்படுத்திய பெருமையும் மும்பை இந்தியன்ஸ் ஸ்கவுட்டிங் குழுவிற்கே சேரும்.
மற்ற தலைசிறந்த வீரர்களான நிக்கோலஸ் பூரன், ஷிகர் தவான், அஜிங்கியா ரஹானே, அம்பத்தி ராயுடு, அக்சர் பட்டேல், நிதிஷ் ரானா, இஷான் கிஷன், திலக் வர்மா, மனிஷ் பாண்டே என்ற வீரர்களுடன் தற்போது அஸ்வனி குமார் , விக்னேஷ் புதூர் இருவரும் இணைந்துள்ளனர்.