ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்று சாம்பியன் அணியாக வலம்வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஒரு காலத்தில் சிறந்த உலக டி20 அணியை உருவாக்கி அனுப்பினாலும், அந்த அணியை மும்பை இந்தியன்ஸ் தோற்கடிக்கும் என்று பல ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் பாராட்டியிருந்தனர். ஆண்ட பரம்பரை, கடப்பாரை அணி என ரசிகர்கள் கொண்டாடிவந்தனர்.
ஆனால் எப்போது ரோகித் சர்மாவின் கைகளிலிருந்து கேப்டன் பொறுப்பானது ஹர்திக் பாண்டியாவிடம் சென்றதோ, அப்போதிருந்து மோசமான ஒரு ஆட்டத்தையே மும்பை இந்தியன்ஸ் வெளிப்படுத்திவருகிறது.
நடப்பு 2025 ஐபிஎல் தொடரிலும் 4 போட்டிகளில் மூன்றில் தோற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக செயல்பட்டுவருகிறது.
தொடர் தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறிவரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பும்ரா விரைவில் அணியில் இணைவார் என கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிந்திருந்தார்.
இந்தசூழலில் கிறிக்பஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆர்சிபிக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே பும்ரா மும்பை அணியில் விளையாட தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கிறிக்பஸ் செய்தியின் படி, “ பும்ரா சனிக்கிழமையன்று மும்பை அணியில் இணைந்தார். போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இறுதி செய்ய NCA உடன் தனது அமர்வுகளில் பங்கேற்றார், தற்போது அவர் எங்கள் பிசியோக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று பயிற்சியில் பங்கேற்று பந்து வீசினார், எனவே எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்” என தலைமை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனே கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.