SRH - MI cricinfo
T20

மீண்டும் அம்பயரால் எழுந்த சர்ச்சை! இஷான் கிஷன் அவுட்டா? நாட் அவுட்டா? 3வது இடத்திற்கு முன்னேறிய MI!

தொடர்ச்சியான 4 வெற்றிகளுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடர் பாதி கிணறை தாண்டிவிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலிய அணிகள் 5 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

இந்த சூழலில் முதல் 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அதற்கடுத்த 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றிபெற்று கம்பேக் கொடுத்துவருகிறது.

mumbai indians 2025

இந்நிலையில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

143 ரன்கள் அடித்த SRH!

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி, மும்பை பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர்.

அற்புதமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் அதிரடி வீரர்களான டிராவிஸ் ஹெட்டை 0 ரன்னிலும், அபிஷேக் சர்மாவை 8 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டார். உடன் களத்திற்கு வந்த இஷான் கிஷன் மற்றும் நிதிஷ் ரெட்டியை 1, 2 ரன்கள் என அவுட்டாக்கிய தீபக் சாஹர் சன்ரைசர்ஸ் அணிக்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.

13 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைத்ராபாத் அணியை மீட்டு எடுத்துவரும் போராட்டத்தில் க்ளாசன் மற்றும் அனிகேத் வர்மா இணைந்தனர். ஆனால் அனிகேத்தை 12 ரன்னில் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளியேற்ற 35 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி, ’என்ன பா நடக்குது இங்க’ என்ற மோசமான நிலைக்கு சென்றது.

அனைவரும் வெளியேறினாலும் தனியொரு ஆளாக களத்தில் நின்ற கிளாசன், 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கி 71 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுமுனையில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்ட அபினவ் மனோகர் 43 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் 143 ரன்களை மட்டுமே அடித்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

7 விக்கெட்டில் மும்பை அசத்தல் வெற்றி!

144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹிட்மேன் ரோகித் சர்மா, அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ரிக்கல்டன் 11 ரன்னில் வெளியேறினாலும் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட ரோகித் சர்மா அரைசதமடித்து அசத்தினார்.

மறுமுனையில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய வில் ஜாக்ஸ் 22 ரன்னில் வெளியேற, அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி மிரட்டிவிட்டார். செம டச்சில் தெரிந்த ரோகித் சர்மா 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 70 ரன்களை அடிக்க, 15.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேற்றம்..

தொடக்கத்தில் 5 போட்டியில் 1 ஆட்டத்தில் மட்டுமே வென்ற மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் நீடித்தது. இந்த சூழலில் தற்போது தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவுசெய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

முதல் பாதியில் வரிசையாக 4 போட்டிகளில் கூட தோற்றுவிட்டு பாதி சீசனுக்கு பிறகு வெறித்தனமாக விளையாடி பிளேஆஃப் செல்லும் வித்தையை நடப்பு சீசனிலும் காட்டிவருகிறது பல்தான்ஸ் படை. 2015 ஐபிஎல் சீசனில் அப்படி கோப்பை வென்ற வரலாறும்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உண்டு. இந்நிலையில் ‘மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லுங்களே’ என தரமான கம்பேக் கொடுத்துள்ளது மும்பை அணி.

அவுட்டா? நாட் அவுட்டா?

வெற்றியை கடந்து எப்போதும் சர்ச்சைக்குரிய அவுட்டுக்கு பெயர்போன மும்பை இந்தியன்ஸ் அணி, இன்றைய போட்டியிலும் ஒரு சர்ச்சைக்குரிய விக்கெட்டை கொண்டிருந்தது.

போட்டியின் போது இஷான் கிஷனுக்கு வழங்கப்பட்ட அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸின் 3வது ஓவரை தீபக் சாஹர் வீச இஷான் கிஷன் எதிர்கொண்டார். லெக் சைடில் வொயிடு போல் வந்த பந்தினை ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன் அடிக்க முயன்ற நிலையில் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது .

பந்துவீச்சாளர் தீபக் சாஹர் உட்பட ஒட்டுமொத்த மும்பை வீரர்கள் யாரும் விக்கெட் கேட்காத நிலையிலும், அம்பயர் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என நினைத்து நினைத்து கையை மேலும் கீழுமாக உயர்த்தி குழப்பத்தில் இருந்தார். ஆனாலும் யாரும் அப்பீல் செய்யாதபோதிலும் தடாலடியாக அவுட் கொடுத்தார். ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் படாதது தெளிவாக தெரிந்தது. இப்படி இஷான் கிஷன் சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டானது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

ஒருதரப்பினர் ‘மும்பை இந்தியன்ஸா, அம்பயர் இந்தியன்ஸா’ என விமர்சனம் செய்ய, மற்றொரு தரப்பினர் ’அம்பயர் ஒயிடு கொடுக்கவே முதலில் கையை உயர்த்தினார். ஆனால் இஷன் கிஷன் தான் முதலில் வெளியேறினார், அதை பார்த்தபிறகே அம்பயர் அவுட் கொடுத்தார்’ என்று தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் ’எந்தவிதத்திலும் தவறான விக்கெட் விழக்கூடாது என்பதற்கு தான் மூன்று டிஸ்பிளே மூலம் ஒவ்வொரு அவுட்டும் 3வது அம்பயரை கடந்து கண்காணிக்கப்படுகிறது. அவுட்டாகி பெவிலியன் வரை சென்றபிறகும் சில வீரர்கள் மீண்டும் பேட்டிங் செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர், இஷான் கிஷன் ஏன் அப்படி அழைக்கப்படவில்லை என்ற எதிர்கேள்வியை சில ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

எல்லாவற்றையும் கடந்து ’அட மும்பை இந்தியன்ஸ்னாலே இப்படி சர்ச்சைக்குரிய அவுட் கொடுக்கப்படுறது வழக்கம்தானே’ என கலாய்க்கவும் செய்துவருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ்

எப்படி இருப்பினும் ஃபார்ம் அவுட்டில் இருந்த ரோகித் சர்மா, திலக் வர்மா, வில் ஜாக்ஸ் அனைவரும் ஃபார்முக்கு திரும்ப, காயத்திலிருந்து பும்ராவும் திரும்பி வந்தாச்சு என்ற நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த சீசன் பெரிய பலத்தை கொடுத்துள்ளது. ’அவனுங்க முழு பலத்தோட வந்தா வீழ்த்துறது முடியாத காரியம் சார்’ என்பது போல தரமான கம்பேக் கொடுத்துவருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.