ashwani kumar BCCI
T20

23 வயது MI வீரர் படைத்த வரலாற்று சாதனை! கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிபெற்றது.

Rishan Vengai

18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 5 கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2 தோல்விகளை வரிசையாக சந்தித்து தடுமாறிவருகின்றன.

இந்த சூழலில் 2 தோல்விகளுக்கு பிறகு 3வது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது மும்பை அணி.

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி மும்பை இந்தியன்ஸ் பவுலர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 ரன்களுக்கே சுருண்டது. அதிகபட்சமாக ரகுவன்சி 26 ரன்கள் அடித்தார்.

அறிமுக போட்டியில் விளையாடிய அஸ்வனி குமார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

117 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன் அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் கடைசிவரைக்கும் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் அடித்து வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்தது.

வரலாறு படைத்த அஸ்வனி குமார்!

அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 23 வயதேயான மும்பை அணி வீரர் அஸ்வனி குமார், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

வரலாறு படைத்த MI-ன் இளம் பவுலர்!

அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சு:

1. அல்சாரி ஜோசப் (MI) - 6/12 vs SRH - 2019

2. ஆண்ட்ரூ டை (GL) - 5/17 vs RPS - 2017

3. ஷோயப் அக்தர் (KKR) - 4/11 vs DD - 2008

4. அஸ்வனி குமார் (MI) - 4/24 vs KKR - 2025*

5. கெவோன் கூப்பர் (RR) - 4/26 vs KXIP - 2012

6. டேவிட் வைஸ் (RCB) - 4/33 vs MI - 2015