DCvsMI pt web
T20

‘மேல ஏறி வாரோம்..’ playoffல் மும்பை இந்தியன்ஸ்; இனி என்னென்ன நடக்கப்போகுதோ?

கட்டாய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலிருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி..

Rajakannan K

ஐபிஎல் போட்டிகள் என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. அதேபோல்தான் எதிர்பாராத ட்விஸ்ட்களுக்கும் பஞ்சமிருக்காது. அப்படி இந்த சீசனில் செம்ம ட்விஸ்டுகளுக்கு உள்ளான இரு அணிகள்தான் மும்பை இந்தியன்ஸும், டெல்லி கேப்பிடல்ஸும். முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டுமே சந்தித்த டெல்லி அணி எப்படியும் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும் எனும் அளவிற்கு நம்பிக்கை கொடுத்தது. ஆனால், கடைசி 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு சென்று எல்லோரையும் ‘அச்சச்சோ’ போட வைத்தது.

மும்பை இந்தியன்ஸ்

அதேபோல், முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வென்ற மும்பை அணி, அம்பி மோடில் இருந்து அந்நியனாக மாறி வெற்றி மேல் வெற்றிகளை குவித்தது. கடைசி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியை தழுவி கெத்தாக மீண்டு வந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த இரு அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் என்ன நடந்தது வாருங்கள் பார்க்கலாம்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

போட்டியில் பந்துவீசுவதற்கு முன்பே டெல்லி அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், முக்கியமான நேரங்களில் விக்கெட் எடுத்துக் கொடுத்தும், தேவையான நேரங்களில் பேட்டிங்கில் ரன்கள் சேர்த்தும் கொடுத்த கேப்டன் அக்ஸர் படேல் விளையாட மாட்டார் என்ற செய்தி வந்தது. உடல்நிலை பிரச்னை காரணமாக அக்ஸர் படேல் ஓய்வில் இருக்க இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பை ஏற்றார் டூப்ளசிஸ். டாஸ் மிக முக்கிய காரணியாக இருக்குமென்று நினைக்கப்பட்ட போட்டியில் டாஸை வென்று டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் களமிறங்கினர். ஆனால், அவர்களுக்குக் காத்திருந்ததோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கடந்த சில போட்டிகளாகவே எதிரணிகளை கலங்கடித்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா, வெறும் 5 ரன்களில் நடையைக்கட்டினார். கொஞ்ச நேரம் அதிரடி காட்டிய வில் ஜாக்ஸும் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் ரிக்கெல்டனும் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

58 ரன்களுக்கே 3 விக்கெட்டுகள் பறிபோக இனி மும்பை அணி அவ்ளோதான் என நினைத்தால், அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது என நங்கூரமாக நின்றது சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா ஜோடி. என்னதான் அதிரடி மன்னன் சூர்ய குமார் களத்தில் இருந்தாலும் ரன்கள் அவ்வளவாக வரவே இல்லை. டெல்லி அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவும், விப்ராஜ் நிகாமும் ரன் வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தி அசத்தினார்கள்.

இது மும்பை இந்தியன்ஸ்

நிதானமாக விளையாடி வந்த திலக் வர்மா 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 114 ரன்களே எடுத்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 3 ரன்னில் நடையைக்கட்ட 17 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப நிலையில் இருந்தது மும்பை அணி. ஆட்டத்தின் 18 ஆவது ஓவர் வரை கிட்டதட்ட எல்லாமே டெல்லி அணிக்கு சாதகமாகவே இருக்க, கடைசி இரண்டு ஓவர்களில் எல்லாமே மாறிப்போனது.

மும்பை அணி அடுத்த இரண்டு ஓவரில் 30 ரன்கள் எடுத்தாலும் 160 ரன்களை கூட தாண்டாது என்றுதான் எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால், சூர்ய குமார் யாதவும், நமன் தீரும் சேர்ந்து காட்டிய வானவேடிக்கையில் வான்கடே மைதானமே அதிர்ந்தது. ஆம், முகேஷ் குமார் வீசிய 19 ஆவது ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சூர்ய குமார் அடுத்த பந்தில் சிங்கில் எடுத்தார். அதுவரை பூனையாக இருந்த நமன் தீர் புலியாக மாறி சரவெடியாக வெடித்துத் தள்ளினார். ஆம், இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசி மும்பை ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்தார். முதல் 3 ஓவர்களை சிறப்பாக வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த முகேஷ் குமார், தன்னுடைய கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்களை வாரிக்கொடுத்து டெல்லி அணிக்கு தலைவலியாக மாறிவிட்டார்.

‘போன ஓவரில் நீ அடிச்சியா இந்த ஓவரை நான் எடுத்துக்கிறேன்’ என்று கடைசி ஓவரில் பொளந்துகட்டினார் சூர்ய குமார். இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் பறக்கவிட்ட சூர்ய குமார் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். 18 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எட்டி ’இதுதாண்டா மும்பை அணி’ என்று கெத்தாக நின்றது. சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 குவித்து தனி ஒருவனாக மிரட்டிவிட்டார். கடைசி நேரத்தில் எட்டே பந்துகளை சந்தித்த நமன் தீர் 24 ரன்கள் குவித்து அவருக்கு துணையாக நின்றார்.

சரிந்த டெல்லி கேப்பிடல்ஸ்

முதல் இன்னிங்ஸில் 90 சதவீதம் ஆட்டம் வரை முழு எனர்ஜியும் டெல்லி அணியின் பக்கமே இருக்க, கடைசி இரண்டு ஓவர்களில் மொத்த எனர்ஜியும் மும்பை அணி பக்கம் சாய்ந்தது. அந்த எனர்ஜியை அப்படியே பந்துவீச்சில் காட்டியது மும்பை அணி. ஆம், மும்பை வீரர்களின் பந்துவீச்சுக்கு முன்னால் டெல்லி அணி வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எல்லோரும் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

கேப்டன் டூப்ளசிஸ் 6 ரன், கே.எல்.ராகுல் 11 ரன்னில் நடையைக்கட்ட அபிஷேக் போரலும் 6 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். 27 ரன்னில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற சமீர் ரிஸ்வியும், விப்ராஜ் நிகமும் சற்று நேரம் சமாளித்தார்கள். ஆனால், விப்ராஜ் நிகாம் 20 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்டப்ஸும் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். நன்றாக ரன்களை சேர்த்து வந்த ரிஸ்வி 39 ரன்களில் ஆட்டமிழக்க, அஸுதோஷ் சர்மாவும் 18 ரன்னில் நடையைக்கட்டினார். பும்ராவும், சாண்ட்னரும் ரன்களை அப்படியே கட்டுப்படுத்தி விக்கெட்டுக்களையும் அள்ளினார்கள். 121 ரன்களுக்கு டெல்லி அணி ஆல் அவுட் ஆக, 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கெத்தாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை அணியில் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3.2 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினார்கள். இக்கட்டான நேரத்தில் அரைசதம் விளாசிய சூர்ய குமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே குஜராத், பஞ்சாப், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், நான்காவது அணியாக மும்பை அணி உள்ளே நுழைந்துள்ளது. மும்பை அணி பிளே ஆஃப் சென்றுவிட்டால் கிட்டதட்ட கப்பை நெருங்கிய மாதிரிதான். ஏற்கனவே 5 கோப்பைகளை தன்வசம் வைத்திருக்கும் மும்பை அணி 6வது கோப்பையை தட்டித்தூக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.