இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் 10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
தொடர் தோல்வி காரணமாக ரசிகர்கள் தோனியின் மீதும் அணியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் அவர், அணிக்காகவே விளையாடுவதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், அவரது ஆட்டம் அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தருவதால் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் அவர் மீது நிறைய விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டனாக உள்ள ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் நிலையில், தோனி மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நாளை நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்கும் எனத் தெரிகிறது. தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
தோனி தலைமையில் சென்னை அணி, இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்கு கேப்டனாக இருந்தபோதும், அந்த அணி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, கடைசிக்கட்டத்தில் தோனியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.