MS Dhoni
MS Dhoni Twitter
T20

கையில் பகவத் கீதையுடன் மும்பையில் தோனி? - மருத்துவ ஆலோசனை பெறப்போவதை உறுதிசெய்த சிஎஸ்கே சிஇஓ!

சங்கீதா

சாதாரண மனிதர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைவருக்குமே உடல் நிலை நல்ல நிலையில் இருப்பது என்பது எக்காலத்திலும் முக்கியமானது. அதிலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டில், உடற்தகுதி இருந்தால் மட்டுமே வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு அணியில் உறுதி செய்யப்படும். 35 வயதை நெருங்கிவிட்டாலே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள் ஏராளம். ஆனால், சொற்ப வீரர்களே அதையெல்லாம் முறியடித்து 40 வயதிலும் ஜொலிப்பர்.

MS Dhoni

அந்தவகையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 41 வயதிலும், விக்கெட் கீப்பிங்கில் ஆகட்டும், ஃபீல்டிங் மற்றும் கேப்டன்ஷிப் ஆகட்டும், அவருக்கு நிகர் அவரே என்பதை நிரூபித்து வருகிறார். அதற்கு உதாரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை சொல்லலாம். நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட போதிலும், லீக் உள்பட அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று அணியை வழிநடத்தி, 5-வது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை பெற்று தந்தார் கேப்டன் தோனி. இந்த சீசன் முழுவதுமே தனது உடல்நிலை சற்று ஒத்துழைக்கவில்லை என்பதை நேரடியாகவே போட்டி முடிந்தப் பின்பு சொல்லியும் வந்தார்.

இந்நிலையில் கோப்பை வென்ற கையோடு எம்.எஸ். தோனி மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்களுக்காக பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும், பரிசோதனையின் முடிவிற்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக அதனை மேற்கொள்ள உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், அதனை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி அவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பையில் உள்ள விளையாட்டு எலும்பியல் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து, தேவையான ஆலோசனைகளைப் பெற உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

kasi Viswanathan-MS Dhoni

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “தோனி தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கேற்ப முடிவெடுக்க உள்ளார். அதுகுறித்து வெளியான தகவல் உண்மைதான். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யச்சொல்லி அறிவுறுத்தினால், பரிசோதனையின் முடிவுகளுக்கு ஏற்ப, அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தோனியே முடிவு செய்வார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மினி ஏலத்திற்கு முன்னதாக அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து தோனி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதா என்று அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு, “வெளிப்படையாக சொல்லப்போனால், இன்னும் அந்த ஸ்டேஜ்க்கு (Stage) நாங்கள் செல்லவில்லை என்பதால், அதுபற்றி எதுவும் தற்போது சிந்திக்கவில்லை. அதுமட்டுமின்றி அது முழுவதுமாக தோனியின் முடிவாகவே இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

dhoni

5-வது ஐபிஎல் கோப்பை பெற்றப் பிறகு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன், வீரர்களிடம் உரையாற்றினாரா என்றும், கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளதா என்றும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்.சீனிவாசன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், ஆனால் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெற இல்லை. அகமதாபாத்தில் இருந்து வீரர்கள் அவரவர் இடங்களுக்கு சென்றுள்ளனர். நீங்கள் சிஎஸ்கே அணியைப் பார்த்திருந்தால் தெரியும், நாங்கள் ஒருபோதும் கொண்டாட்டங்களில் பெரிதாக ஈடுபட்டதாக பார்க்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னணி வீரர்கள் காயங்களுடன் காணப்பட்டாலும், ஐந்தாவது ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அணியின் ஒட்டுமொத்த உத்வேகமே அது எல்லாத்துக்கும் காரணம். அத்துடன் எங்களது அணியில், ஒவ்வொரு வீரரும் அவர்களது பங்கை அறிந்து, அதற்கேற்றவாறு விளையாட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அணியில் புதிதாக வந்த பென் ஸ்டோக்ஸ் கூட அணியில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார். இவையெல்லாமே எங்கள் அணியின் கேப்டனால் சாத்தியமானது” என்று அவர் தெரிவித்தார்.

MS Dhoni-Ravindra Jadeja

மேலும், 14 சீசனில் 11 முறை இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி வந்துள்ளதற்கான தனி சிறப்பான காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், “ஐபிஎல் தொடர் ஆரம்பித்த சீசன் 1-லிருந்து நான் சிஎஸ்கே அணியுடன் இணைந்திருக்கிறேன், எங்களது செயல்முறையிலிருந்து நாங்கள் ஒருபோதும் விலகவில்லை. செயல்முறைகளை எளிமையாக வைத்துக்கொள்வோம். அத்துடன் ஒவ்வொரு வீரரிடமிருந்தும், என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை விளக்குவதே முக்கியமானது. எங்களது அணியில், கேப்டன் எல்லாவற்றையும் சிக்கலில்லாமல் வைத்திருக்கிறார்” என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

அதற்கேற்றவாறு மும்பையில் பகவத் கீதை படித்துக்கொண்டு காரில் தோனி பயணிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. நேற்றே அவர் மும்பை சென்றுவிட்டதாகவும், இன்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இடது முழங்காலில் ஏற்கட்ட காயம் காரணமாக முழு ஐபிஎல் சீசனையும் முழங்கால் கேப்புடனே (Knee cap and strap) தோனி விளையாடினார். கீப்பிங் செய்யும் போது அந்த வலி அவருக்கு பெரிதாக இல்லையென்பதுபோல் தெரிந்தாலும், பேட்டிங் செய்யும்போது தாமதமாக அதாவது 8-வது வீரராகவே பொதுவாக களமிறங்கினார். எனினும், ரன்கள் எடுக்க ஓடும்போது அவர் இயல்பாக இல்லை என்பதை கவனிக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.