கோடை வெயிலைக் குளிர்விக்கும் விதமாக ஐபிஎல் தொடரின் 18வது சீசன், நேற்று கொல்கத்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகும் இந்த ஐபிஎல் தொடரில், இன்றைய போட்டியில் சென்னை அணி, மும்பையைச் சந்திக்க இருக்கிறது. இந்தப் போட்டியிலும் ’தல’ தோனி களம் காண இருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடியிருக்கிறது. இதற்கிடையே தோனி, ”CSK அணிக்காக நான் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாட முடியும்” எனச் சொல்லியிருப்பது அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜியோ ஹாட்ஸ்டாரில் நடைபெற்ற உரையாடலின்போது தோனி, "CSK அணிக்காக நான் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாட முடியும். அதுதான் என்னுடைய உரிமை. நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும், அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “அவர் 43 வயதில் என்ன செய்கிறாரோ, அதைச் சிறப்பாகச் செய்வார். அவர், எங்களுக்கு முக்கியமான இன்னிங்ஸை தொடர்ந்து வழங்குவார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. சச்சின் டெண்டுல்கர்கூட 50 வயதில் இப்போது எவ்வளவு சிறப்பாக பேட்டிங் (மாஸ்டர்ஸ் லீக்கில்) செய்கிறாரோ, அவ்வளவு சிறப்பாக தோனியும் பேட்டிங் செய்கிறார். எனவே தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
எம்எஸ் தோனி 2020இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அதன் பின்னர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.