நிச்சயம் இதற்குமுன்பு பார்த்த முகமது சிராஜ் இல்லை, தற்போது இருப்பது. அதே ஆக்ரோஷம் இருக்கவே செய்கிறது அவரிடத்தில். ஆனால், பந்துவீச்சில் ஒரு துல்லியமும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியும் சிராஜ் உடல்மொழி முழுவதும் நிரம்பி இருக்கிறது. தான் யார் என்று உலகத்திற்கு நிரூபித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் நடப்பு ஐபிஎல் சீசனில் சூறாவளியாக பந்துவீசி விக்கெட்டுக்களை அள்ளி வருகிறார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சிராஜ். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் அவர் உதிர்த்த வார்த்தைகளதான் அவர் மனதில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களை நமக்கு வெளிக்காட்டியது. என்ன நடந்தது? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என மொத்தமாக 89 போட்டிகளில் விளையாடியிருக்கும் முகமது சிராஜ், பல்வேறு மதிப்புமிக்க போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையைப் பெற்றுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் பங்கேற்றது அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். இந்தியா வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று ஆதிக்கம் செலுத்தியதற்கு முகமது சிராஜும் ஒரு முக்கியக் காரணியாக இருந்துள்ளார். மிக சமீபத்தில், 13 வருட காத்திருப்புக்குப் பின் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற முக்கியமான பங்கெடுப்பில் சிராஜும் இடம்பெற்றிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அவரது சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தெலங்கானா அரசு சிராஜ்-க்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை வழங்கி கௌரவித்தது. தெலங்கானாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியை அதிகாரப்பூர்வமாக கடந்த அக்டோபர் மாதம் ஏற்றுக்கொண்டார். இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வீரராக வலம் வந்த சிராஜ்-க்கு முக்கியமான இரண்டு காயங்கள்தான் அவரைப் பாதித்திருக்க வேண்டும். ஒன்று ஆர்சிபி அணியில் இருந்து வெளியேற்றியது. மற்றொன்று சாம்பியன்ஸ் டிராபி பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதது.
இந்திய அணியைப் பொறுத்தவரை ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய மூவருமதான் பிரைம் டைம் வேகப்பந்து வீச்சாளர்கள். இதில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. ஆனால், ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதில் இளம் வீரர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் ஜெய்ஸ்வாலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். அகமதாபாத்தில் நடந்த தேர்வாளர்கள் கூட்டத்தில் அகர்கர், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனையின் முடிவில் ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடுபவர்கள். எனவே, வீரர்கள் தேர்வில் கம்பீரின் ஆதிக்கம் அதிமாக இருக்கிறதோ என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பினர். ஏனென்றால், அனுபவம் வாய்ந்த சிராஜ் ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டார்.
முகமது ஷமி, ரானா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய சீனியர்களின் கூட்டணியுடன் இந்திய அணி களமிறங்கியது. இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 24.04 என்பதை சராசரியாக வைத்து 71 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2023ஆம் ஆண்டில் ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடமும் பிடித்திருந்தார். அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர். இத்தகைய வீரரைத் தேர்வு செய்யாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இருப்பினும், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை தட்டித் தூக்கியதால் அந்த விமர்சனங்கள் காணாமல் போனது.
ஐபிஎல் அணியைப் பொறுத்தவரை மொத்தம் மூன்று அணிகளில் விளையாடியுள்ளார் சிராஜ். முதலில் 201ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகன் இத்தனை கோடிகளுக்கு ஏலம் போனார் என அப்பொழுது செய்திகளில் பேசப்பட்டது. முதல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுக்களை சாய்த்தார். 2018 முதல் 2024 வரை கிட்டதட்ட 7 ஆண்டுகள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார் சிராஜ். விராட் கோலி அளவிற்கு இல்லையென்றாலும் ஆர்சிபி அணியின் முகங்களில் ஒருவராக கடந்த ஆண்டு வரை பார்க்கப்பட்டார். அந்த அணிக்காக மொத்தம் 87 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இதில் அதிகப்பட்சமாக 2023ஆம் ஆண்டு சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இத்தகைய சூழலில்தான் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் சிராஜ். சிராஜ், சாஹல் போன்றோர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது. இத்தகைய சூழலில்தான் குஜராத் டைட்டன்ஸ் அணி சிராஜ்ஜை ரூ12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
12 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டிருந்தபோது பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டி சிராஜ்-க்கு மோசமாகவே அமைந்தது. ஆம் அந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 3 சிக்ஸர்கள், 7 பவுண்டர்கள் விளாசப்பட்டது. இதன் பிறகு மீண்டு வந்தார் சிராஜ். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இருந்துதான் விஸ்வரூபம் எடுத்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ரியன் ரிக்கெல்டன் ஆகியோரை க்ளீன் போல்ட் ஆக்கி அசத்தினார். பவர் பிளேயில் தன்னுடைய ஆதிக்கத்தை இந்தப் போட்டியில் இருந்துதான் தொடங்கினார். அடுத்த போட்டிதான் மிகவும் உணர்வுபூர்வமான போட்டி. 7 வருடங்களாக தான் விளையாடிய ஆர்சிபி அணி. ஆனால், சிராஜ் அந்தப் போட்டியில் கொஞ்சம்கூட கருணை காட்டவே இல்லை. அதிரடியை தொடங்கிய பில் சால்ட்டை க்ளீன் போல்ட் ஆக்கி மிரள வைத்தார். அத்தோடு தேவ்தத் படிக்கலையும் க்ளீன் போல்ட் செய்தார். அரைசதம் அடித்து விளையாடிய லிவிங்ஸ்டன் விக்கெட்டையும் முக்கியமான நேரத்தில் சாய்த்தார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இத்தகைய சூழலில்தான் பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று தரமான சம்பவம் செய்தார் சிராஜ். மீண்டும் பவர் பிளேவில் தான் கெத்து என்பதை நிரூபித்தார். முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை சாய்த்தார். பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா விக்கெட்டையும் எடுத்தார். மொத்தம் நேற்றைய போட்டியில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த சிராஜ், ஆட்ட நாயகன் விருதை மீண்டும் தட்டிச் சென்றார். அத்துடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளையும் கடந்தார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் பேசிய சிராஜ், “ஆர்சிபி அணிக்காக நான் 7 வருடங்கள் விளையாடி இருக்கிறேன். அப்பொழுது என்னுடைய பந்துவீச்சினை மேம்படுத்த கடினமாக உழைத்தேன். அதேபோல், என்னுடைய மனநிலையையும் தயார் செய்தேன். அது எனக்கு மிகவும் உதவியது. ஒரு புள்ளியில், சாம்பியன்ஸ் டிராபி அணிக்காக தேர்வு செய்யப்படாதபோது அதனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனால் மனம் தளராமல் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டு என்னுடைய ஸ்பிரிட்டை கைவிடாமல் கடினமாக உழைத்தேன். என்னுடைய உடற்தகுதியையும் பந்துவீச்சு திறனையும் மேம்படுத்தினேன்” என்றார்.
உண்மையில் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடைக்காததும், ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அவரை வேகம் கொள்ள வைத்திருக்கிறது. உண்மையில் அவருக்கு அது வெற்றிப்படியாகவும் அமைந்துவிட்டது. மொத்தம் 4 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளது இதுவரை 9 விக்கெட் சாய்த்திருக்கிறார் சிராஜ். மீதமுள்ள 10 போட்டிகள் மற்றும் வாய்ப்பிருந்தால் பிளே ஆஃப் பைனல் போட்டிகளில் விளையாடினால் 20 விக்கெட்டுகளுக்கு மேல் அவர் சாய்க்க வாய்ப்பிருக்கிறது. சிராஜ்ஜின் இந்த ஃபார்ம் இந்திய அணிக்கும் நிச்சயம் உதவும்.