Tim David | Tilak Varma
Tim David | Tilak Varma  Shashank Parade
T20

MIvRR | எல்லாமே ஃபுல் டாஸாவா போடறது... டேவிட் சிக்ஸ் மழையில் மும்பை வெற்றி..!

ப.சூரியராஜ்

ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் மெக்கல்லம் அடித்த சிக்ஸர்கள் எல்லாம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. இதோ, நேற்றிரவு ஐ.பி.எல்லின் ஆயிரமாவது போட்டியே நடந்து முடிந்துவிட்டது. 2008-ல் டெக்கான் சார்ஜர்ஸில் ஆடிய ரோகித்தும், கிங்ஸ் லெவனில் பஞ்சாப்பில் ஆடிய சாவ்லாவும் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியில். இரண்டில் ஒரு அணி இப்போது இல்லவே இல்லை, இன்னொன்று பெயர் மாறிவிட்டது. நினைத்துப் பார்க்கையில், `எனதருமை ஐ.பி.எல். உன்னைப் பற்றி நினைக்கையில் எத்தனை சுகமான நினைவுகள்' என்றுதான் தோன்றுகிறது. ஆர்.சி.பி ரசிகர்களுக்கு எப்படி தோன்றுகிறதென கேட்டுப்பார்க்க வேண்டும்!

1000th Indian Premier League cricket match

நேற்றிரவு, ஐ.பி.எல்லின் ஆயிரமாவது போட்டி மட்டுமல்ல, ரோகித்தின் பிறந்தநாளும் கூட. ஸ்டைல் பாண்டியின் நூறாவது திருட்டை விமரிசையாகக் கொண்டாடும் அண்ணனின் விழுதுகளைப் போல் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், அர்ஜூன் டெண்டுல்கர் ஆகியோர் கொண்டாட காத்திருந்தார்கள். கணித்துவிட்ட ரோகித், சின்னவரை லெவனிலிருந்து தூக்கினார். டாஸ் ஜெயித்த ராஜஸ்தான், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

ஜோஸ்-வால் ஜோடி ஓபனிங் இறங்க, முதல் ஒவரை வீசவந்தார் க்ரீன். `இது எங்க சின்னவர் வீச வேண்டிய ஓவர்' என விசும்பினார்கள் மும்பை இந்தியன்ஸின் சச்சின் பிரிவு ரசிகர்கள். ஓவரின் 4வது பந்து, சிக்ஸருக்கு பறந்தது. ஆர்ச்சர் வீசிய 2வது ஓவரில், நோ பால் சிக்ஸர் ஒன்று அடித்தார் ஜெய்ஸ்வால். க்ரீனின் 3வது ஓவரில், ஜெய்ஸ்வால் இன்னொரு பவுண்டரி தட்டினார். ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில், பட்லர் தனது முதல் பவுண்டரியை விளாசினார். அதே ஓவரில் லெக் பைஸில் ஒரு பவுண்டரியும், பட்லரிடமிருந்து இன்னுமொரு பவுண்டரியும் கிடைத்தது. மெரிடித்தின் 5வது ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரிகளுடன் சேர்த்து 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால். சாவ்லா வீசிய 6வது ஓவரின் கடைசிப்பந்தும், சிக்ஸருக்கு தெறிக்கவிட்டார் ஜெய்ஸ்வால். பவர்ப்ளேயின் முடிவில் 65/0 என சிறப்பாக தொடங்கியிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Yashasvi Jaiswal | Jos Butler

7வது ஓவரை வீசவந்தார் கார்த்திகேயா. `இந்தா வாங்கிக்கோயா' என ஒரு சிக்ஸரை விளசினார் பட்லர். சாவ்லாவின் 8வது ஓவரில், பட்லர் அவுட்! அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன், முதல் பந்திலேயே சிக்ஸருக்கு பறக்கவிட்டார். மும்பை ரசிகர்கள் மிரண்டுவிட்டார்கள். கார்த்திகேயா வீசிய 9வது ஓவரில், சாம்சன் ஒரு பவுண்டரி அடித்தார். அர்ஷாத் கானை அழைத்துவந்தார் ரோகித். தில் ஸ்கூப்பில் ஒரு பவுண்டரி அடித்தார் ஜெய்ஸ். இன்னொரு பக்கம், டீப் மிட் விக்கெட்டில் ஈஸி கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் கேப்டன் சாம்சன். 10 ஓவர் முடிவில் 97/2 என ஆடிக்கொண்டிருந்தது ராயல்ஸ்.

சாவ்லாவின் 10வது ஓவரில், ஒரு பவுண்டரி தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ஜெய்ஸ்வால். அதே ஓவரில், படிக்கல்லை அவுட்டாக்கி ராயல்ஸ் இன்னிங்ஸின் நடுவே தடை கல்லை தூக்கிப்போட்டார் சாவ்லா. 12வது ஓவரை வீசவந்தார் மெரிடித்! மீண்டும் இரண்டு பவுண்டரிகள் அடித்து, `இன்று போய் நாளை வா' என அனுப்பிவைத்தார் ஜெய்ஸ்வால். சாவ்லாவின் 13வது ஓவரில், தடைக்கற்கள் எல்லாவற்றையும் சிக்ஸர், பவுண்டரி என அடித்து உடைத்தார் ஜெய்ஸ். 14வது ஓவரை வீசவந்தார் க்ரீன். இம்முறை ஹோல்டர் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். அதே ஓவரில் ஜெய்ஸ்வாலும் ஒரு பவுண்டரி அடித்தார். ஆர்ச்சரின் 15வது ஓவரில், ஹோல்டர் அவுட். லாங் ஆஃபில் இருந்து டேவிட்டிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அந்த ஓவரில் 1 விக்கெட்டும் வீழ்ந்து 1 ரன் மட்டுமே கிடைத்தது. மீண்டும் வந்தார் மெரிடித். இம்முறை சிக்ஸர் அடித்தார் ஜெய்ஸ்வால்.

Yashasvi Jaiswal

17வது ஓவரை வீசிய அர்ஷாத், ஹெட்மயருக்கு ஒரு சிக்ஸரை கொடுத்துவிட்டு அடுத்த பந்திலேயே விக்கெட்டை சாய்த்தார். டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் எடுத்தார் சூர்யகுமார் யாதவ். அதே ஓவரின் கடைசிப்பந்து, ஸ்கூப்புல் ஷாட்டில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் ஜெய்ஸ். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும், இன்னொரு பக்கம் ஜெய்ஸ்வாலை என்ன செய்வதென புரியாமல் ரோகித் தொப்பியை கழட்டுவதும், தலையை சொரிவதுமாக இருந்தார். மெரிடித்தின் 18வது ஓவரில், இளம் புயல் ஜுரேல் அவுட். அதே ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார் ஜெய்ஸ்வால். 53 பந்துகளில் சதம்! இன்னும் வந்த வேலை முடியவில்லை என்பதுபோல், அடுத்த பந்திலும் ஒரு பவுண்டரியைத் தட்டினார்.

19வது ஓவரை வீசினார் ஆர்ச்சர். தொடர்ந்து இரு சிக்ஸர்கள் பறந்தது. கடைசி ஓவரின் முதல் பந்து, சிங்கிள் தட்டி ஜெய்ஸ்வாலுக்கு ஸ்டிரைக் கொடுத்தார் அஸ்வின். தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளையும் விரட்டினார் ஜெய்ஸ். ஆனால், அடுத்த பந்திலேயே இடுப்பு உயரத்திற்கு ஃபுல் டாஸாக வந்த பந்தை கொடியேற்றி பவுலரிடமே கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 62 பந்துகளில் 124 ரன்கள் எனும் அதி அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து அதே ஓவரில், அஸ்வின் ஒரு பவுண்டரி அடிக்க 212/7 என சிறப்பாக இன்னிங்ஸை முடித்தது ராயல்ஸ். சின்னவர் மட்டும் டீம்ல இருந்திருந்தா...' என வருத்தபட்டார்கள் பல்தான்கள்.

Cameron Green

துருவ் ஜுரேலுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் குல்தீப் சென். பர்த்டே பாய் ரோகித்தும், பாக்கெட் டைனமைட் கிஷனும் மும்பை இந்தியன்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, `முதல் ஓவர் முத்துப்பாண்டி' போல்ட், முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை கொடுத்தார் கிஷன். 2வது ஓவரை வீசிய சந்தீப், கடைசிப்பந்தில் ரோகித்தின் விக்கெட்டைத் தூக்கினார். சந்தீப் வீசிய பந்து அழகாய் பெய்லை மட்டும் தட்டிவிட்டது. போல்ட்டின் 3வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் க்ரீன். சந்தீப்பின் 4வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அஸ்வின் வீசிய 5வது ஓவரின் கடைசிப்பந்தில், க்ரீன் ஒரு சிக்ஸர் விளாசினார். சந்தீப்பின் அடுத்த ஓவரில் கிஷன் ஒரு பவுண்டரியும், க்ரீன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். பவர்ப்ளேயின் முடிவில் 58/1 என ஆடிக்கொண்டிருந்தது மும்பை.

அஸ்வின் வீசிய 7வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. சஹலின் 8வது ஓவரில், க்ரீன் ஒரு சிக்ஸரும், கிஷன் ஒரு பவுண்டரியும் அடித்தனர். அடுத்த ஓவரை வீசிய அஸ்வின், கிஷனின் விக்கெட்டைக் கழட்டினார். 23 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணியையும் கஷ்டபடுத்தி, தானும் கஷ்டபட்ட அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து களமிறங்கிய ஸ்கை, முதல் பந்திலேயே டீப் ஃபைன் லெக் திசையில் ஸ்வீப் ஆடி ஒரு சிக்ஸர் அடித்தார். ஹோல்டரின், 10வது ஓவரில் ஸ்கை ஒரு ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். ஓவர் முடிவில் 98/2 என தெம்பாக துரத்திவந்தது மும்பை.

Suryakumar Yadav

மீண்டும் வந்தார் அஸ்வின். 11வது ஓவரில், க்ரீன் விக்கெட்டைத் தூக்கினார். கவ் கார்னரில் போல்ட்டை நிறுத்தி கேட்ச் எடுத்தனர். சஹல் வீசிய 12வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. 13வது ஓவரை வீசினார் இம்பாக்ட் வீரர் குல்தீப் சென். முதல் பந்து சிக்ஸர், அடுத்து இரண்டு பந்துகள் பவுண்டரி! அடுத்த பந்து நோ பாலாகி அதிலும் ஒரு பவுண்டரி என வறுத்தெடுத்தார் ஸ்கை. ஒரே ஓவரில் 20 ரன்கள்.

14வது ஓவரை வீசவந்த சஹலையும் பவுண்டரியுடன் தொடங்கினார் ஸ்கை. திடீரென வெறியான திலக் வர்மா, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என சஹலை ஓடவிட்டார். 36 பந்துகளில் 72 ரன்கள் தேவை. ஹோல்டரின் 15வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 9 ரன்கள் கிடைத்தது. போல்ட்டின் 16வது ஓவரில், அசாத்தியமான கேட்சை எடுத்து சூர்யகுமாரின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்தார் சந்தீப் சர்மா. கிட்டதட்ட பந்தின் பின்னாலேயே 19 மீட்டர்கள் ஓடி, பாய்ந்து பிடித்தார். அற்புதமான கேட்ச்! ஹோல்டர் வீசிய 17வது ஓவரில், முதல் பந்தை பவுண்டரிக்கு தட்டினார் திலக். 4வது பந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டிம். 18 பந்துகளில் 43 ரன்கள் தேவை.

18வது ஓவரை வீசினார் போல்ட். மீண்டும் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் திலக். கடைசிப்பந்தில், இன்னொரு பவுண்டரி அடித்தார் டிம். 12 பந்துகளில், 32 ரன்கள் தேவை. 19வது ஓவரை வீசினார் சந்தீப் சர்மா. 2வது பந்தை 84 மீட்டருக்கு ஒரு சிக்ஸர் அடித்தார் சிங்கப்பூரான் டிம் டேவிட். அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்தார். ஒரே ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இன்னும் 6 பந்துகளில் 17 ரன்கள் தேவை! கடைசி ஓவரை வீசினார் ஹோல்டர். வேலை சிம்பிளாக முடிந்தது. வீசிய முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு மேட்சை முடித்தார் டேவிட். அண்ணனின் விழுதுகள், ரோகித்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி முடித்தார்கள். 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது மும்பை. முந்தைய மேட்சில், கான்வேவுக்கும் அதற்கு முந்தைய மேட்சில் மார்ஷுக்கும் கொடுத்ததைப் போல, இந்த மேட்சில் ஜெய்ஸ்வாலுக்கு ஆறுதல் பரிசாக ஆட்டநாயகன் பரிசைக் கொடுத்து பத்திவிட்டார்கள். `என்ன பாஸ், விட்டுட்டு போறீங்க' என டெல்லி, ஐதராபாத் அணி மும்பையிடம் வருத்தபட்டார்கள்.