Venkatesh Iyer
Venkatesh Iyer  Kunal Patil
T20

MIvKKR |மும்பையிடம் 'வழக்கம் போல' கொல்கத்தா தோல்வி..!

Nithish

'கலகலப்பு' படத்தில் தன்னை பெரியாளாய் காட்டிக்கொள்ள ஆள் செட் செய்து தினமும் அடித்து வெளுப்பாரே சந்தானம், அப்படித்தான் மும்பைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மொத்தத் தொடரையும் கேவலமாய் விளையாடினாலும் கொல்கத்தாவை மட்டும் விரட்டி விரட்டி அடித்து பாயின்ட்ஸ் தேற்றிக்கொள்ளும் மும்பை. ஒரு பெரிய இடைவேளைக்குப் பின் கடந்த சீசனில்தான் மோதிய இரண்டு போட்டிகளையும் வென்றது கொல்கத்தா. இந்தமுறை அதைவிட மோசமான மும்பை டீம் ஒருபக்கம், சில திடுக் வெற்றிகளை பெற்ற கொல்கத்தா மறுபக்கம் என சண்டே மேட்னி சினிமாவைப் போல போரடிக்கும் மேட்ச்சாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் நடந்ததோ வேறு.

Arjun Tendulkar

மும்பை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியும் ஒரு ஆனந்த அதிர்ச்சியும். அதிர்ச்சி - ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராய் வெளியே அமர, சூர்யகுமார் யாதவ்தான் கேப்டன். ஆனந்த அதிர்ச்சி - இலவு காத்த கிளியாய்க் காத்திருந்தது நடந்தேவிட்டது. அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் ஐ.பி.எல் போட்டி. பெவிலியனில் அப்பா அமர்ந்து பார்க்க, பிள்ளை பவுலிங் போட, கிரிக்கெட்டைக் கொண்டாடும் மும்பைக்கு இது நெகிழ்ச்சித் தருணம். ஐ.பி.எல்லில் ஆடியிருக்கும் முதல் தந்தை - மகன் இணை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர்கள் ஆனார்கள் இருவரும். இதுதவிர அணியில் இரண்டு மாற்றங்கள். அர்ஷத்துக்கும் பெஹ்ரண்டாஃப்புக்கும் பதில் டிம் டேவிட்டும் டுயான் யான்சனும். கொல்கத்தா வெற்றிப்பாதையில் இருப்பதால் ப்ளேயிங் லெவனில் மாற்றங்களில்லை.

டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதல் ஓவர் அர்ஜுன் டெண்டுல்கர். ஐ.பி.எல் போன்ற மெகா மேடையில் பவர்ப்ளேயில் அதுவும் முதல் ஓவரை வீச எக்கச்சக்க மனதைரியம் வேண்டும். ஆனால் ஸ்விங் கொஞ்சம் சுட்டித்தனம் கொஞ்சமுமாய் தன் முதல் ஓவரை மிக நன்றாகவே போட்டார் அர்ஜுன். முதல் ஓவரில் ஐந்தே ரன்கள். க்ரீன் வீசிய அடுத்த ஓவரில் ஜெகதீசன் தொட்ட பந்தை முன்னே பாய்ந்து பிடித்தார் ஷோகீன். ஜெகதீசன் டக் அவுட். கே.கே.ஆரின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் காங்கிரஸ் கோஷ்டிகளைப் போல. ஒட்டவே ஒட்டாது. 2022-லிருந்து ஓபனிங் பார்ட்னர்ஷிப்பின் ஆவரேஜ் வெறும் 15 ரன்கள்.

Mumbai Indians

கொல்கத்தாவின் ஆஸ்தான ஒன்டவுன் பிளேயராகிவிட்டார் வெங்கடேஷ் ஐயர், ஃபார்ம்தான் காரணம். இந்தப் போட்டியிலும் வந்தவுடன் அர்ஜுனின் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து கணக்கைத் தொடங்கினார். க்ரீனின் அடுத்த ஓவரிலும் அதே! கடந்த சீசனில் அவரின் உடல்மொழியில் தெரிந்த சந்தேகமும் தடுமாற்றமும் இந்த சீசனில் அறவே இல்லை. அணியில் அவரின் ரோல் நன்றாகவே வரையறுக்கப்பட்டுவிட்டது போல. பயமே இல்லாமல் இறங்கிவந்து சாத்துகிறார். டுயான் யான்சன் போட்ட ஐந்தாவது ஓவரில் அப்படி இறங்கி வந்து இரண்டு சிக்ஸ்கள்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு வயதே ஆவதில்லை என்பார்களே. அவருக்குப் போட்டியாய் பியூஷ் சாவ்லாவை இறக்கலாம். ஆதாம் கிரிக்கெட் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து லெக் ஸ்பின் போட்டுக்கொண்டிருக்கும் பியூஷ் ஆறாவது ஓவரில் பொறுப்பாய் குர்பாஸை பெவிலியன் அனுப்பி வைத்தார். ஸ்கோர் 57/2. கேப்டன் நிதிஷ் ரானா இப்போது களத்தில். அவர் செட்டிலாக டைம் எடுத்துக்கொள்ள அவருக்கும் சேர்த்து அந்தப்பக்கம் பந்தை பவுண்டரி லைன் தாண்டி அனுப்பிக்கொண்டே இருந்தார் வெங்கி. ஷோகீன் வீசிய பந்தை டைமிங் மிஸ் செய்ய அது ரமன்தீப் சிங் கையில் தஞ்சமடைந்தது. சும்மா போனவரை ஷோகீன் ஏதோ சொல்ல, சண்டைக்கு வந்தார் ரானா. சீனியர்கள் சாவ்லாவும் சூர்யாவும் வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். 'என் பங்காளியவா வம்பிழுக்கிற?' என அந்த ஓவரில் வெங்கி மீண்டும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி. அரைசதம் தொட்டார்.

Venkatesh Iyer

ஒரு ஓவர் வெங்கி அடிக்க, அடுத்த ஓவர் சாவ்லா வீசி ரன்னைக் கட்டுப்படுத்த என இப்படியே போயின மிடில் ஓவர்கள். மெரிடித் வீசிய 11வது ஓவரில் இரண்டு சிக்ஸ்கள் உள்பட 14 ரன்கள், யான்சன் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்கள் என சடுதியில் 80களைத் தொட்டார் வெங்கடேஷ். பேட்டிங் ஆர்டரில் ப்ரொமோஷன் வாங்கி வந்த ஷர்துலும் நடையைக் கட்ட, ம்ஹும் வெங்கி எதைப்பற்றியும் கவலைப்படவே இல்லை. யான்சன் வீசிய 17வது ஓவரில் சிங்கிள் தட்டி கே.கே.ஆருக்கு இத்தனை நாளாய் கானலாய் இருந்த செஞ்சுரியை தொட்டார். 2008-ல் ஐ.பி.எல்லின் முதல் ஆட்டத்தில் பெங்களூருவை போட்டுப் பொளந்தாரே மெக்கல்லம். நினைவிருக்கிறதா? அதன்பின் ஒரு கொல்கத்தா பேட்ஸ்மேன் அடிக்கும் இரண்டாவது சதம் இது. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி சார்பாக அடிக்கப்பட்ட இரு சதங்களுக்கு இடையேயான இடைவெளியைக் கணக்கிட்டால் இதுவே அதிகம். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் நாள்கள்.

சதம் அடித்த கையோடு அவர் நடையைக் கட்ட, ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 160/5. ரஸலின் கடைசிநேர அதிரடியில் இரண்டு ஓவர்களுக்கு 25 ரன்கள் வர, 185/6 என்கிற ஆவரேஜ் ஸ்கோரோடு இன்னிங்ஸை முடித்தது கே.கே.ஆர். கடைசி ஐந்து ஓவர்களில் 45 ரன்கள்தான். வான்கடே மாதிரியான ஆடுகளத்தில் இன்னும் 25 ரன்களாவது இருந்தால்தான் டிபெண்ட் செய்வது எளிது.

Ishan Kishan

இம்பேக்ட் பிளேயராய் ஓபனிங் இறங்கினார் ரோஹித். உமேஷ் யாதவின் முதல் ஓவரில் அற்புதமான ஸ்விங் காரணமாக இரண்டே ரன்கள். மொத்த மும்பை இன்னிங்ஸில் இது ஒன்றுதான் அமைதியான ஓவர். அடுத்த ஓவரிலிருந்தே வாணவேடிக்கை காட்டத்தொடங்கினார் இஷான் கிஷன். ஷர்துல் வீசிய இரண்டாவது ஓவரில் மட்டும் 16 ரன்கள். உமேஷ் வீசிய அடுத்த ஓவரில் 17 ரன்கள். 'ஸ்பின்னில் இருவரும் தடுமாறுவார்கள்' என நினைத்து நிதிஷ் ரானா நரைனை அழைத்துவர அவரையும் போட்டு வெளுத்தார்கள். 22 ரன்கள். நான்கே ஓவர்களில் ஸ்கோர் 57/0. சுயாஷ் வந்துதான் போராடி இந்த இணையை பிரிக்கவேண்டியதாய் இருந்தது. டைவ் அடித்து உமேஷ் பிடித்த கேட்ச் ரோஹித்தை பெவிலியன் அனுப்பியது.

ஒன்டவுனில் இறங்கினார் சூர்யா. 'இந்த மேட்ச்சும் டக் அவுட் ஆயிடக்கூடாது ஆண்டவா' என வேண்டிக்கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். 'இந்த தடவை வேற மாதிரி ஆட்டம்' என பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார் சூர்யா. ஓவருக்கு ஒரு பவுண்டரியாவது போய்விடவேண்டும் எனத் தெளிவாய் ஆடிய இந்த ஜோடியை வருண் வந்து பிரித்தார். 25 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த கிஷனைத் தாண்டி ஸ்டம்பில் பாய்ந்தது பந்து. ஸ்கோர் எட்டு ஓவர்கள் முடிவில் 90/2. கொல்கத்தா ஸ்பின்னர்கள் கையில் ஒன்பது ஓவர்கள் இருந்தது. களத்திலிருந்ததோ சூர்யா, திலக் வர்மா என டெக்ஸ்ட்புக் ஷாட்கள் ஆடக்கூடிய, புட்வொர்க் இருக்கக்கூடிய இரு பேட்ஸ்மேன்கள். பின் விக்கெட் எப்படி விழும்? அடுத்த நான்கு ஓவர்களில் மட்டும் 38 ரன்கள்.

Suryakumar Yadav

ரஸல் வீசிய 13வது ஓவரில் ஒரு பவுண்டரியும் சிக்ஸும் அடித்து தான் ஃபார்முக்கு வந்துவிட்டதை சத்தமாய் அறிவித்தார் சூர்யா. அதற்கடுத்த ஓவரில் சுயாஷ் திலக்கை அவுட்டாக்க, வந்தார் டிம் டேவிட். வந்தவுடனே இரண்டும் இமாலய சிக்ஸர்கள். பந்து கூரையைத் தொட்டு தெறித்தது. 15 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 163/3. இதே வேகத்தில் போனால் ரன்ரேட்டை எக்கச்சக்கமாய் மிச்சம் பிடிக்கலாம். ஆனால் சூர்யா 45 ரன்களில் அவுட்டாக சீக்கிரம் முடியவேண்டிய ஆட்டம் மெகா சீரியலின் கடைசி எபிஸோட் போல இழுத்துக்கொண்டே போனது. ஒருவழியாய் 18வது ஓவரின் நான்காவது பந்தில் சிங்கிள் தட்டி இலக்கை எட்டவைத்தார் டிம் டேவிட். மீண்டுமொருமுறை கொல்கத்தாவை அடித்து ஃபார்முக்கு வந்தது மும்பை. இதுவரை இரு அணிகளும் மோதியிருக்கும் 32 போட்டிகளில் 23-ல் மும்பைக்கே வெற்றி. மும்பை அதிகம் வெற்றி சதவீதம் வைத்திருக்கும் எதிரணி சந்தேகமே இல்லாமல் கொல்கத்தாதான். ஆட்டநாயகன் சதமடித்த வெங்கடேஷ்.

ரோஹித், இஷான், சூர்யா, திலக் வர்மா, பியூஷ் சாவ்லா என அனைவரும் தொடரின் முக்கியத் தருணத்தில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது மும்பைக்கு பெரும்பலம். இதே மைலேஜில் இன்னும் ஒன்றிரண்டு வெற்றிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் பியூஷைத் தவிர்த்த பவுலிங் இன்னும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. மறுபக்கம் 'நல்ல அணியா மோசமான அணியா' என யாராலும் கணிக்கமுடியாத ஒரு மீட்டரில் வளையவந்துகொண்டிருக்கிறது கொல்கத்தா. ஓபனிங் பார்ட்னர்ஷிப், ஃபாஸ்ட் பவுலிங் என அந்த அணி முன்னேற வேண்டிய ஏரியாக்கள் ஏராளம் இருக்கின்றன. வீரர்களைத் தாண்டி இப்போது அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் மீது இருக்கிறது ஆயிரம் டன் பிரஷர். இதைப்போல நிறைய தொடர்களை தன் வாழ்க்கையில் பார்த்தவர் என்பதால் அணியை மீட்டுக்கொண்டுவருவார் என நம்பலாம்.