Mitchell Starc
Mitchell Starc BCCI
T20

IPL 2024 | மீண்டும் ஐபிஎல்லில் மிட்செல் ஸ்டார்க்... எந்த அணிக்கு விளையாடுவார்..?

Viyan

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடாமல் இருந்த ஆஸ்திரேலிய சூப்பர் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், அடுத்த ஆண்டு தான் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய சூப்பர் ஸ்டார் பௌலரான மிட்செல் ஸ்டார்க் உலக அரங்கில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியவர். கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார். 2015 உலகக் கோப்பை (22 விக்கெட்டுகள்), 2019 உலகக் கோப்பை (27 விக்கெட்டுகள்) என தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் டாப் விக்கெட் டேக்கராக விளங்கியவர், 2015 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதும் வென்றார். ஐபிஎல் தொடரிலும் பட்டையைக் கிளப்பிய ஸ்டார்க் விளையாடியதை விட அதிக தொடர்களைத் தவறவிட்டார்.

2014ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்டார்க் அந்த அணியின் முக்கிய வீரராக உருவெடுத்தார். அந்த சீசன் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 14 விக்கெட்டுகள் எடுத்தார். ஸ்டார்க்குக்கும் பொல்லார்ட்டுக்கும் இடையே நடந்த சண்டை இன்று வரை ஐபிஎல் தொடரின் மறக்க முடியாத தருணங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. அடுத்த சீசனில் தன் புயல்வேகப் பந்துவீச்சால் சீசனின் சிறந்த பௌலர்களுள் ஒருவராக உருவெடுத்தார் ஸ்டார்க். சீசன் தொடக்கத்தில் காயத்தால் அவதிப்பட்டிருந்தாலும், அதன்பிறகு மிரட்டலாகக் கம்பேக் கொடுத்து 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். துருதிருஷ்ட வசமாக அதுவே அவரது கடைசி ஐபிஎல் சீசனாக அமைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் எதோவொரு காரணத்தால் இந்தத் தொடரைப் புறக்கணித்தார் ஸ்டார்.

அடுத்த ஆண்டு (2016) தன் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் ஸ்டார்க். அந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஸ்டார்க் இருந்திருந்தால் நிச்சயம் அந்த சீசன் கோப்பையை வென்றிருக்கும். 2017 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியிலிருந்து வெளியேறினார் ஸ்டார்க். ஐபிஎல் முடிந்த சில வாரங்களிலேயே சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவிருந்ததால், அதில் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் அவர்.

தொடர்ந்து இரண்டு சீசன்களைத் தவறவிட்ட ஸ்டார்க், 2018 ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுத்தார். அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் 9.4 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது. பெரும் எதிர்பார்ப்போடு அவர் வாங்கப்பட்டிருக்க, மீண்டும் காயம் காரணமாக அந்த சீசனில் இருந்து விலகினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்தார் அவர். 2019 ஐபிஎல் சீசன் முடிந்தவுடனேயே இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடைபெற இருந்ததால், வீரர்களுக்கு அனுமதி கொடுக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா பல கெடுபிடிகள் விதித்தது. உலகக் கோப்பையில் கவனம் செலுத்த அந்த சீசனையும் புறக்கணித்தார் அவர். அடுத்த 3 சீசன்கள் கொரோனா, பபுள் போன்ற காரணங்களால் அவர் விளையாடவில்லை. ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த ஆண்டும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பாட்கேஸ்டில் பேசியிருந்த ஸ்டார்க்கிடம் அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "ஆம், கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்த வருடம் நான் நிச்சயம் பங்கேற்கப் போகிறேன். டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு அது மிகச் சிறந்த தொடராக இருக்கும்" என்று கூறினார் ஸ்டார்க்.

ஸ்டார்க் போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது நிச்சயம் பல அணிகளின் கவனத்தைப் பெறும். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் எப்படியும் ஒருசில வீரர்களை அடுத்த ஏலத்துக்கு முன்பாக ரிலீஸ் செய்வார்கள். அந்தத் தொகையின் மூலம் நிச்சயம் அந்த அணிகளில் சில ஸ்டார்க்கை வாங்க முயற்சிக்கலாம். அவருக்கு 33 வயது ஆகிவிட்டாலும் நிச்சயம் வைட் பால் கிரிக்கெட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருவராக அவரால் விளங்க முடியும். எல்லாம் போக, பந்தை ஸ்விங் செய்யக்கூடிய அதிவேகம் நிறைந்த ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரை எந்த அணி விரும்பாது!