Ipl first match
Ipl first match Screengrabs
T20

IPL தொடக்க போட்டிகள்: மெக்கலம், ப்ராவோ, SKY செய்த சம்பவங்கள்!

Rishan Vengai

ஐபிஎல் தொடர் என்றாலே இறுதி ஓவர் டென்சன், கடைசிகட்ட திக்திக் நொடிகள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத பல போட்டிகள் தொடர் முழுக்கவே இருப்பதால் தான், பல கோடி ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளது IPL. அந்தவகையில் பல சுவாரசியமான போட்டிகள் சில ஐபிஎல் சீசன்களின் முதல் போட்டியாகவே அமைந்து நம் நினைவில் நீங்காத நினைவையும், அற்புதமான போட்டி அனுபவத்தையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளன. அந்தவகையில் ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பான 5 தொடக்க போட்டிகள் கொண்ட தொகுப்பை தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

2008 IPL ஆர்சிபி VS கேகேஆர் : 73 பந்துகளில் 158 ரன்கள் விளாசிய மெக்கல்லம்

ஒரு சிறந்த தொடருக்கான மிகச்சிறந்த தொடக்கம் என்று இந்த போட்டியை தான் சொல்ல வேண்டும். ஐபிஎல் என்ற ஒரு மிகப்பெரிய டோர்னமண்ட்டுக்கான முதல் போட்டியானது, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஒவ்வொரு ஐபிஎல் ரசிகர்களின் மனதிலிருந்து நீங்காமல் இன்றளவும் நீடித்திருக்கும் போட்டியாக இருந்து வருகிறது என்றால், அதற்கு கோலோச்சியவர் ப்ரெண்டன் மெக்கல்லம் என்ற அதிரடி வீரர் தான்.

Brendon McCullum

அவர் தான், டி20 வடிவ கிரிக்கெட் என்பது கொண்டாட்டத்திலேயே அனைவரும் கூடி மகிழும் ஒரு திருவிழாவை போன்றது என்பதை போல், நாலாபுறமும் சிக்சர் மழையை பொழிந்து நிரூபித்துக் காட்டினார். நிரூபித்து காட்டினார் என்பதை விட டி20 கிரிக்கெட் என்பதே போதும், மற்றதெல்லாம் வேண்டாம் என்றளவுக்கு ஐபிஎல் தொடரின் மேல் ஒரு போதையையும், மயக்க நிலையையும் ஏற்படுத்தி கொடுத்தார் என்றால் மறுக்க முடியாது. அந்தளவு இன்னும் அந்த முதல் போட்டி ஐபிஎல் ரசிகர்களின் மனக்கண்ணில் அப்படியே இருக்கும்.

Brendon McCullum

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மெக்கல்லம்-இன் விஸ்வரூப பேட்டிங்கால் 20 ஓவரில் 222 ரன்களை குவித்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரெண்டன் 73 பந்துகளில் 13 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் என விளாசி 158 ரன்கள் குவித்தார். எதிர்த்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 82 ரன்னில் ஆல் அவுட்டாகி 140 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

2011 IPL சிஸ்கே VS கேகேஆர் : சீக்கா மகனின் அபாரமான பேட்டிங்கால் 2 ரன்களில் வெற்றிபெற்ற சென்னை!

2010 கோப்பையை வென்றதற்கு பிறகு நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, கொல்கத்தா அணியை எதிர்கொண்டு விளையாடியது. ஐபிஎல்லின் மற்றொரு சிறந்த கேப்டனாக பார்க்கப்படும் கவுதம் காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி, முதல் ஓவரிலேயே ஓபனர் முரளி விஜயை வெளியேற்றி நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், மறுபுறம் நிலைத்து நின்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்-ன் மகனாகிய அனுராத் ஸ்ரீகாந்த் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 64 ரன்களை அடித்த அவர், சிஎஸ்கே அணியை 153 ரன்களுக்கு எடுத்து செல்வார்.

anuradha srikanth

154 என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணி அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடிய ஜாக் காலிஸ் இன்னிங்ஸிற்கு பிறகு எளிதாகவே வெற்றிபெறும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் 15 ஒவர் முடிவு வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, ஜேக் காலிஸ்ஸும் களத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் காம்பீர், எய்ன் மோர்கன் போன்ற வீரர்கள் இன்னும் பேட்டிங்கிற்கே வராமல் இருந்தனர். இந்நிலையில் போட்டியை தலைகீழாக மாற்றியது ஜாக் காலிஸ் மற்றும் கவுதம் காம்பீர் இருவரின் விக்கெட்டுகள். ஜாக் காலீஸ்ஸை அஸ்வின் வெளியேற்ற, காம்பீரை ரன் அவுட் செய்து வெளியேற்றியது சென்னை அணி. இருப்பினும் கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற இடத்தில் 19ஆவது ஓவரில் 2 சிக்சர்களை அடித்து ஆட்டம் காட்டினார் மனோஜ் திவாரி. 2 சிக்சர்கள், 1 பவுண்டரி என மாறிய 19ஆவது ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாகி வெளியேறினார் திவாரி. இறுதியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது கேகேஆர் அணி.

2015 IPL கேகேஆர் VS மும்பை இந்தியன்ஸ் : 98 ரன்கள் ரோகித் அடித்தும், மும்பைக்கு எதிராக சம்பவம் செய்த சூர்யகுமார் யாதவ்

உண்மையில் சூர்யகுமார் யாதவ் தற்போது இந்திய அணியில் இருக்கும் இடத்திற்கு எந்தளவு மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பெரிய காரணமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாதோ, அதே அளவு பாராட்டானது நிச்சயம் கேகேஆர் அணிக்கும், கவுதம் காம்பீருக்கும் செல்ல வேண்டும் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் சூர்யாவை ஒரு பினிசர் ரோலிற்கு பார்த்து டி20 வடிவத்தின் அதிரடி வீரராக அவர் வருவார் என்ற தனி ரோலை வழங்கியது கேகேஆர் அணி தான். அதற்கு எடுத்துக்காட்டாக 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க போட்டியே சான்றாகும்.

suryakumar yadav

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா, 65 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 98 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வந்த கோரி ஆண்டர்சன் அதிரடி காட்டி அரைசதம் அடிக்க 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதை தூறத்திய கேகேஆர் அணி கேப்டன் காம்பீர் மற்றும் மனிஸ் பாண்டேவின் சிறப்பான ஆட்டத்தால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

suryakumar yadav

இறுதி ஓவர்களில் லசித் மலிங்கா மற்றும் பும்ரா இருப்பதால் டெத் ஓவர்களில் ஆட்டம் மாறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 5ஆவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பும்ராவிற்கு எதிராக 3 சிக்சர்கள் மற்றும் மலிங்காவிற்கு எதிராக 1 சிக்சர் என வானவேடிக்கை காட்ட, ஒரு ஓவரை வெளியிலேயே வைத்து போட்டியை வென்றது கொல்கத்தா அணி. 5 சிக்சர்கள் 1 பவுண்டரி என அடித்த சூர்யா 20 பந்துகளில் 230 ஸ்டிரைக் ரேட்டில் 46 ரன்கள் விளாசினார்.

2018 ஐபிஎல் சிஎஸ்கே VS மும்பை : ப்ராவோ மேஜிக்கால் கடைசி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை!

2016 மற்றும் 2017 என இரண்டு ஐபிஎல் வருடங்களில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி. கம்பேக் வருடம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி பெரிதாக இருந்தது. இந்நிலையில் தான் தொடரின் முதல் போட்டியானது பரம எதிரி அணியான மும்பை இந்தியன்ஸ் அணியோடு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 118 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. போட்டியில் அவ்வளவுதான் சிஎஸ்கே தோல்வியை தழுவிவிடும் என்று பல சென்னை ரசிகர்கள் டிவியையே அனைத்து விட்டு சென்றுவிட்டனர்.

bravo

ஆனால் ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் அடிக்க வேண்டிய ரன்களின் சராசரி 15ஆக இருந்தாலும், நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தார் சென்னை அணியின் ஆல்ரவுண்டரான ட்வைன் பிராவோ. இறுதிவரை களத்தில் இருந்த பிராவோ கடைசி கட்ட ஓவர்களில் எல்லாம் நிகழ்த்தி காட்டியது ஒரு மாயாஜால வித்தை என்றே சொல்லலாம், அந்தளவு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ப்ராவோ.

csk

உலகின் நம்பர் 1 பவுலராக இருந்த பும்ராவை கிரவுண்டின் நாலாபுறமும் சிக்சர்களாக பறக்க விட , போட்டியில் என்ன நடக்கிறது என்ற வியப்பில் இருந்து மீளமுடியாமல் இருந்தனர் மும்பை ரசிகர்கள். இறுதியில் 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என விளாசி 30 பந்துகளில் 68 ரன்களை குவித்த ப்ராவோ சென்னை அணிக்கு 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தார். அந்த தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.