Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal PTI
T20

KKRvsRR | ‘ஹூஹூம்.. இது சரிபட்டு வராது’ 47 பந்துகளில் 98 ரன்கள் விளாசி வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால்!

ப.சூரியராஜ்

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

நேற்றிரவு, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தது. கொல்கத்தாவும் நம்பி ஆட்டோவில் ஏறியது. ஜேசன் ராயும், குர்பாஸும் கொல்கத்தாவின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் போல்ட். ஓவரின் 4வது பந்து, பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஜேசன் ராய்.

RR

சந்தீப் சர்மா வீசிய 2வது ஓவரில், குர்பாஸ் ஒரு பவுண்டரி அடித்தார். போல்டின் 3வது ஒவரை பவுண்டரி அடித்து துவங்கிய ஜேசன், அடுத்த பந்திலேயே ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். இந்த சீசனின் சிறந்த கேட்ச்களில் ஒன்று. கொல்கத்தா ரசிகர்கள், இப்போது என்ன நடந்தது என புரியாமல் குழம்பிப்போய் அமர்ந்திருந்தார்கள். சந்தீப்பின் 4வது ஓவரில், முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் குர்பாஸ்.

KKR vs RR

போல்ட்டின் 5வது ஓவரில் பாவம், குர்பாஸும் காலி. இம்முறை அசத்தல் கேட்சைப் பிடித்தது சந்தீப் சர்மா. மொத்த அணியும், கையில் சிலந்தி கடித்ததைப் போல் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார்கள்.

KKR vs RR

ரவி அஸ்வினின் 6வது ஒவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைக்க, பவர்ப்ளேயின் முடிவில் 37/2 என பரிதாபகரமான நிலையில் இருந்தது கொல்கத்தா.

7வது ஓவரை வீசிய ஜோ ரூட், பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் கொடுத்தார். ரவி அஸ்வினின் 8வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. மீண்டும் வந்த ரூட்டை, ஒரு பவுண்டரி அடித்தார் கேப்டன் ராணா. 10 ஓவரை வீசினார் ரவி அஸ்வின்.

RR

வெங்கி தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட, ராணா ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார். 10 ஓவர் முடிவில், 76/2 முக்கி முக்கி அடித்தும் முன்னேறாமல் இருந்தது கொல்கத்தா.

KKR vs RR

`கொல்கத்தா, கொல்கத்தா. அதிர்ச்சி ஒன்னு கொடுக்கட்டா' என பந்து வீசவந்தார் சஹல். 11வது ஓவரில், கேப்டன் ராணா அவுட். அந்த விக்கெட்டின் மூலம், ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்து வீரர் எனும் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் சஹல்.

RR

கே.எம்.ஆசிஃபின் 12வது ஓவரில், 6 ரன்கள் கிடைத்தது. 13வது ஓவர் வீசவந்த சஹலுக்கு, ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை வாழ்த்து பரிசாக கொடுத்தார் வெங்கி.

KKR vs RR

ஆசிஃபின் 14வது ஓவரை சிக்ஸருடன் துவங்கிய ரஸல், அடுத்த பந்திலேயே அஸ்வினிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 15 ஓவர் முடிவில், 116/4 என எழுந்த நிற்க போராடியது கொல்கத்தா.

16வது ஓவரை வீசினார் ஆசிஃப். அந்த ஓவரில் தனது அரைசதத்தை கடந்த வெங்கி, ஒரு சிக்ஸரும் வெளுத்துவிட்டார். சஹலின் 17வது ஓவரில், வெங்கி ஐயர் காலி. அதே ஓவரில், லார்டு ஷர்தூலும் அவுட். சந்தீப்பின் 18வது ஓவரில், ரிங்கு சிங் ஒரு சிக்ஸர் அடித்தார். சஹலின் 19வது ஓவரில், ரிங்கும் அவுட்டானார். இந்த ஓவரில் 1 விக்கெட்டையும் வீழ்த்தி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சஹல். சந்தீப்பின் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த நரைன், கடைசி பந்தில் அவுட்டும் ஆனார். 150 ரன்களை கூட எட்ட முடியாமல், 149/8 என இன்னிங்ஸை முடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

KKR vs RR

வெங்கிக்கு பதில் சுயாஷ் சர்மாவை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் கேப்டன் ராணா. அத்தோடு இன்னொரு அற்புதமான முடிவையும் எடுத்தார். அது, முதல் ஓவரை அவரே வீசுவதென்பது. ராணா தன் கையில் பந்தை எடுத்ததைப் பார்த்துவிட்ட ஜெய்ஸ்வால், `மாட்னடா பம்பரகட்டை மண்டையா' எனும் மோடுக்கு போய்விட்டார். முதல் பந்து சிக்ஸர், இரண்டாவது பந்து இன்னொரு சிக்ஸர். மூன்றாவது பந்து பவுண்டரி. நான்காவது பந்து, இன்னொரு பவுண்டரி. கடைசிப்பந்து மற்றுமொரு பவுண்டரி. முதல் ஓவரில், 26 ரன்களை அள்ளினார் ஜெய்ஸ்வால். கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ந்துபோனார்கள்.

Yashasvi Jaiswal

ஹர்சித் ராணாவின் 2வது ஓவரில், ரன் அவுட்டானார் ஜோஸ் பட்லர்.

கொல்கத்தா ரசிகர்கள் மெல்ல கண்ணீரைத் துடைத்தார்கள். அடுத்து ஓவர் த்ரோவில் ஒரு பவுண்டரி, இன்னொரு சிக்ஸர் என ஜெய்ஸ்வால் ஆர்ம்பிக்க, மீண்டும் கண்ணீர் கொட்டியது நைட் ரைடர்ஸுக்கு. லார்டு தாக்கூரின் 3வது ஒவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து, 13 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ஜெய்ஸ்வால். ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைசதம் இதுவே.

Yashasvi Jaiswal

வருண் சக்கரவர்த்தியின் 4வது ஓவரில் இன்னொரு பவுண்டரி வெளுத்தார் ஜெய்ஸ்வால். ஹர்ஷித் ராணாவின் 5வது ஓவரில், ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் இரண்டு பவுண்டரிகள். வருணின் 6வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என கேப்டன் சஞ்சுவும் இன்னொரு பக்கம் ஆரம்பித்தார். பவர்ப்ளேயின் முடிவில் 78/1 என படுபயங்கரமான நிலையில் இருந்தது ராயல்ஸ். இன்னும் 84 பந்துகளில் 72 ரன்களே தேவை.

Yashasvi Jaiswal

நரைனின் 7வது ஓவரில், இன்னொரு சிக்ஸரை வெளுத்தார் ஜெய்ஸ்வால். சுயாஷின் 8வது ஓவரில், இன்னொரு சிக்ஸரை வெளுத்தார் ஜெய்ஸ்வால் என பவுண்டரிகள் ரிப்பீட் மோடில் வந்து கொண்டிருந்தன. நரைனின் 9வது ஒவரில், 3 ரன்கள் மட்டுமே. சுயாஷின் 10வது ஓவரில், சாம்சன் ஒரு பவுண்டரி அடித்தார். 10 ஓவர் முடிவில் 107/1 அநியாயத்துக்கு அவசரப்பட்டது ராயல்ஸ் அணி.

அனுகுல் ராயின் 11வது ஓவரை, சிக்ஸருடன் துவங்கினார் கேப்டன் சஞ்சு. `இனி நான் அடிக்குற ஒவ்வொரு அடியும், மரண அடியா இருக்கும்' என்பது போல, அதே ஓவரில் இன்னும் இரண்டு சிக்ஸர்கள் பறந்தன. `சாமி பொறுமை, பொறுமை' என ராயல்ஸ் ரசிகர்கள் திகைத்துபோயினர். வருணின் 12வது ஓவரில், ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி, சஞ்சு ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர்.

KKR vs RR

சுயாஷின் 13வது ஓவரின் முதல் பந்து, ஜெய்ஸ்வால் கொடுத்த ஸ்டெம்பிங் சான்ஸை மிஸ் செய்தார் குர்பாஸ். அடுத்து ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால். அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவை. ஜெய்ஸ்வால் சதமடிக்க 94 ரன்கள் தேவை. ஓவரின் கடைசிப்பந்தை அகலபந்தாக வீசி பவுண்டரியில் போட்டுவிடுவது என திட்டத்துடன் வீசினார் சுயாஷ். சுதாரித்த சஞ்சு, பந்தை தடுத்துவிட்டார். ஜெய்ஸ்வாலின அருகே வந்து, `போடுறா தம்பி சிக்ஸ' என இரண்டு கைகளையும் தூக்கினார். அடுத்த ஓவரின் முதல் பந்து, பவுண்டரியில் போய் விழுந்தது.

KKR vs RR

ஜெய்ஸ்வால் சதம் அடிக்கவில்லை எனினும், பிட்டர் ஸ்வீட் முடிவாக ராயல்ஸ் அணி ஆட்டத்தை வென்றது. பல வியத்தகு சாதனைகளை அரங்கேறி முடிந்த இப்போட்டியில், 47 பந்துகளில் 98 ரன்கள் விளாசிய

ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கபட்டது.

ஆட்டம் முடிந்தது ஒரு அரைகுயர் நோட்டை எடுத்து, அடுத்து வருகின்ற மேட்ச்களில் எந்தெந்த ரிசல்ட் வந்தால் ஆர்.சி.பி ப்ளே ஆஃபை அடையும் என கால்குலேட்டர் உதவியுடன் கணக்கு போட்டார்கள்.

பிறகு, `அதுக்கு ஆர்.சி.பி மொதல்ல ஜெயிக்கணுமே' என வருத்தம் கொண்டு நோட்டை மூடினர்.