mumbai indians 2025 ipl web
T20

”நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுகிறோம்.. அது போதுமானதாக இல்லை” - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்!

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்காக மிக அருகாமையில் வந்தபோதும் அவர்களால் வெற்றிக்கோட்டை கடக்க முடியவில்லை, அதன்காரணமாக 3 போட்டிகளை வெல்லவேண்டிய இடத்தில் 1 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளது.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடம்பிடித்துள்ளது.

நல்ல வீரர்களை கொண்டிருக்கும்போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகளை பெறமுடியாமல் தடுமாறிவருகிறது. போதாக்குறைக்கு நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்பிய போதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியால் வெல்ல முடியவில்லை.

ஹர்திக்

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை போராடிய மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதேபோல அதற்குமுந்தைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது மும்பை அணி. இந்த இரண்டு போட்டிகளையும் வெல்லும் பிரகாசமான இருந்தபோதும் மும்பை அணியால் அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த சூழலில் ஆர்சிபிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசியிருக்கும் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே வருத்தம் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய கிரிக்கெட் போதுமானதாக இல்லை..

ஆர்சிபி அணியுடனான தோல்விக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தலைமை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே, வெற்றிக்கோட்டை கடக்கமுடியாமல் போனது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். அதேவேளையில் பவர்பிளேவில் நாங்கள் தொடர்ந்து கோட்டைவிடுகிறோம் என்ற நெகட்டிவான பக்கம் குறித்து பேசினார்.

Jayawardene

தோல்வி குறித்து பேசிய அவர், “நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம், ஆனால் அது போதுமானதாக இல்லை. எங்களுக்கு பவர்பிளே பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே மோசமானதாக அமைந்தது. பந்துவீச்சில் சிறந்த தொடக்கம் கிடைத்தபோதும், எங்களால் ரன்களை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அதேபோல பேட்டிங் பவர்பிளேவிலும் அதிகமான விக்கெட்டுகளை இழக்கிறோம்” என்று பேசியுள்ளார்.