LSG
LSG Swapan Mahapatra
T20

KKR vs LSG | திரில் வெற்றியுடன் 'பிளே–ஆஃப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ!

Nithish

வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகள் உக்கிரமாய் மோதினால் எப்படி இருக்குமோ அப்படியொரு ஆட்டம்தான் நேற்று கொல்கத்தாவிற்கும் லக்னோவிற்கும் இடையே நடந்தது. லக்னோ ஆட்டத்தை வென்றாலே பிளே-ஆஃப்பிற்குள் சென்றுவிடலாம். வரலாறு காணாத ரன் வித்தியாசத்தில் வென்றால் இரண்டாமிடம் கூட கிடைக்க வாய்ப்பு. கொல்கத்தாவிற்கோ ஆம் ஆத்மி கட்சி தனித்து நின்று நம்மூரில் சீட் வெல்வதைப் போன்ற அரிதினும் அரிதான வாய்ப்பு மட்டுமே. குறைந்தது 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ராஜஸ்தானை ரன்ரேட்டில் ஓவர்டேக் செய்யமுடியும். அதன்பின் பெங்களூருவும் மும்பையும் தோற்பதற்காக வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனாலும் விடுவானேன் என களமிறங்கியது அந்த அணி.

LSG vs KKR

கோயங்காவிற்கு சொந்தமான மோகன் பஹன் கால்பந்து அணியை பிரதிபலிக்கும் விதமாக லக்னோவும் மெரூன் ஜெர்ஸியில் களமிறங்கியது இந்த ஆட்டத்தில். டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றங்களுமில்லை. லக்னோ அணியில் இந்த சீசனின் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது, தீபக் ஹூடா வெளியே. அவருக்குப் பதில் கரன் சர்மா. இடது கை பேட்ஸ்மேன்கள் எதிரணியில் அதிகமென்பதால் ஸ்வப்னில் சிங்கிற்கு பதில் கிருஷ்ணப்பா கெளதம்.

ஹர்ஷித் ராணா வீசிய முதல் ஓவரில் ஒரே ஒரு ரன். வைபவ் அரோரோவின் அடுத்த ஓவரிலும் வெறும் ஆறே ரன்கள். ரன்ரேட் பிரஷர் எகிற அதற்கு முதல் ஆளாய் பலியானார் கரண் சர்மா. ஹர்ஷித்தின் பந்தை தூக்கியடிக்க ஆசைப்பட்டு அவுட். ஒன் டவுனில் ப்ரேரக் மேன்கட். அவரும் டிகாக்குமாய் இணைந்து பயமறியாமல் கொல்கத்தா பவுலர்களின் பந்துகளை சிதறடித்தார்கள். ஹர்ஷித் வீசிய ஐந்தாவது ஓவரில் மேன்கட் விலகி நின்று அடித்த மூன்று பவுண்டரிகளுமே சரியான கிரிக்கெட்டிங் ஷாட்கள். பவர்ப்ளேயில் ரன் போனால் நிதிஷ் ராணா சரணடையும் வருண் சக்ரவர்த்திதான் ஆறாவது ஓவர். அவரையும் சூப்பராய் எதிர்கொண்டார் மேன்கட். இரண்டு பவுண்டரிகள். ஆறு ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 54/1.

LSG vs KKR

நன்றாக ஆடிக்கொண்டிருந்த இணையை பிரித்தார் அரோரா. இறங்கி வந்து கவர் பக்கம் தூக்கியடித்த பந்தை கப்பென பிடித்தார் ஹர்ஷித். மேன்கட் அவுட். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸின் உடம்பைக் குறிவைத்து ஷார்ட் பாலை இறக்கினார் அரோரா. தட்டுத் தடுமாறி சமாளித்தார் ஸ்டாய்னிஸ். அடுத்த பந்தையும் அதேபோல இறக்க, க்ளவுஸில் பட்டு வெங்கடேஷ் ஐயர் கையில் தஞ்சமடைந்தது பந்து. ஸ்டாய்னிஸ் டக் அவுட். இதுதான் சாக்கு என நடுவே நைஸாய் கேப்டன் ராணாவும் ஒரு ஓவர் வீச அதில் மூன்றே ரன்கள்.

LSG vs KKR

ஷர்துல் தாக்கூரை இந்த சீசனில் தேவைக்கேற்பவே பயன்படுத்துகிறார் ராணா. பல மேட்ச்களில் அவர் நான்கு ஓவர்கள் கோட்டாவை முடிக்கவே இல்லை. இந்த ஆட்டத்தில் ஒன்பதாவது ஓவரை வீசினார் ஷர்துல். லாங் ஆஃப் பக்கம் சிக்ஸுக்குத் தூக்கினார் க்ருணால். நரைனின் அடுத்த ஓவரில் டீப் ஸ்கொயர் பக்கம் ஸ்வீப் அடிக்க முயல, பவுண்டரி ஏரியாவில் பக்காவான பீல்டரான ரிங்கு சிங் அதைத் தவறவிடவே இல்லை. ஸ்கோர் பத்து ஓவர்கள் முடிவில் 73/4. அடுத்த ஓவரில் அதுவரை பொறுமையாய் ஆடிக்கொண்டிருந்த டிகாக்கும் நடையைக் கட்டினார். 

களத்தில் இப்போது பூரனும் படோனியும். படோனி லக்னோவின் கண்டுபிடிப்பு. பூரன் லக்னோவின் மீள் கண்டெடுப்பு. மேட்ச் வின்னிங் ஸ்கோர்களை எல்லாம் எட்டுகிறார் பூரன் லக்னோவிற்கு வந்து சேர்ந்தபின். நேற்றும் களமிறங்கிய உடனேயே தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும். ரன்கள் இஷ்டத்திற்கு போகும்போதெல்லாம் நரைனை நடுநடுவே கொண்டுவந்து கட்டுபடுத்தினார் நிதிஷ் ராணா. ஒருபக்கம் படோனி ஸ்பின்னை தடுத்தாட மறுபக்கம் தயக்கமே இல்லாமல் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார் பூரன். இம்பேக்ட் பிளேயராய் உள்ளே வந்த சுயாஷின் முதல் ஓவரிலேயே 12 ரன்கள். ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 119/5. பூரன் 19 பந்துகளில் 37 ரன்கள்.

LSG vs KKR

டெத் ஓவர்களில் படோனியும் கொஞ்சம் வேகம் காட்டி நரைன் ஓவரை வெளுக்க, கடைசி பந்தில் அவரை பெவிலியன் அனுப்பினார் நரைன். 19வது ஓவர் ஷர்துல் தாக்கூர். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்பிலேயே பூரனுக்கு அவர் வீச, அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். மூன்றாவது பந்தையும் அதேபோல ஆட முயன்று வெங்கடேஷ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பூரன். அதன்பின் கெளதமின் கேமியோவால் 176 என்கிற ஸ்கோரை எட்டியது லக்னோ. இந்த சீசனின் ஈடன் கார்டன் சராசரியைவிட 20 ரன்கள் குறைவு.

LSG vs KKR

79 ரன்களுக்குள் கொல்கத்தாவை சுருட்டினால் லக்னோவிற்கு இரண்டாமிடம். ஆனால் 'வாய்ப்பில்ல ராஜா' என முதல் ஓவரிலேயே பேட்டைச் சுழற்றினார் வெங்கடேஷ். மொஹ்சின் கானின் அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள். நவீன் உல் ஹக்கின் இரண்டாவது ஓவரில் ராயும் தன் பங்கிற்கு ராவடி செய்ய, அந்த ஓவரிலும் 15 ரன்கள். வேறு வழியில்லாமல் கேப்டன் க்ருணாலே பந்தைக் கையிலெடுத்தார். ஆறு ரன்கள் மட்டுமே அந்த ஓவரில். கெளதம் வீசிய அடுத்த ஓவரில் ஒன்பது ரன்கள். க்ருணால் வீசிய ஐந்தாவது ஓவரில் ராய் ஹாட்ரிக் பவுண்டரி எல்லாம் அடிக்க ஸ்கோர் ஐம்பதை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டியது.

LSG vs KKR

ஓபனிங் ஜோடியை போராடி பிரித்தார் கெளதம். பிஸ்னோய் கைக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார் வெங்கடேஷ். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 61/1. தேவைப்படும் ரன்ரேட்டை விட அதிகமாகவே இருந்தது நடப்பு ரன்ரேட். அப்படியே ஆடியிருந்தால் லக்னோவின் பிளே ஆஃப் வாய்ப்புகளை குலைத்திருக்க முடியும். 'அதெப்படி, முடியாது' என முதலில் முடிவெடுத்தவர் கேப்டன் ராணாவேதான். ரொம்ப சுமாரான ஷாட்டை ஆடி க்ருணாலிடம் கேட்ச் கொடுத்தார். பிஸ்னோயிற்கு இது நூறாவது டி20 விக்கெட். அடி வெளுத்துக்கொண்டிருந்த ராயும் அதற்கடுத்த ஓவரிலேயே க்ளீன் போல்ட். ஸ்கோர் பத்து ஓவர்கள் முடிவில் 82/3.

'எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான்' என இப்படி வரிசையாக கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்ட இந்த சீசனில் மற்றுமொரு முறை பாரம் முழுவதும் ரிங்கு சிங் மேல் விழுந்தது. 'சரி நீ தனியா நின்னு பார்த்துக்கப்பா' என கண்ணை மூடி சுற்றி குர்பாஸும் நடையைக் கட்டினார்.

LSG vs KKR

களமிறங்கியது ரஸல் என்பதால் இன்னும் நம்பிக்கை இருந்தது கொல்கத்தா ரசிகர்களுக்கு. ஆனால் இந்த ரஸல் தான் பழைய ரஸல் இல்லையே. கடந்த மூன்று சீசன்களாக லெக் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு தடுமாறும் ரஸலின் ஸ்ட்ரைக் ரேட் 120 தான். பிஸ்னோயின் ஸ்பின் சூதுக்கு சரியாய் பலியானார். ஸ்கோர் 16 ஓவர்கள் முடிவில் 121/5.

LSG vs KKR

நான்கு ஓவர்களில் 55 ரன்கள் தேவை என்கிற நிலையில் இறங்கி அடிக்க ஆரம்பித்தார் ரிங்கு. ஆனால் மறுபக்கம் ஷர்துல், நரைன் என விக்கெட்கள் போய்க்கொண்டே இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் தேவை. நவீன் 19வது ஓவரை வீச அதில் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகள். ஐந்தாவது பந்தி ஒரு சிக்ஸ். மொத்தமாய் 20 ரன்கள் அந்த ஓவரில். கடைசி ஓவரிலும் அந்த மேஜிக்கை நிகழ்த்தினால் இந்த சீசனின் முதல் சூப்பர் ஓவர். ஆனால் ஷர்துல் முதல் மூன்று பந்துகளை சரியாய் திட்டப்படி இறக்க ரிங்குவால் கனெக்ட் செய்யமுடியவில்லை. ஒருவழியாய் நான்காவது பந்தில் ஒரு சிக்ஸ், ஐந்தாவதில் ஒரு பவுண்டரி அடிக்க, வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவை ஒரு பந்தில் என்கிற நிலை. எக்ஸ்ட்ராவுக்காக கொல்கத்தா ரசிகர்கள் தங்கள் குலசாமியை எல்லாம் வேண்டிக்கொள்ள ரிங்குவால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. 33 பந்துகளில் 67 ரன்கள் ரிங்கு. ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று பிளே ஆஃப் நுழைந்தது லக்னோ. ஆட்ட நாயகன் பூரன்.

LSG vs KKR

கேப்டனை கடைசி நேரத்தில் இழந்திருந்தாலும் ஓபனிங்கில் ஜேசன் ராய், பார்முக்குத் திரும்பியிருக்கும் வெங்கடேஷ் ஐயர், சுழலில் சிதறடிக்கும் வருண் - சுயாஷ் இணை, பினிஷராக உருவெடுத்திருக்கும் ரிங்கு என எடுத்துப்போக கொல்கத்தாவிற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் அம்சங்கள் இருக்கின்றன. மறுபக்கம் கேப்டனை தொடர் நடுவே இழந்தாலும் போராடி பிளே ஆஃப்பிற்குள் நுழைந்துவிட்டது லக்னோ.

LSG vs KKR

உலகப் புகழ் சண்டைக்குப் பின் அந்த அணியின் நவீன் உல் ஹக் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய போட்டியிலும் கூட்டத்தைப் பார்த்து 'உஷ்' சொல்ல தவறவில்லை அவர். களத்திலும் அந்த கவனத்தைக் காட்டினால் அவருக்கும் அணிக்கும் நல்லது. பெங்களூரு/ மும்பை/ராஜஸ்தான் என எந்த அணி பிளே-ஆஃபில் வந்தாலும் அந்த அணியை இந்த சீசனில் லீக் தொடரில் வீழ்த்தியிருக்கும் வரலாறு இருப்பதால் தைரியமாகவே களம் காணும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்!