2025 ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் 3 அணிகளும் அடுத்த சுற்றான பிளேஆஃப்க்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி இடத்திற்கு மும்பை, டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
மீதமிருக்கும் 3 போட்டிகளில் வென்றால் லக்னோ அணி தகுதிபெறுவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், இன்றைய ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வாழ்வா சாவா யுத்தம் நடத்தியது ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவரில் 205 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய மார்ஷ் 39 பந்தில் 65 ரன்கள் அடித்து அசத்தினார். மறுமுனையில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய மார்க்ரம் 38 பந்தில் 61 ரன்கள் அடிக்க, 10 ஓவரிலேயே 110 ரன்களை கடந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
எப்படியும் 240 ரன்கள் வரும் லக்னோ அணி போட்டியை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என்ற நிலையில், மார்ஷ் வெளியேறியதும் நிக்கோலஸ் பூரன் களமிறங்காமல் ரிஷப் பண்ட் களமிறங்கினார். நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் மோசமான ஃபார்மில் இருந்துவரும் பண்ட், இன்றைய போட்டியிலும் படுமோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தினார். நன்றாக சென்றுகொண்டிருந்த போட்டியில் ஸ்பீட் பிரேக்கர் போல வந்த பண்ட் ஆட்டத்தை மந்தமாக்கிவிட்டு வெளியேற, ரன்வேகமானது 240-லிருந்து 200-க்கும் கீழ் குறைந்தது.
அடுத்தவந்த வீரர்களில் ஒருவர் கூட சோபிக்காத நிலையில், வழக்கம்போல தனியாளாக போராடிய பூரன் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் அடித்து ரன்அவுட் மூலம் வெளியேறினார். ஒருவழியாக 20 ஓவரில் 205 ரன்களை மட்டுமே அடித்தது லக்னோ அணி.
206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைத்ராபாத் அணிக்கு, தொடக்க வீரர் அதர்வாவை விரைவாகவே வெளியேற்றிய லக்னோ அணி அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் மறுமுனையில் ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, லக்னோ பவுலர்களை மைதானத்தின் அனைத்து மூலைக்கும் சிதறடித்தார். 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என மரண அடி கொடுத்த அபிஷேக் சர்மாவை, 59 ரன்னில் வெளியேற்றினார் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ்.
காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை வெளியேற்றிய திக்வேஷ், எப்போதும் போல ’நோட் புக்கில் கையெழுத்து போடும்’ கொண்டாட்டத்துடன் சேர்த்து ’கெளம்பு கெளம்பு, வெளியே போ’ என கைக்காட்டி உசுப்பேற்றினார். இதைப்பார்த்த அபிஷேக் சர்மா மிகுந்த கோவத்துடன் திக்வேஷ் இடம் சண்டைக்கு வர, இரண்டு வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இருவரும் மோதிக்கொள்ளும் விதமாக செல்ல நடுவர்கள், சக வீரர்கள் அனைவரும் சேர்ந்து தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர். ஆனாலும் நீண்ட சடை வைத்திருக்கும் திக்வேஷை பார்த்து, பின்பக்க முடியை இழுப்பதுபோல சைகை காட்டி வெளியேறினார் அபிஷேக் சர்மா. இது சிறிதுநேரம் களத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.
7.3 ஓவருக்கே 99 ரன்களை அடித்துவிட்டு அபிஷேக் சர்மா வெளியேற, அடுத்துவந்த கிளாசன் மற்றும் இஷான் கிஷான் இருவருக்கும் செய்யவேண்டிய வேலை சுலபமானதாக மாறியது. 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விரட்டிய இஷான் கிஷன் 35 ரன்கள் அடிக்க, 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட கிளாசன் 47 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். முடிவில் 18.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஹைத்ராபாத் அணி, லக்னோ அணிக்கு இருந்த பிளேஆஃப் கதவை அடைத்து அவர்களையும் தொடரிலிருந்து வெளியேற்றியது.
இந்த தோல்வியின் மூலம் 5வது அணியாக நடப்பு சீசனிலிருந்து வெளியேறியது லக்னோ. இந்த வெற்றியின் மூலம் லக்னோ மைதானத்தில் அதிகபட்ச ரன்சேஸிங் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது SRH அணி.
4வது இடத்திற்கான போட்டியிலிருந்து லக்னோ வெளியேறிய நிலையில், நாளை மறுநாள் நடக்கப்போகும் வாழ்வா சாவா போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.