Mumbai Indians captain Rohit Sharma with Lucknow Super Giants captain Krunal Pandya
Mumbai Indians captain Rohit Sharma with Lucknow Super Giants captain Krunal Pandya  Manvender Vashist Lav
T20

LSGvMI | மும்பை... லக்னோ... குஜராத்துடன் மோதப்போவது யார்..?

Wilson Raj

சர்வதேச சகோதரர்கள் தினமான இன்று ஒரு சகோதரர் ஏற்கெனவே இரண்டாம் குவாலிபையர் போட்டியை ஆட குஜராத் சென்று விட்டதால் மற்றொரு சகோதரரும் அவரோடு சேர்ந்து கொள்ள காத்திருக்கிறார். மறுபுறம் மும்பையோ இது வரை வந்ததே அந்த ஏழுமலையான் புண்ணியம் என்ற மைன்ட்செட்டில் உள்ளது.

Rohit

IPL தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி கடந்த ஆண்டு அறிமுகமானதில் இருந்தே மும்பை அணியிடம் தோற்றதே இல்லை. இப்படி‌ தான் குஜராத்தையும் சென்னை இதற்கு முன் வீழ்த்தியதில்லை... ஆனால் நேற்று வென்று விட்டது என்று உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றினால் நீங்கள் ஒன்றை நினைவு கூற வேண்டும். "பால் தான் பொங்கும். பச்ச தண்ணி எந்தக் காலத்திலும் பொங்காது".

இந்த தொடர் முழுவதுமே மும்பை அணியின் பந்துவீச்சு பச்ச தண்ணியாக தான் இருந்து வந்துள்ளது. அணியின் முன்னணி பந்துவீச்சாளராக கருதப்பட்ட பும்ரா தொடருக்கு முன்பே காயத்தால் வெளியேறினார். அடுத்து ஆர்ச்சரும்‌ பாதி தொடரிலேயே வெளியேறினார். ரிச்சர்ட்ஸனும் காயத்தை காரணம் காட்டி கிளம்ப, திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போலானது மும்பையின் பவுலிங்.‌ போன வருடம் கமென்ட்ரி செய்து கொண்டிருந்த பியூஷ் சாவ்லா தான் தற்போதைய மும்பை அணியின் முக்கிய பவுலர். இதை விட எட்டாவது வள்ளலாக கிரிக்கெட் உலகில் அறியப்படும் ஜோர்டனை வைத்துக்கொண்டு விளையாடுவதிலேயே தெரிந்திருக்கும் மும்பை பவுலிங்கின் பரிதாப நிலை.

Chris Jordan

இருந்தாலும் வழக்கம் போல ஆகாஷ் மாத்வால் என்ற பவுலரை மும்பை இந்த வருடம் அடையாளம் கண்டுள்ளது. துல்லிய யார்க்கர்கள் வீசும் இவர் எதிரணியின் டெத் ஓவர்களில் ரன்‌களை பாதியாக குறைத்து விடுகிறார். பந்து வீச்சில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பேட்டிங்கை பொறுத்த வரை மும்பை இப்போதும் கடப்பாறை தான்.‌ ஆனால் இன்று அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இத்தனை நாள் ஜாலியாக 200 ரன்களை சேஸ் செய்தது மும்பை வாண்கடே மைதானம். பேட்டிங்கிற்கு மிக சாதகமான மைதானம் அது. ஆனால் சென்னையோ "150 ரன்கள் எடுங்க தம்பி...மிச்சத்தை பிட்ச் பார்த்துக் கொள்ளும்" வகையறா மைதானம். இதில் எப்படி மும்பை வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதில் அடங்கி இருக்கிறது வெற்றி சூத்திரம்.

குறிப்பாக மும்பையின் சூரியகுமார் இந்த மைதானத்தில் எப்படி விளையாட போகிறார் என்பதை மொத்த கிரிக்கெட் உலகமும் காண காத்திருக்கிறது. அதிவேகமாக ரன்கள் குவிக்கும் திறன், வித்தியாசமான ஏரியாக்களில் அடித்து பந்துவீச்சாளரை குழப்பும் திறன், EA ஸ்போர்ட்ஸில் வீடியோ கேமில் கூட இல்லாத ஷாட்களை ஆடும் லாவகம் என அனைத்தையும் வைத்திருக்கும் இவர் சேப்பாக்கத்தின் சுழல் கண்ணியில் சிக்காமல் இருந்தாலே மும்பைக்கு பெரிய பலம். ஆனால், 150க்கு மேலிருக்கும் சூரியாவின் ஸ்டிரைக் ரேட், என்ன மாயமோ தெரியவில்லை சேப்பாக்கம் வந்தாலே 127 ஆகிவிடுகிறது. காயத்திலிருந்து திலக் மீண்டு வந்திருப்பது மும்பைக்கு மற்றொரு பலம். கூடவே மும்பை பேட்டிங்கில் இந்த ஆண்டில் கண்டெடுத்த முத்தான வதீராவும் ஸ்பின் நன்கு ஆடக்கூடியவர். இவர்களுடன் கிரீன், கிஷன், டேவிட் ஆகியோர் உள்ளனர். இவர்கள் எல்லாருக்கும் மேல் IPL தொடரில் 5 கோப்பைகளை வென்று அசத்திய கேப்டன் ரோஹித் இருக்கிறார்.‌ பொறுப்புடன் அவர் ஆடும் பட்சத்தில் மும்பை நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிக்கும்.

Lucknow Super Giants

கடைசி மூன்று போட்டிகளில் வென்ற உத்வேகத்துடன் வருகிறது லக்னோ. இந்த அணியை பொறுத்தவரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அணி. ஏற்கெனவே காம்பீரை அணியின் ஆலோசகராக வைத்துள்ளார்கள். அது போதாது என்று ஆப்கானிஸ்தானில் இருந்து குட்டி காம்பீர் 'மாம்பழ புகழ்' நவீன் உல் ஹக்கையும் வளர்த்து வருகின்றனர்.‌ இந்த இருவரும் இணைந்து இந்த ஆண்டு களத்தில், ட்விட்டரில், இன்ஸ்டாகிராமில் செய்தவற்றை மட்டுமே வைத்து ஒரு மசாலா படமும் எடுக்கலாம். அதிலும் கம்பீர் செல்லும் இடமெல்லாம் ' கோலி கோலி' என ஆர்ப்பரிக்க தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள். தொகுதிப்பக்கமே போகாத கம்பீர் கூட , இவர்களிடமிருந்து தப்பிக்க தொகுதிக்கு சென்றுவிடுவார் போல.

இன்றைய போட்டியில் இந்த அணிக்கு மிகப்பெரிய துணையாக இருக்கப் போவது ஸ்பின் பவுலிங். க்ரூணல் பாண்டியா, பிஷ்னோய், அமித் மிஸ்ரா என ஒரு படையே இருக்கிறார்கள். சேப்பாக்கத்தில் ஆளுக்கு நான்கு ஓவர் வீசினால் மும்பையின் கடப்பாறை பேட்டிங் காற்றில் கரைந்து விடும். இவர்களுடன் கிருஷ்ணப்பா கவுதமும் ஸ்பின் வீசக் கூடியவர். லக்னோ பேட்டிங்கில் மேயர்ஸ், டீகாக், ஸ்டோனிஸ் என்று வெளிநாட்டு வீரர்களை நம்பியே அதிகம் உள்ளது. கூட கேப்டன் க்ரூணல் பாண்டியா கை கொடுக்கலாம். சேப்பாக்கத்தை பொறுத்தவரை பேட்டி எல்லாம் இரண்டாவது தான் பௌலிங் தான் முக்கியம் என்பதால், இரண்டு அணிகளுமே தங்களது பந்துவீச்சை வலுப்படுத்தும் முயற்சியில்தான் இறங்கும். ஆஃப் ஸ்பின்னர்கள் இங்கு அதிகம் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதால் மும்பை அணியில் ஹ்ரித்திக் ஷோக்கினை எதிர்பார்க்கலாம்.

சேப்பாக்கத்தில் அதிரடியை விட பொறுமை தான் பலன் தரும். ரன் வரவில்லை என அடித்து அவுட் ஆவதற்கு பதிலாக அதிக நேரம் களத்தில் நின்றால் ரன்கள் தானாகவே வரும். எந்த பவுலரை அடிக்க வேண்டும் எந்த பவுலரை தடுக்க வேண்டும் போன்ற திட்டமிடல் எல்லாம் சேப்பாக்கத்தில் மிக மிக அவசியம். இன்னமும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் வீரத்தை விட விவேகத்தை பயன்படுத்தும் அணி இங்கு வெற்றி பெறும். அது எந்த அணி என்பது இரவு தெரிந்துவிடும்.