அதிக போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம், அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பில் முதலிடம், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்ப்பிள் கேப்பில் முதலிடம் என ஆர்சிபி அணியானது 2025 ஐபிஎல்லில் ரவுண்ட்டு கட்டி அடித்துவருகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு மேட்ச் வின்னர்கள் என உருவாகி கொண்டே இருப்பது, அவ்வணியை டாப்பில் கொண்டு அமரவைத்துள்ளது.
அந்தவகையில் இன்றைய போட்டியில் பேட்டிங்கில் 73 ரன்கள் குவித்து நாட் அவுட்டில் ஆட்டத்தையே முடித்து கொடுத்த க்ருணால் பாண்டியா, ‘டேய் குமரா உனக்கு பேட்டிங்லாம் பண்ண வருமா’ என்ற வசனத்திற்கேற்ப ஒரு வாழ்நாள் சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளார் க்ருணால் பாண்டியா.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து ஆர்சிபி அணியை வீழ்த்திய பிறகு ‘இது என்னுடைய மண், என்னோட கோட்டை’ என காந்தாரா படத்தின் காட்சியை போல கர்நாடகாவை சேர்ந்த கேஎல் ராகுல் செலப்ரேஷன் செய்தபோது, எங்காளு விராட் கோலியும் அவர் பிறந்த டெல்லி மண்ணுல வச்சி இதையே உங்களுக்கு திருப்பி கொடுப்பாரு என ஆர்சிபி ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதற்கான போட்டியாக இன்று டெல்லி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் டெல்லி கேபிடல்ஸை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல், 9 பந்தில் 28 ரன்கள் அடித்து பவர்பிளேவில் டாமினேட் செய்தார். புவனேஷ்குமாருக்கு எதிராக அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிய அவரை, ஹசல்வுட் வெளியேற்றினார். அடுத்த ஓவரிலேயே கருண் நாயர் 4 ரன்னுக்கு அவுட்டாக, 26 பந்துக்கு 22 ரன்கள் என தடவிக்கொண்டிருந்த டுபிளஸியை க்ருணால் பாண்டியா வெளியேற்றினார்.
மிடில் ஓவர்களில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் டெல்லி அணிக்கு ஒவ்வொரு ரன்னை எடுப்பதை கூட கடினமாக்கினர். அழுத்தமான நேரத்தில் சிக்சர் பவுண்டரி என விரட்டிய கேப்டன் அக்சர் பட்டேல் இண்டண்ட் காமித்தாலும், அவரை 15 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார் ஹசல்வுட்.
கேஎல் ராகுல் இருக்கிறார் ஏதாவது செய்வார் என காத்திருந்த ரசிகர்களுக்கு 39 பந்தில் 41 ரன்கள் அடித்து ஏமாற்றினார் ராகுல். உடன் அடுத்துவந்த அஷுதோஷ் சர்மாவும் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேற, ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்த புவனேஷ்குமார் கலக்கிப்போட்டார்.
17 ஓவர் முடிவில் வெறும் 120 ரன்கள் மட்டுமே அடித்திருந்த டெல்லி அணி, கடைசி 3 ஓவரில் 30 ரன்கள் கூட அடிக்காது என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால் களத்திலிருந்த ஸ்டப்ஸ் மற்றும் விப்ராஜ் நிகம் இருவரும் 2 ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என வெளுத்துவாங்க 36 ரன்களை விட்டுக்கொடுத்தது ஆர்சிபி அணி. ஆனால் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய புவனேஷ்குமார் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க 20 ஓவரில் 162 ரன்களை மட்டுமே அடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஜேக்கப் பெத்தல் மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சால்ட்டுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த பெத்தல், சிக்சர் பவுண்டரி என விளாசி அசத்தினார். ஆனால் பவர்பிளேவில் 3வது ஓவரை வீசவந்த அக்சர் பட்டேல், பெத்தலை 12 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல். ஃபார்மில் இருந்துவரும் படிக்கல்லையும் 0 ரன்னில் போல்டாக்கி அனுப்பிவைத்தார்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி தடுமாற, ஒரு அசத்தலான ரன் அவுட் மூலம் கேப்டன் பட்டிதாரை வெளியேற்றிய கருண் நாயர் ஆர்சிபி அணிக்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.
26 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை ஆர்சிபி அணி இழந்தபோது, இங்கிருந்து அவர்களால் மீண்டுவரவே முடியாது, மீண்டும் ஃபார்மிற்கு திரும்பிய ஆர்சிபி என ஐபிஎல் ரசிகர்கள் கலாய்க்கவே செய்தனர். ஆனால் விராட் கோலி இருக்கிறார், எப்படியும் மீட்டு எடுத்துவந்துவிடுவார் என காத்திருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் க்ருணால் பாண்டியா.
கோலி அடிப்பாருனு பார்த்தா க்ருணால் பாண்டியா அடிக்கிறாரு, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ஆர்ப்பறித்தனர் ஆர்சிபி ரசிகர்கள். ஆடுகளத்தில் பந்தானது நின்றுவர ஆரம்பிக்க, பந்து பிட்ச் ஆகும் இடத்திலேயே அடிக்க வேண்டும் என மைதானத்தில் இறங்கிவந்து ஆடிக்கொண்டிருந்தார் க்ருணால் பாண்டியா. ஸ்பின்னர்களை ஒரே லைனில் செட்டிலாக விடாமல் தன்னால் முடிந்த அனைத்து வேலையையும் க்ருணால் செய்ய, பவுலர்கள் வீசும் மோசமான பந்தை மட்டும் பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டிருந்தார் விராட் கோலி.
ஒரு கட்டத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக பார்த்து பார்த்து விளையாடிய க்ருணால் பாண்டியா, வேகப்பந்துவீச்சாளர்கள் வரும்போது சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். முகேஷ் குமார் வீசவரும்போதெல்லாம் வெளுத்துவாங்கிய க்ருணால், 4 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என துவம்சம் செய்தார்.
26-க்கு 3 விக்கெட் காலி என்ற நிலையிலிருந்து அடுத்தடுத்து அரைசதமடித்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட க்ருணால் பாண்டியா மற்றும் விராட் கோலி ஜோடி, ஆர்சிபிக்காக ஒரு வரலாற்று சம்பவத்தை செய்தது. 51 ரன்கள் இருந்தபோது கோலி அடித்து ஆட முயற்சித்து வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த டிம் டேவிட் ஒரே ஓவரில் 1 சிக்சர் 3 பவுண்டரிகள் என விளாசி ஆர்சிபியின் வெற்றியை உறுதிசெய்தார். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது.
443 ரன்கள் குவித்த விராட் கோலி ஆரஞ்ச் தொப்பியையும், 18 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹசல்வுட் பர்ப்பிள் கேப்பையும் கைப்பற்றி அசத்தினர். 10 போட்டியில் 7-ல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி நடப்பு சீசனில் அதிக வெற்றிகள் குவித்த அணியாக மாறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 18 வருடத்தில் முதல்முறையாக வெளி ஆடுகளங்களில் விளையாடிய 6 போட்டிகளையும் வரிசையாக வென்று சாதனை படைத்துள்ளது ஆர்சிபி.
வெற்றிக்குபிறகு கடந்த போட்டியில் கேஎல் ராகுல் செய்த காந்தாரா செலப்ரெஷனை, அவருக்கு முன்பாகவே இரண்டு தடவை செய்து காட்டி கிண்டல் செய்தார் விராட் கோலி. சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசல்வுட் மற்றும் புவனேஷ்குமார் இருவரையும் பாராட்டிய கோலி, எங்கேயோ இருந்த போட்டியை மீட்டுஎடுத்துவந்த க்ருணால் பாண்டியாவையும் பாராட்டினார்.
விராட் கோலி ஃபார்ம் அவுட், அவரெல்லாம் டி20க்கு தேவையேயில்லை என சில ஐபிஎல் ரசிகர்கள் கலாய்த்துவரும் நிலையில், ஃபார்ம் அவுட்ல இருக்கும்போதே ஆரஞ்ச் தொப்பி விராட் கோலிகிட்ட இருக்குனா, ஃபார்ம்ல இருந்தபோது எப்படி இருந்திருப்பாரு என கோலியின் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.