எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு ஆர்சிபி அணியின் ரசிகர்கள் இந்த வருடம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து பெங்களூரு அணி அடைந்துவரும் வெற்றிகள்தான். வழக்கமாக ON PAPER நல்ல அணியாகத் தெரியும் பெங்களூரு களத்திற்குச் சென்றால் சொதப்பிவிடும். ’இம்முறை கோப்பை நமக்குத்தான்’ என ஒவ்வொரு முறையும் நம்பி நம்பி ஆர்சிபி ரசிகர்கள் ஏமார்ந்ததுதான் மிச்சம். ஆனால், இந்த வருடம் ஆர்சிபி அணியின் அணுகுமுறையானது ‘கப்புமேல ஆர்சிபின்னு எழுதுங்கப்பா’ என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது. விளையாடிய நான்கு போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று கெத்தாக வலம் வந்த பெங்களூரு அணி, 5வது போட்டியில் டெல்லி அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எதிர்கொண்டது.
தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று ‘நாங்கெல்லாம் இப்போ வேற மாதிரி’ என்ற நிலையிருந்த அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியும், இளம் கேப்டனாக மிரட்டும் ரஜித் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதுகிறது என்பதால் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் வான வேடிக்கை காட்டினார். சும்மா சொல்லக்கூடாது அடினா அடி அப்படி ஒரு அடி.
அக்சர் படேல் வீசிய இரண்டவாவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசப்பட்ட நிலையில், ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார் பில் சால்ட். 'வேல்ர்ட் க்ளாஸ் பவுலரா... welcome bro..' முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்ட அவர், அடுத்த மூன்று பந்துகளில் பவுண்டரிகள் விளாசியதோடு மீண்டும் ஒரு சிக்ஸரும் விளாசினார். அந்த ஓவரில் மட்டுமே 30 ரன்கள் வந்து சேர்ந்தது. பெங்களூரு அணி மூன்றே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்து ரசிகர்களை மிரளவைத்தது. சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ‘இன்னைக்கு 300 கன்ஃபார்ம்பா’ என ரசிகர்கள் குதூகலத்தில் இருக்க, இடியாய் இறங்கியது அந்த ரன் அவுட்.
ஆம், அக்சர் படேல் வீசிய நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸர் பறந்தாலும், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில்தான் ஆட்டத்தின் திருப்பு முனை நிகழ்ந்தது. பந்தை ஆப்சைடில் தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடினார் பில் சால்ட். ரன்னர் சைடில் இருந்த விராட் கோலி சற்றே முன்வந்தார். ஆனால், பந்து பீல்டர் கையில் சென்றதை பார்த்த விராட் கோலி சுதாரித்து மீண்டும் திரும்பிவிட்டார். ஆனால், சால்ட் என்ன செய்வதென்றே தெரியாமல் திரும்பி ஓடும்போது தட்டுதடுமாறினார். அதற்குள் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. மின்னல் வேகத்தில் கே.எல்.ராகுல் பந்தினை வாங்கி ரன் அவுட் செய்துவிட்டார். வெறும் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில், பில் சால்ட் நடையைக் கட்டினார். சரி ஒரு விக்கெட்தானே.. போனால் பரவாயில்லை.. பின்வரிசையில் வீரர்கள் இருக்கிறார்கள்., பார்த்துக்கொள்வார்கள். ஆனால், நாம் நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? அப்படி நடந்தால் ஆர்சிபி இந்நேரம் எத்தனை கப் வாங்கியிருக்க வேண்டும்? களத்தில் நடந்தது வேறு கதை.
வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து, டாடா பைபை சொன்னார் தேவ்தத் படிக்கல். அடுத்த ஓவரில் சிக்ஸர் விளாசி நம்பிக்கை கொடுத்த விராட் கோலி அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்து ஆர்சிபி ரசிகர்களின் நெஞ்சில் இடியை இறக்கினார். லிவிங்ஸ்டன் 4 ரன், ஜிதேஷ் ஷர்மா 3 ரன்னில் ஆட்டமிழக்க, பொறுப்பாக ஆடிவந்த கேப்டன் ரஜத் பட்டிதாரும் 25 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து ஆர்சிபிக்கு ஆட்டம் அவ்ளோதான் என்று நினைக்க வைத்தார். தொடக்கத்தில் மளமளவென ரன்கள் வந்த நிலையில், விக்கெட் சரிவால் ரன் கட்டுக்குள் வந்தது. குர்ணால் பாண்ட்யாவும் 18 ரன்களில் ஆட்டமிழக்க ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
சரி, 150 ரன்கள் கூட வராது என்று நினைத்த நேரத்தில் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி காட்டினார் டிம் டேவிட். 19 மற்றும் 20 ஆவது ஓவர்களில் தலா இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் என்ற கவுரவமான ரன்னை எட்டியது. டிம் டேவிட் வெறும் 20 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.
டெல்லி பந்துவீச்சாளர் அசத்தலாக செயல்பட்டார்கள். மிட்செல் ஸ்டார்க் மற்றும் அக்சர் பட்டேல் ரன்களை வாரி கொடுத்தாலும் மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களே கொடுக்காமல் பெங்களூரு அணியை திணறடித்தார்கள். குல்தீப் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும், விப்ராஜ் நிகம் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டையும் சாய்த்து அசத்தினர்.
‘164தான் அதிகமா டைம் எடுத்துக்காதீங்க’ என தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அக்சர் படேல் அறிவுறுத்தி அனுப்பினால் பவர் பிளேவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதை பார்க்க முடிந்தது. 10 ரன் எடுப்பதற்குள் தொடக்கவீரர்கள் டூபிளசிஸ், ஜாக் பிரசார் மெக்குர்க் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது டெல்லி. அபிஷேக் போரலும் 7 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுலுடன் இணைந்து கேப்டன் அக்சர் பட்டேலும் சற்று நேரம் தாக்குப்பிடித்தாலும் 15 ரன்களில் பொறுப்பற்ற ஷாட் விளையாடி அக்சர் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 58 ரன்னிற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், வெற்றி வாய்ப்பு பெங்களூரு அணிக்கே பிரகாசமாக இருந்தது. ஆனால், கேஎல்ராகுலும், ஸ்டப்ஸும் ’நாங்க இன்னும் இருக்கோம்’ என்று பெரிய சம்பவம் செய்தார்கள். தொடக்கத்தில் விக்கெட்டை பாதுகாக்க இருவரும் தடுப்பாட்டமே ஆடினார்கள்.
11 ஓவர்களில் வெறும் 67 ரன்கள் மட்டுமே டெல்லி எடுத்திருந்த நிலையில், இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் ஆகாது என, கொஞ்சம் கொஞ்சமாக அதிரடிக்கு மாறினார் கே.எல்.ராகுல். ஆர்சிபி அணியிடம் இருந்த வெற்றி வாய்ப்பை ஒற்றை ஆளாக தட்டிப்பறித்தார். ஆம், 12 ஆவது ஓவரில் இருந்து பவுண்டரியும், சிக்ஸருமாக பறக்கவிட்டு ஐ ஆம் க்ளாஸி ராகுல் என கெத்து காட்டினார் ராகுல். ஹசல்வுட் வீசிய 15 ஆவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்களுடன் 22 ரன்களை குவித்தார் கே.எல்.ராகுல். ஸ்டப்ஸும் தன் பங்கிற்கு பவுண்டரிகளை அடிக்க, யஷ் தயாள் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டி விளாசி வெற்றியை உறுதி செய்தார் கே.எல்.ராகுல். 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் கே.எல்.ராகுல் 93 ரன்களும், ஸ்டப்ஸ் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ‘நான் எதிரணிக்காக ஆடலாம்.. ஆனால், இது பெங்களூரு மண்,, அதாவது இது என் மண்.. நான் ஆடினால் முடிவு என்ன என்பதை நான்தான் சொல்லுவேன்’ என சொல்லாமல் சொல்லிச் சென்றார் ராகுல். அஃப்கோர்ஸ், அவர்தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி அணி தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதேபோல், பெங்களூரு அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரண்டாது தோல்வியை சந்தித்துள்ளது. குஜராத் அணியும், டெல்லி அணியும் 8 புள்ளிகளுடன் ஒரே இடத்தில் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் டெல்லி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் என்ன நடக்கப் போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.