கொல்கத்தா - ராஜஸ்தான் cricinfo
T20

’இதனால் தான் IPL பெஸ்ட்..’ ராஜஸ்தானை 1 ரன்னில் வீழ்த்தி KKR த்ரில் வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 சுற்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அனைத்து அணிகளும் பிளே ஆஃப் செல்வதற்கான போராட்டத்தில் இருந்துவருகின்றன.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தொடரை விட்டே வெளியேறியபோதும், இன்னும் ஒரு அணி கூட பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

அந்தளவு நடப்பு ஐபிஎல் சீசன் கடினமான ஒன்றாக இருந்துவரும் சூழலில், இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

206 ரன்கள் குவித்த கொல்கத்தா..

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இருவரும் களமிறங்க, 2வது ஓவரிலேயே நரைனை வெளியேற்றிய ராஜஸ்தான் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது.

ஆனால் அதற்குபிறகு கைகோர்த்த குர்பாஸ் மற்றும் ரஹானே இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய குர்பாஸ் 35 ரன்னிலும், 2 சிக்சர்கள் அடித்த ரஹானே 30 ரன்னிலும் வெளியேற 12.4 ஓவரில் 111 ரன்கள் அடித்தது கொல்கத்தா அணி.

அடுத்துவந்த ரகுவன்சி மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள், 57 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 206 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது. 25 பந்தில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்த ரஸ்ஸல், நடப்பு சீசனில் முதல் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய வருண்..

207 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை முதல் ஓவரிலேயே வெளியேற்றினார் அரோரா. அடுத்துவந்த ரத்தோர் 0 ரன்னில் வெளியேற 8 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி தடுமாறியது.

ஆனால் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரியான் பராக் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 34 ரன்கள் அடித்திருந்த ஜெஸ்வாலை அவுட்டாக்கிய மொயின் அலி கேகேஆர் அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.

அடுத்த ஓவரை வீச வந்த வருண் சக்கரவர்த்தி துருவ் ஜுரல் மற்றும் ஹசரங்கா இருவரையும் அடுத்தடுத்த பந்தில் 0 ரன்னுக்கு வெளியேற்ற ராஜஸ்தான் அணி 71 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

1 ரன்னில் கொல்கத்தா த்ரில் வெற்றி!

5 விக்கெட்டுகளை இழந்தபோதிலும் களத்திலிருந்த கேப்டன் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 6வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி, ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்யும் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மொயின் அலி வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்ட ரியான் பராக், வரிசையாக 6 சிக்சர்கள் அடித்து மிரட்டிவிட்டார்.

இவர்களில் ஒருவரையாவது வீழ்த்தினால் தான் வெற்றிபெற முடியும் என்ற இக்கட்டான நிலைமைக்கு கொல்கத்தா செல்ல, 16வது ஓவரையும், 18வது ஓவரையும் அபாரமாக வீசிய ஹர்சித் ரானா ஹெட்மயரை 29 ரன்னிலும், ரியான் பராக்கை 95 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

கடைசி 2 ஓவருக்கு 33 ரன்கள் தேவையென்ற கடினமான நிலைக்கு போட்டி செல்ல 19வது ஓவரில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த கொல்கத்தா அணி இழுத்துபிடித்தது. இறுதி 4 பந்துக்கு 19 ரன்கள் என போட்டி மாற, வைபவ் அரோரா வீசிய 3வது, 4வது மற்றும் 5வது பந்தில் 6, 4,6 என பறக்கவிட்ட ஷுபம் துபே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கடைசி 1 பந்துக்கு 3 ரன்கள் என போட்டி மாற, யாருக்கு வெற்றிபோகப்போகிறது என்ற பரபரப்பான நிலைக்கு சென்றது ஆட்டம். கடைசி பந்தை சிறப்பாக வீசிய அரோரா 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுக்க 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மீதமிருக்கும் அனைத்து போட்டிகளையும் வென்றால் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் முக்கியமான வெற்றியை பதிவுசெய்துள்ளது கொல்கத்தா அணி.