18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது.
இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வீரர்கள் பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் சின்னசாமி மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.
இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பெங்களூரு கோர சம்பவத்தை கண்டித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து 5ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியது.
விசாரணையில் கர்நாடகா அரசுக்கு 9 கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற நிர்வாகிகள், அதற்கான உரிய பதில்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென வழக்கை ஒத்திவைத்தனர்.
நீதிபதிகள் எழுப்பிய 9 கேள்விகள்:
1. வெற்றி கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்தது யார்? எப்போது? எந்த முறையில் முடிவெடுக்கப்பட்டது?
2. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
3. மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
4. நிகழ்வில் மருத்துவம் உள்ளிட்ட என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன?
5. மக்கள் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?
6. காயம் அடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் மருத்துவ நிபுணர்கள் உரிய சிகிச்சை அளித்தனரா? இல்லையென்றால் ஏன் அளிக்கப்படவில்லை?
7. காயமடைந்தவர்கள் எவ்வளவு நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்?
8. இதுபோன்ற கொண்டாட்டங்களில் 50,000- க்கும் மேற்பட்டோர் கூடினால், கூட்டத்தை நிர்வகிக்க ஏதேனும் வழிகாட்டுதல் வகுக்கப்பட்டு உள்ளதா?
9. நிகழ்ச்சி நடத்த எப்போது அனுமதி கோரப்பட்டது..?
9 கேள்விகள் குறித்து பதிலளித்திருக்கும் கர்நாடகா அரசு, ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தை நடத்த அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஆனால் எந்த அனுமதியும் இன்றி நிகழ்ச்சியை நடத்த ஆர்சிபி முழு உலகத்தையே அழைத்தது என்றும், ஏற்பட்ட துயரச்சம்பவத்திற்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என குற்றஞ்சாட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆர்சிபி உடன் பிசிசிஐ-க்கும் ஒரு ஒப்பந்தம் இருந்ததாக கர்நாடகா அரசு மேலும் குற்றஞ்சாட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சஷி கிரண் ஷெட்டி, நடந்த கோர சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும், இந்த நிகழ்விற்கான பாதுகாப்பு, நுழைவு வாயில் மற்றும் டிக்கெட் மேலாண்மை தொடர்பாக ஆர்சிபி மற்றும் பிசிசிஐ இடையே ஒரு ஒப்பந்தம் இருந்ததாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், அரசு தரப்பில் நிகழ்ச்சியை நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, அதேநேரத்தில் நிகழ்வில் பங்கேற்க முழு உலகத்தையும் ஆர்சிபி அழைத்ததாக அவர்களின் சமூகவலைதள டிவீட்கள் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. 33,000 பேர் மட்டுமே கூடவேண்டிய இடத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கூடியதாகவும் அரசு குற்றஞ்சாட்டியது. அவர்கள் "அனைத்து ஆதரவாளர்களும் உற்சாகப்படுத்த அழைக்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டனர்", ஆர்சிபியின் இந்த நடவடிக்கைகள் பெரிய அளவிலான குழப்பம், காயங்கள் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுத்தன என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அனுமதி கோரப்பட்டதா என்ற கேள்விக்கு, இறுதிப்போட்டி நடத்தப்பட்ட ஜுன் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு கார்நாடக கிரிக்கெட் சங்கம் மூலம் அரசுக்கு நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம் என ஒரு கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டது. மாறாக அணிவகுப்பு மற்றும் மைதானத்தில் கொண்டாட்ட விழாவிற்கு எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் பெறப்படவில்லை. "அவர்கள் அனுமதி கூட கேட்கவில்லை, மாறாக தகவல்களை மட்டுமே வழங்கினர். 'வெற்றி அணிவகுப்புக்கான திட்டங்களை நாங்கள் செய்வோம்' என்று அவர்கள் கூறினர். அவர்கள் நினைத்ததை செய்யவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்” என அரசு தரப்பில் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டது.