dk shivakumar PTI
T20

சோகமாக மாறிய RCB வெற்றிக் கொண்டாட்டம் | நெரிசலில் 11 பேர் பலி.. மன்னிப்பு கேட்ட துணை முதல்வர்!

RCB வெற்றிக் கொண்டாட்டத்தைக் காண பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

Prakash J

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதை, அந்த அணி வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், அவ்வணி வீரர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வீரர்கள் பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் சின்னசாமி மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயமடைந்தவர்கள் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் போராடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர், “ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை; பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம். 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த விஷயத்தில், மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சியை சீக்கிரமே முடித்துவிட்டோம். நிகழ்ச்சி 10 நிமிடங்களில் முடிந்தது. எல்லாவற்றையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.