Jasprit Bumrah எக்ஸ் தளம்
T20

”அது நியாயமில்லை.. அணிதான் முக்கியம்” - டெஸ்ட் கேப்டன்ஷிப் குறித்து மவுனம் கலைத்த பும்ரா!

டெஸ்ட் கேப்டன்ஷிப் குறித்து ஜஸ்பிரித் பும்ரா மவுனம் கலைத்துள்ளார்.

Prakash J

மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில், அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு டெஸ்ட் கேப்டன்ஷிப் வழங்கப்படாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகின.

ஷுப்மன் கில்

அதன்படியே, பும்ராவிற்குப் பதில் ஷுப்மன் கில்லே டெஸ்ட் கேப்டனாகப்பட்டார். இந்திய அணியின் எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், பிசிசிஐயின் இந்த விளக்கத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. ஆயினும், இதுதொடர்பாக ஜஸ்பிரித் பும்ரா எந்த தகவல்களையும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.

இந்த நிலையில், டெஸ்ட் கேப்டன்ஷிப் குறித்து அவர் மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர், “ரோகித் மற்றும் விராட் ஓய்வு பெறுவதற்கு முன்பு இங்கிலாந்திற்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எனது பணிச்சுமை குறித்து பிசிசிஐயிடம் பேசினேன். இந்த தொடரில் எனது பணிச்சுமை குறித்து நான் மருத்துவக் குழுவினருடன் கலந்துரையாடினேன். ஆகையால், ’5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் என்னால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியாது. இதனால், கேப்டன்ஷிப் பதவிக்கு என்னைப் பரிசீலிக்க வேண்டாம்’ என பிசிசிஐயிடம் வலியுறுத்தினேன்.

பும்ரா

பிசிசிஐ என்னை கேப்டன்ஷிப் பதவிக்குப் பரிசீலித்தது. ஆனால், அது நியாயமில்லை என்று கூறி நிராகரித்துவிட்டேன். ஏனெனில், ஒருவர் 3 போட்டிகளுக்கு தலைமை தாங்கிவிட்டு, மற்ற போட்டிகளுக்கு வேறு ஒருவர் தலைமை ஏற்பது அணிக்கு நியாயமாக இருக்காது. நான் எப்போதும் அணியை முதன்மைப்படுத்த விரும்பினேன். அதான் கேப்டன்ஷிப்பை விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.