ரோஹித் சர்மா... விராட் கோலி... ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததால், இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து தொடரை எதிர்கொண்டுள்ளது.
இரண்டு மூத்தவீரர்கள் இல்லாத சூழலில் யார் பேட்டிங்கில் அணியை முன்னின்று வழிநடத்தப்போகிறார்கள் என்ற கவலை நீடித்த நிலையில், முதல் போட்டியில் சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது போட்டியிலும் அரைசதம் விளாசி நம்பிக்கை கொடுத்து வருகிறார்.
முதல் டெஸ்ட்டில் 101 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இங்கிலாந்துக்கு எதிராக 90-க்கு மேல் டெஸ்ட் சராசரி வைத்து ஆஸ்திரேலியாவின் டான் பிரேட்மேன் சாதனையை முறியடித்திருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய ஃபார்மை தொடர்ந்துவரும் ஜெய்ஸ்வால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 900 ரன்களை நெருங்கியிருக்கும் ஜெய்ஸ்வால், ஒட்டுமொத்தமாக 21 டெஸ்ட் போட்டிகளிலும் 16 முறை 50+ ஸ்கோர்களை அடித்து மிரட்டியுள்ளார்.
21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வால், அதில் 11 முறை அரைசதங்களையும், 5 முறை சதங்களையும் பதிவுசெய்துள்ளார். அந்த 5 சதங்களில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும்.
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து விளையாடிவருகிறது. ஜெய்ஸ்வால் 84 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 28 ரன்களுடனும் களத்தில் விளையாடிவருகின்றனர்.