2007 டி20 உலகக்கோப்பையா? 2024 டி20 உலகக்கோப்பையா? எந்த வெற்றி மறக்கமுடியாத வெற்றி என்ற கேள்வி எழுப்பப்பட்டால், வெறித்தனமான இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கூட ஒரு வெற்றியை குறிப்பிட்டு சொல்லமுடியாது. அப்படியான காலத்திற்கும் அழியாத இரண்டு ஐகானிக் தருணங்களை இந்திய அணி கொண்டுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற தருணம் இன்னும் ஒரு மேஜிக் போலவே இருந்துவருகிறது. கடைசி 30 பந்துக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை, களத்தில் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் இருக்கிறார்கள் எனும்போது ஆட்டம் 99.9% தென்னாப்பிரிக்காவின் கைகளிலேயே இருந்தது.
ஒரு ஓவருக்கு 30 ரன்களை அடிக்கும் டி20 வடிவத்தில் 30 பந்தில் 30 ரன்களை அடிக்கவிடாமல் இழுத்துப்பிடித்து கோப்பை வென்றதெல்லாம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதிலும் சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் தங்கத்திற்கு ஈடானது.
தலைக்குமேல் அழுத்தம் இருந்தபோதும் நடுக்கத்தை கால்களில் காட்டாமல், பவுண்டரி லைனில் அப்படியொரு கேட்ச் எடுப்பதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று இறைவனுக்கு தான் வெளிச்சம். அதனால் அது இந்திய கிரிக்கெட்டின் மேஜிக் தருணமாக பார்க்கப்படுகிறது. இப்படியான மேஜிக் இருந்தால் தான் உங்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியும்.
விராட் கோலி 76 ரன்கள் - 2024 டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் விராட் கோலியிடமிருந்து சொல்லிக்கொள்ளும் அளவு ரன்கள் வரவில்லை, மாறாக சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினார். கோலியின் மோசமான பேட்டிங் குறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டபோது, அவர் ‘இறுதிப்போட்டிக்காக அனைத்தையும் சேமித்து வைத்திருக்கிறார்’ என கோலியின் பக்கம் நின்று பேசினார். அதேபோல இறுதிப்போட்டியில் இறுதிவரை நிலைத்துநின்று ஆடிய விராட் கோலி 76 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவினார்.
பும்ரா மேட்ச் சேவிங் ஓவர் - கடைசி 30 பந்துக்கு 30 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது 16வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா, 18வது ஓவரில் மார்கோ யான்சனின் விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமில்லாமல் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.
ரிஷப் பண்ட் போலியான ஆக்டிங் - அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கிளாசன், அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களை யோசிக்க விடாமல் வெளுத்துக்கொண்டிருந்தார். வேகமாக போட்டி தென்னாப்பிரிக்காவின் பக்கம் சென்றுகொண்டிருந்தது. இப்படியே போனால் தென்னாப்பிரிக்காவுக்கு தான் வெற்றி என்ற நிலைமை இருந்தது.
சரியான நேரத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட, பிஸியோ களத்திற்கு வந்து ட்ரீட்மெண்ட் செய்ய சிறிது நேரம் இடைவெளி இந்தியாவிற்கு கிடைத்தது. சிறிய இடைவெளிக்கு பிறகு போட்டி தொடங்கிய போது ஹர்திக் பாண்டியா வீசிய ஸ்லோயர் டெலிவரியை கணிக்காத க்ளாசன் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட்டின் காயத்தால் ஏற்பட்ட சிறிய இடைவெளி போட்டியில் இந்தியா திரும்பி வர காரணமாக இருந்தது. ஆனால் கோப்பை வென்றதற்கு பிறகான நேர்காணலில் அது நடிப்பு என்றும், தனக்கு காயம் ஏற்படவில்லை என்றும் பண்ட் தெரிவித்தார்.
சூர்யகுமார் யாதவ் கேட்ச் - போட்டியை தலைகீழாக மாற்றிய தருணம் என்றால் அது சூர்யகுமார் பிடித்த கேட்ச் தான், ஒருவேளை அந்த கேட்ச் சிக்சராக மாறியிருந்தால் இந்தியா நிச்சயம் தோல்வியையே சந்தித்திருக்கும். காரணம் ஐபிஎல்லின் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மில்லரும், ஹர்திக் பாண்டியாவும் நிறைய ஒன்றாக விளையாடி இருந்ததால், டேவிட் மில்லரால் எளிதாக போட்டியை முடித்திருக்க முடியும். ஆனால் ஒரு நம்பமுடியாத கேட்ச்சை எடுத்த சூர்யகுமார் யாதவ், கேட்ச் மூலமும் கை நழுவி போன கோப்பையை பிடித்து அசத்தினார்.
ஹர்திக் பாண்டியா ஸ்பெல் - கோப்பை வென்றதில் ஹர்திக் பாண்டியாவின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது. அழுத்தம் நிறைந்த ஓவர்களை அவரே எதிர்கொண்டார். 17வது ஓவரில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ஹர்திக் பாண்டியா, இறுதி ஓவரில் 16 ரன்களை டிஃபண்ட் செய்து இந்தியாவை கோப்பைக்கு அழைத்துச்சென்றார். ஹர்திக் இல்லையென்றால் வெறுங்கையோடு நின்றிருப்போம் என சமீபத்திய நேர்காணலில் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.
கிரேட் கேப்டன்சி - மற்றவீரர்கள் எல்லோருக்கும் இருந்ததைவிட அதிக அழுத்தத்தில் இருந்தவர் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே. 2023 ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து மீண்டுவர சிரமப்பட்ட ரோகித் சர்மா, மீண்டும் ஒரு தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஆனால் அழுத்தமான அந்த நேரத்திலும் பவுலர்களை சிறப்பாக பயன்படுத்திய ரோகித் சர்மா தென்னாப்பிரிக்காவிற்கு அழுத்தத்தை அதிகமாக்கினார். முடிவில் அவருடைய சிறந்த கேப்டன்சிக்கு பலனாய் உலகக்கோப்பை கைகளில் வந்துசேர்ந்தது.
இப்படி ஒரு கூட்டு முயற்சியை இந்தியா இதுவரை காட்டியதில்லை, இந்த வெற்றியை காலத்திற்கும் இந்திய ரசிகர்கள் போற்றுவார்கள் என்றால் பொய்யாகாது.