2025 ஐபிஎல் தொடர் பாதி கிணறை தாண்டிவிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலிய அணிகள் 5 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்த சூழலில் முதல் 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அதற்கடுத்த 3 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றிபெற்று கம்பேக் கொடுத்துவருகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி, மும்பை பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர்.
அற்புதமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட் அதிரடி வீரர்களான டிராவிஸ் ஹெட்டை 0 ரன்னிலும், அபிஷேக் சர்மாவை 8 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டார். உடன் களத்திற்கு வந்த இஷான் கிஷன் மற்றும் நிதிஷ் ரெட்டியை 1, 2 ரன்கள் என அவுட்டாக்கிய தீபக் சாஹர் சன்ரைசர்ஸ் அணிக்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.
13 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைத்ராபாத் அணியை மீட்டு எடுத்துவரும் போராட்டத்தில் க்ளாசன் மற்றும் அனிகேத் வர்மா இணைந்தனர். ஆனால் அனிகேத்தை 12 ரன்னில் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளியேற்ற 35 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி, ’என்ன பா நடக்குது இங்க’ என்ற மோசமான நிலைக்கு சென்றது.
அனைவரும் வெளியேறினாலும் தனியொரு ஆளாக களத்தில் நின்ற கிளாசன், 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கி 71 ரன்கள் அடித்து வெளியேறினார். மறுமுனையில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்ட அபினவ் மனோகர் 43 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் 143 ரன்களை மட்டுமே அடித்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.
போட்டியின் போது இஷான் கிஷனுக்கு வழங்கப்பட்ட அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னிங்ஸின் 3வது ஓவரை தீபக் சாஹர் வீச இஷான் கிஷன் எதிர்கொண்டார். லெக் சைடில் வொயிடு போல் வந்த பந்தினை ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன் அடிக்க முயன்ற நிலையில் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது .
பந்துவீச்சாளர் தீபக் சாஹர் உள்ளிட்ட மும்பை வீரர்கள் யாரும் விக்கெட் கேட்காத நிலையிலும், அம்பயர் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என நினைத்து நினைத்து கையை மேலும் கீழுமாக உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக குழப்பத்தில் இருந்தார். ஆனாலும் யாரும் அப்பீல் செய்யாதபோதிலும் தடாலடியாக அவுட் கொடுத்தார்.
இஷான் கிஷனும் அம்பயர் முடிவை எதிர்த்து ரிவிவ்யூ கேட்காமல் தானாக நடந்து சென்றுவிட்ட நிலையில், அவுட் உறுதிசெய்யப்பட்டது. ஆனால் ரிப்ளேவில் பந்து பேட்டில் படாதது தெரியவந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சித்து வருகின்றனர்.