ipl 2025 x
T20

மே 17-ம் தேதி முதல் IPL மீண்டும் தொடக்கம்.. இறுதிப்போட்டி ஜுன் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 2025 ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் மே 17 முதல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசிப் நேற்று இரவு முதல் போரைத் தொடங்கியது.

இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்ததுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்தது.

operation sindoor

இந்த சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அமெரிக்காவின் நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாகவும், உடனடியாகவும் சண்டையை நிறுத்த ஒப்புதல் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்மப் தெரிவித்திருந்தார். அதனை இந்திய அரசும் உறுதிசெய்த நிலையில், தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்படும் தேதிக்கான விவரங்களை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்..

போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், மே 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்றும், இறுதிப்போட்டி ஜுன் 3-ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஐபிஎல் அறிவிப்பில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டாடா ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. அரசு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் நடத்திய விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, சீசனின் மீதமுள்ள போட்டிகளைத் தொடர வாரியம் முடிவு செய்துள்ளது.

மீதமுள்ள மொத்தம் 17 போட்டிகள் 6 மைதானங்களில் நடைபெறும், மே 17, 2025 அன்று தொடங்கி ஜூன் 3, 2025 அன்று இறுதிப் போட்டியுடன் முடிவடையும். திருத்தப்பட்ட அட்டவணையில் இரண்டு முறை ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெறும், அவை இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

பிளேஆஃப்கள் பின்வருமாறு,

தகுதிச் சுற்று 1 - மே 29

எலிமினேட்டர் - மே 30

தகுதிச் சுற்று 2 - ஜூன் 1

இறுதிச் சுற்று - ஜூன் 3

பிளேஆஃப் போட்டிகளுக்கான இடம் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.