இந்த இரண்டு நாள்களும் 2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் நடக்கப் போகிறது. ஒவ்வொரு அணியும் புதிய ஸ்குவாடை கட்டமைக்கும் முயற்சியில் இருங்கியிருக்கிறார்கள். நாம் ஒவ்வொரு அணியைப் பற்றியும் அலசிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கட்டுரையில் பஞ்சாப் கிங்ஸ் பற்றிப் பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ் இந்த ஏலத்துக்கு முன்பாக வெறும் 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்தது - பிரப்சிம்ரன் சிங் மற்றும் சஷாங்க் சிங். இருவருமே அன்கேப்ட் வீரர்கள் என்பதால், அவர்களுக்கு 9.5 கோடி மட்டுமே செலவாகியிருக்கிறது. அதனால் அந்த அணி 110.5 கோடி ரூபாயுடன் ஏலத்தில் களமிறங்கப்போகிறது. போக, கையில் 4 RTM கார்ட்களும் வைத்திருக்கும்.
பஞ்சாப் கிக்ஸின் இந்த முடிவு வழக்கம்போல் கேலிகளையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. வழக்கம்போல் கோட்டை ஒட்டுமொத்தமாக அழித்து மீண்டும் தவறு செய்கிறார்காள் என்று பேசப்படுகிறது. ஆனால், ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். ஐபிஎல் விதிப்படி, தக்கவைக்கப்படும் முதல் கேப்ட் வீரருக்கு 18 கோடி ரூபாய் செலவு செய்யவேண்டிய தேவை ஏற்படும். இருவரை ரீடெய்ன் செய்தால் மொத்தம் 32 கோடி செலவு செய்யவேண்டும்.
பஞ்சாப் அணியில் கடந்த ஆண்டு ஆடிய வீரர்களில் தக்கவைப்பதற்கு ஏற்ற வீரர்கள் என்றால் ஆர்ஷ்தீப் சிங், ககிஸோ ரபாடா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன் ஆகிய நால்வர் தான். அவர்களுள் ஒரு மூன்று பேரை சேர்த்து மொத்தமாக நிச்சயம் 43 கோடிக்கும் குறைவாக இந்த ஏலத்தில் எடுக்க முடியும். யாரும் நிச்சயம் 18 கோடிக்கு மேல் போகப் போவதில்லை. அதனால் அந்த அணி அவர்களை ரிலீஸ் செய்து கொஞ்சம் பணத்தை மிச்சம் செய்யலாம் என்றுகூட நினைத்திருக்கலாம். இல்லை 2 அன்கேப்ட் வீரர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அஷுதோஷ் ஷர்மா போன்ற ஒருவரையும் கூட தக்கவைத்திருக்கலாம். ஆகையால், இது விதிகள் காரணமாகவே எடுக்கப்பட்ட முடிவாக இருக்கக்கூடும். மொத்த அணியையும் மாற்றவேண்டும் என்ற எண்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை.
அப்படி முன்னாள் வீரர்களை தக்கவைக்கவேண்டும் என்ற பஞ்சாப் நினைத்தால் லிவிங்ஸ்டன், ஆர்ஷ்தீப், அஷுதோஷ் மூவரையும் நிச்சயம் அவர்கள் மீண்டும் வாங்கவேண்டும். ஆர்ஷ்தீப் கொஞ்சம் எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்குப் போகலாம். ஆனால், அவர் நிச்சயம் அந்த அணிக்கு மிகப் பெரிய ஆயுதமாக இருப்பார். அவர்கள் மூவரையும் மீண்டும் கொண்டுவர எப்படியும் 30-40 கோடி வரை ஆகலாம். ரபாடா, கரன் ஆகியோரை தக்கவைக்கவேண்டும் என்பது அவ்வளவு அவசியம் இல்லை. ரபாடா பஞ்சாப்புக்கு தன்னுடைய சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. சாம் கரணும் ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. போக, அந்த அணி இந்தியாவின் மார்க்கீ நட்சத்திரங்களை வாங்க முனையும் என்பதால், வெளிநாட்டு வீரர்களில் அதிகம் செலவு செய்யாமல் இருப்பதும் நல்லது.
இப்போது அந்த நட்சத்திர வீரர்களின் பக்கம் வருவோமே.. எப்படியும் ரிஷப் பண்ட்டை பஞ்சாப் கிங்ஸ் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை யாரும் பெறாத தொகையை இந்த ஏலத்தில் பெறலாம். ஆனால், அவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பர்ஸ் அதை சாத்தியப்படுத்தும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் பழைய பௌலிங் யூனிட்டை மீண்டும் அப்படியே தக்கவைக்கலாம். இல்லை முழுமையாக மாற்றலாம். இங்குதான் அவர்களின் முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஹர்ஷல் படேல் 2024 சீசனில் பர்ப்பிள் கேப் வென்றார். ஆனால் அவர் ஓவருக்கு சுமார் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ரபாடா கொஞ்சம் சிக்கனமாக இருந்தாலும், அவரால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. அவரால் பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஸ்பின்னர் ராகுல் சஹாருக்கும் அதே கதிதான். அவர் ஒருசில போட்டிகளில் பெஞ்சிலும் அமரவைக்கப்பட்டார். இப்படி எல்லோருமே சுமாரான செயல்பாட்டையே கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே அதை மாற்றக்கூடியவர்கள். அவர்களோடு தொடரப்போகிறார்களா இல்லை மாற்றம் கொண்டுவரப்போகிறார்களா என்பதை பஞ்சாப் நிர்வாகம் முடிவு செய்யவேண்டும்.
அப்படி அவர்கள் மாற்றத்தின் பக்கம் நகர்ந்தால், முன்னாள் வீரர்கள் ஷமி, நடராஜன் ஆகியோரை அழைத்து வருவது உதவிகரமாக இருக்கலாம். ஷமி பவர்பிளேவை கவனித்துக்கொண்டால், நடராஜன் டெத் ஓவர்களை பார்த்துக்கொள்வார். அதீத தொகை இருப்பதால் அவர்கள் ஆர்ச்சர் போன்ற ஒரு மிரட்டல் வேகப்பந்துவீச்சாளரையும் கூட வாங்க முயற்சி செய்யலாம். அது அவர்களுக்கு புதிய மாற்றத்தைக் கொண்டுவரலாம்!