IPL 2025 Qualifier 1 PBKS vs RCB  PT
T20

101 ரன்னில் ஆல் அவுட்! நெருப்பாக பந்துவீசிய ஆர்சிபி வீரர்கள்.. படுத்தேவிட்ட பஞ்சாப் அணி!

பெங்களூரு அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் அணி மோசமான பேட்டிங் காரணமாக 101 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

Rajakannan K

ஐபிஎல் 2025 சீசனில் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆஃப் போட்டியில் தொடங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபர் போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணி மும்பையையும், பெங்களூரு அணி லக்னோவையும் வீழ்த்தி நம்பிக்கையுடன் இன்றைய போட்டியை களம் கண்டன.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷியும், பிரப்சிம்ரன் தொடக்க வீரர்களாக இறங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டன. இரண்டாவது ஓவர் வீச வந்த யஷ் தயாள் விக்கெட் வேட்டையை தொடங்கி வைத்தார்.

பிரியான்ஷி அழகாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்பொழுது தொடங்கிய விக்கெட் வீழ்ச்சி அதன் பிறகு நிற்கவே இல்லை. ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு விக்கெட் வீழ்ந்து கொண்டே இருந்தது. பஞ்சாப் அணியா இது என்று வியக்கும் அளவுக்கு பேட்டிங் மோசமாக இருந்தது.

7 ரன்னில் பிரியான்ஷி போன வேகத்தில் பிரப்சிம்ரன் 18, ஸ்ரேயாஸ் 2, ஜோஷ் இங்க்லிஷ் 4, வதேரா 8 ரன்னில் ஆட்டமிழந்தது அடுத்தடுத்து நடையைக் கட்டினர். ஸ்டொய்னிஸ் மட்டும் சற்று நேரம் தாக்குபிடிக்க ஷஷாங் சிங் 3, முஷீர் கான் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஸ்டொய்னிஸ்-ம் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 101 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பஞ்சாப் அணியில் இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தனர். மற்ற 8 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆர்சிபி அணியில் ஹசல்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட் சாய்த்தனர். யஷ் தயாள் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். புவனேஸ்வர் குமார், ஷெப்பெர்ட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 102 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது. விராட் கோலி 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.