GT | சுப்மன் கில் | குஜராத் டைட்டன்ஸ்
GT | சுப்மன் கில் | குஜராத் டைட்டன்ஸ் file image
T20

IPL 2024 | GT | சுப்மன் கில் தலைமையில் திறமையை நிரூபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? பலமும் பலவீனமும்!

Nithish

2022 சீசனுக்கான மெகா ஏலம் முடிந்தபோது, 'பும்ராவும் ஆர்ச்சரும் ஒரே டீம்லயா?', 'அஸ்வின், சாஹல் ஸ்பின் அட்டாக் ஒரே டீமுக்காகவா?' என ஒவ்வொரு அணியையும் பார்த்து மிரண்டுகொண்டிருந்தார்கள் ரசிகர்கள், ஏன் வல்லுநர்களுமே கூட. ஆனால் அத்தனை பேரும் கேள்விக்குறியாய் பார்த்தது குஜராத் டைட்டன்ஸ் ஒரு அணியை மட்டும்தான்.

ஏலத்தில் குஜராத் அணி எடுத்ததில் 90 சதவீதம் பேர் பவுலர்கள் அல்லது ஐ.பி.எல் பரிச்சயமே அவ்வளவாக இருந்திடாத முகங்கள். 'டீம்ல இருக்குற 11 பேருமே ஆளுக்கு ரெண்டு ஓவர் போடலாம் போல' என்கிற அளவுக்கு பவுலர்களின் பட்டியல் நீளம்.

Rohit Sharma and Hardik Pandya

எனக்கு கிட்டத்தட்ட 2008-ன் பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பார்ப்பது போலவே இருந்தது. 'இவன் சரிப்படமாட்டான்' என அப்போதே சூர்யவம்சம் சின்ராசைப் போல அந்த அணியை ஒதுக்கிவைத்தது மொத்த ஐ.பி.எல் சமூகமும். 'ஆனா நான் சின்ராசு இல்ல ராஜா, அறை எண் 305-ன் கடவுள்ல வர்ற ஜாவா சுந்தரேசன்' என மற்ற அணிகளை ஓவர்டேக் செய்து சாம்பியனானது குஜராத்.

'அது ஏதோ லக்கு. ஒன் சீசன் வொண்டர் இந்த டீம்' என அடுத்த வருஷமும் விமர்சனக் கணைகள் வரிசைகட்டின. எல்லாரின் கணிப்பையும் பொய்யாக்கி ஆளானப்பட்ட சி.எஸ்.கேவுக்கே ஆட்டம்காட்டி கடைசி பந்தில் கோப்பையை தவறவிட்டது ஜி.டி.

'இனிமே இவங்களை லேசுல நினைக்கக்கூடாது' என அனைவரும் சுதாரித்த நொடியில் அணி நிர்வாகத்திற்கு பெரிய ஆப்பாக இறக்கினார் ஹர்திக் பாண்ட்யா. கோப்பை வென்ற கேப்டன் ஏலத்திற்கு முந்தைய ட்ரேடிங்கில் வேறு அணிக்கு மாறுவது இதுவே முதல்முறை. விளைவு, குஜராத் அணியின் மிடில் ஆர்டர், கேப்டன்சி பொறுப்பு, இந்திய ஆல்ரவுண்டர் இடம் என மூன்று முக்கிய பொறுப்புகளிலும் ஓசோன் அளவுக்கு ஓட்டை. சட்டென கில்லை கேப்டனாக அறிவித்து சுதாரித்துக்கொண்டாலும் எஞ்சிய இரண்டு பொறுப்புகளை சமாளிக்க ஏலத்தையே நம்பி இருந்தது அணி. நினைத்தது நடந்ததா?

Mohammed Shami | Mohit Sharma |Hardik Pandya

ஹர்திக் பாண்ட்யாவை விடுவித்தபின் 38.15 கோடி என்கிற பெரிய தொகையோடு ஏலத்திற்குள் வந்தது குஜராத். கிட்டத்தட்ட பாண்ட்யாவின் வளர்ந்துவரும் வெர்ஷனான ஆப்கன் ஆல்ரவுண்டர் ஓமர்சாயை 50 லட்சம் என்கிற அடிப்படை விலைக்கே வாங்கியது சூப்பர் டீல். மிடில் ஆர்டர் பிரச்னையை சரிசெய்ய ஷாருக் கான், ஜார்க்கண்டின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ் இருவரையும் தூக்கினார்கள். ராபின் மின்ஸ் ஐ.பி.எல்லில் ஆடும் முதல் பழங்குடி இன வீரர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த இரு வீரர்களுமே கடைசி நிமிடம் வரை சி.எஸ்.கே ரேடாரில் இருந்தார்கள் என்பதே சொல்லும் அவர்களின் முக்கியத்துவத்தை. ஆனால் இறுதி வெற்றி குஜராத் அணிக்கே. கூடவே 150 கி.மீ வேகத்தில் பந்தைக் குத்தி ஏத்தும் ஸ்பென்ஸர் ஜான்சனையும் பத்துகோடி கொடுத்து எடுத்தார்கள். இந்திய பேக்கப்பாக உமேஷ் யாதவையும் 5.8 கோடிக்கு எடுத்தார்கள். இவ்வளவுக்கும் பிறகு ஹாட்ரிக் பைனல் செல்லும் அளவு பலமான அணியாக இருக்கிறதா குஜராத் டைட்டன்ஸ்? குழப்பங்களையும் கேள்விகளையும் தாண்டி கோப்பையை வெல்லுமா?

பலம் :

தொட்டாலே பறக்கும் பேட்டிங் :

ஐ.பி.எல்லில் சிறந்த பேட்டிங் கோர் கொண்ட அணிகளுள் ஒன்று குஜராத். ஓபனிங் கில். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் கில்லின் ஃபார்மை சொல்லவே வேண்டாம். கடந்த சீசனின் ஆரஞ்ச் கேப். இவர் அடிப்பாரா மாட்டாரா என்பதைத் தாண்டி கோலியின் சிங்கிள் சீசன் ரெக்கார்டான 973 ரன்களை கில் தாண்டுவாரா மாட்டாரா என்பதுதான் இங்கே கேள்வி.

ஒன் டவுனில் நம் மண்ணின் மைந்தன் சாய் சுதர்ஷன். எக்கச்சக்க பிரஷரைக் கொண்ட ஐ.பி.எல் பைனலிலேயே சென்னைக்கு தண்ணிகாட்டிய அஞ்சாநெஞ்சன். டி20 ஸ்பெஷலிஸ்ட்டான டேவிட் மில்லர், திடீர் திடீரென அடித்து வெளுக்கும் ராகுல் திவேதியா, 'பத்தே பால் போதும் பட்டையைக் கெளப்புவேன்' என இறங்கியடிக்கும் அபினவ் மனோகர், போதாக்குறைக்கு இப்போது பினிஷர் ஷாருக், ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் விஜய் ஷங்கர், டெயில் எண்டில் பந்தை பறக்கவிடும் ஓமர்சாய், ரஷித் கான் என முழுக்க முழுக்க மேட்ச் வின்னர்களாலான பேட்டிங் செட்டப் இது. இந்த சீசன் முழுக்க பேட்டிங்கை மட்டும் நம்பியே குஜராத் களமிறங்கும்.

Gill - Hardik

இந்திய பேக்கப் :

அணியின் எல்லா பொசிஷனுக்கும் ஏதோவொரு வகையில் இந்திய பேக்கப்பை பக்காவாக பெஞ்ச்சில் செட் செய்து வைத்திருக்கிறார் கோச் நெஹ்ரா. விஜய் ஷங்கர், அபினவ் மனோகர், ஷாருக் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். மூவருமே மிடில் ஆர்டரில் எந்த பொசிஷனிலும் இறங்கி பினிஷர் ரோலை ஆடக்கூடியவர்கள். ஸ்பின்னிலும் திவேதியாவைத் தாண்டி ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால் இருக்கவே இருக்கிறார்கள் சாய் கிஷோரும் ஜெயந்த் யாதவ்வும். சாஹாவுக்கும் பேக்கப்பாக எடுக்கப்பட்டவர்தான் ராபின் மின்ஸ். ஆனால் காயம் காரணமாக அவர் இந்த சீசன் ஆட வாய்ப்பில்லை என சொல்லிவிட்டார் ஆஷிஷ் நெஹ்ரா.

பலவீனம் :

ஷமி எனும் ஆயுதம் :

பவர்ப்ளேயில் ஷமியை எதிர்கொள்ளவே கடந்த சீசனில் தயங்கினார்கள் மற்ற அணி பேட்ஸ்மேன்கள். 'எப்படியாவது இவர் ஓவரைக் கடத்திட்டு அடுத்த ஓவர்ல பாத்துப்போம்' என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனாலும் போன முறை அதிக விக்கெட்கள் வீழ்த்தி ஊதா தொப்பி வென்றது ஷமிதான். 17 போட்டிகளில் 28 விக்கெட்கள். காயம் காரணமாக அவர் விலகியிருக்கும் நிலையில் அவர் இடத்தை நிரப்பும் வகையில் சரியான இந்திய ஆப்ஷன் இல்லை. உமேஷ் கடந்த ஐ.பி.எல்லில் 8 போட்டிகளில் ஆடி ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இன்னொரு ஆப்ஷனான கார்த்திக் தியாகிக்கும் பெரிய ஐ.பி.எல் அனுபவம் இல்லை. ஆனாலும் பவர்ப்ளேயில் இவர்களில் ஒருவரை நம்பியே இருக்கவேண்டும் என்பதுதான் சிக்கல்.

GT Gill

கேப்டன் கில் :

முதல்தர கிரிக்கெட்டில் துலீப் டிராபி, தியோதர் டிராபி, இந்திய ஏ அணி ஆகியவற்றுக்கு எல்லாம் கேப்டனாய் இருந்திருக்கிறார் சுப்மன் கில். ஆனால் அவையெல்லாம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஐ.பி.எல் போன்ற பிரமாண்டத் தொடரில் ஒரு கேப்டனாய் அவர் எப்படி செயல்படுவார், இந்த கேப்டன்சி பிரஷர் அவரின் பேட்டிங் ஃபார்மை பாதிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரஷித் இருக்காரா இல்லையா? :

இந்த நொடி வரை குஜராத் முகாமில் வலம்வரும் கேள்வி இது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட், பி.எஸ்.எல் என அனைத்துப் போட்டிகளிலிருந்தும் ஒதுங்கியிருந்த ரஷித் ஐ,பி.எல்லில் களம் காண்கிறார். அவர் முழு உடல்தகுதியோடுதான் இருக்கிறாரா, எல்லாப் போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் மூன்றையும் சரிவர செய்யமுடியுமா என்பதெல்லாம் இன்னமும் விடை தெரியாத வினாக்கள்தான். பேக்கப் ஆப்ஷனாக நூர் இருக்கிறார் என்றாலும் அவர் ரஷித் அளவிற்கான 3டி பிளேயர் இல்லை.

ப்ளேயிங் லெவன் :

சுப்மன் கில், சாஹா, சாய் சுதர்ஷன், விஜய் ஷங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ஓமர்சாய், ரஷித் கான், மோஹித் ஷர்மா, ஸ்பென்ஸர் ஜான்சன், கார்த்திக் தியாகி.

பாண்ட்யா, ஷமி இருவரின் இடத்தையும் இரு வெளிநாட்டு வீரர்களான ஓமர்சாய், ஸ்பென்ஸர் ஜான்சனைக் கொண்டே நிரப்பமுடியும். மில்லரும் ரஷித்தும் நிச்சயம் அணியின் பேலன்ஸுக்குத் தேவையென்பதால் கேன் வில்லியம்சன் களமிறங்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. டெத் ஓவர் போட மோஹித் நிச்சயம் தேவை. சமீபத்திய ஃபார்மின் அடிப்படையில் உமேஷைத் தாண்டி கார்த்திக் தியாகி ப்ளேயிங் லெவனில் இடம்பிடிக்கலாம். அதேபோல ரஷித் ஒருவர் மட்டுமே முழுநேர ஸ்பின்னர் என்பதால் இம்பேக்ட் பிளேயராக ஒரு ஸ்பின்னர் உள்ளே வரவே வாய்ப்புகள் அதிகம்.

Sai Sudharsan

இம்பேக்ட் பிளேயர்கள் :

சாய் கிஷோர் - அணிக்கு மேலும் ஒரு ஸ்பின்னர் கட்டாயம் தேவை. அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் சாய் கிஷோரே பெரும்பாலும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்புகள் அதிகம்.

ஜெயந்த் யாதவ் - அணியில் இருக்கும் மற்றொரு ஸ்பின்னர். எதிரணியில் இடதுகை ஆட்டக்காரர்கள் அதிகமிருந்தால் ஆஃப் ஸ்பின்னராய் இவரின் தேவை அதிகமிருக்கும்.

ஷாருக் கான் - பல கோடிகள் கொட்டி வாங்கப்பட்டிருக்கிறார்தான். ஆனால் அணியோடு பலகாலமாக பயணிக்கும் விஜய் ஷங்கருக்கு முன்னுரிமை வழங்கப்படவே வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை திவேதியாவும் இவரும் இணைந்து மூன்று, நான்கு ஓவர்கள் ஸ்பின் போடட்டும் என நிர்வாகம் முடிவெடுத்தால் மட்டுமே விஜய் ஷங்கருக்குப் பதிலாக இவர் ப்ளேயிங் லெவனில் களமிறங்கமுடியும்.

அபினவ் மனோகர் : நல்ல பேட்ஸ்மேன்தான். ஆனால் இந்தமுறை பவுலிங் வீக்காக இருப்பதால் இவர் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கவும் வாய்ப்புகள் குறைவுதான்.

rashid khan

தனி ஒருவன் :

எட்டு போட்டிகளில் 362 ரன்கள். சராசரி 51.71. ஸ்ட்ரைக் ரேட் 141.41. சாய் சுதர்ஷனின் கடந்த சீசன் ஸ்கோர்போர்டு இது. அங்கிருந்து இந்திய அணிவரை இப்போது சென்றுவிட்டார். அங்கேயும் ஆடிய மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டில் அரைசதம். அதன்பின் ஆடிய முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் ஓரளவிற்கு நன்றாகவே ஆடியிருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல் என தொடர் காயங்களால் சீனியர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவதிப்பட்டுவரும் நேரத்தில், இந்த ஐ.பி.எல்லில் சாய் நன்றாக ஆடினால் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கக்கூட வாய்ப்புகள் அதிகம். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஃபார்மை நிரூபிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி. செய்வார் என நம்பலாம்.

ஒவ்வொரு முறையும் 'இது வேலைக்காகாது' என மற்றவர்கள் இவர்களை எள்ளி நகையாடும்போதெல்லாம் புலிப்பாய்ச்சலோடு முன்னகர்ந்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். இந்தமுறை புது கேப்டன், பேலன்ஸ் இல்லாத டீம் என கிட்டத்தட்ட மீண்டும் முதலிலிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது போலத்தான். இந்தமுறை விமர்சகர்களின் எதிர்பார்ப்புகள் வெல்லுமா அல்லது அவற்றையெல்லாம் பொய்யாக்கி குஜராத் அணி கோப்பை வெல்லுமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.