CSK supporters
CSK supporters Kunal Patil
T20

MIvCSK | என்ன மும்பை... 'கொடி பறக்குதா..!'

ப.சூரியராஜ்

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த, ஐ.பி.எல்லின் எல் க்ளாஸிக்கோ `மும்பை வெர்சஸ் சென்னை' போட்டி நேற்று இரவு வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை விளையாடும் போட்டி எந்த ஊரில் நடந்தாலும் மஞ்சள் சொக்காவோடு கிளம்பிச் சென்று, மைதானத்தையே மங்களகரமாக மாற்றிவிடுகிறார்கள் சென்னை ரசிகர்கள் என்பதால், குஜாலாக உஜாலாவில் ஊறிய நீல சொக்காய் அணிந்து வான்கடேவுக்கு வாங்கடே என விலையில்லா ஜெர்ஸியும், கொடியும் கொடுத்து கூட்டம் காட்டியது மும்பை அணி. `வேலு பாய், பாட்ஷா பாய், விஸ்வா பாய், ராஜு பாய் வரிசையில் மஹி பாயும் `மும்பை கா டான்'. மோதி பார்த்த எல்லாப் பயலும் டன்டனக்கா டான்' என சென்னை ரசிகர்களும் வீச்சு வீச்சென கத்திக்கொண்டிருந்தார்கள். இப்படி பல களேபரங்களுக்கு மத்தியில், பவுலர்கள் ஃபார்மில் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸும் அணியும் பவுலர்களே இல்லாத மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற தல, மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார்.

Ruturaj Gaikwad | Dwaine Pretorius | Ajinkya Rahane

பென் ஸ்டோக்ஸுக்கும், மொயின் அலிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ப்ரிட்டோரியஸையும், மகாலாவையும் இறக்கியது சென்னை அணி. மும்பை ரசிகர்கள் ஆரவாரமானர்கள். அப்படியே, ஜோஃப்ரா ஆர்ச்சரும் இந்த மேட்சில் ஆடவில்லை என்பது தெரியவர அப்படியே காரசாரமானர்கள். ஹிட்மேனும், கிஷனும் மும்பை இந்தியன்ஸின் இன்னிங்ஸை துவக்க, முதல் ஓவரை வீசவந்தார் சென்னையின் தீபக் சஹார். ஓவரின் 3வது பந்தை, இறங்கி வந்து எக்ஸ்ரா கவருக்கு மேல் ஒரு பவுண்டரியைத் தூக்கி அடித்தார் ரோகித். திடீரென, தீபக் சாஹர் இடது காலைப் பிடித்துக்கொண்டு படுக்க, மருத்துவர்கள் குழு உள்ளே ஓடிவந்தது. வலியுடன் சாஹர் வீசிய ஓவரின் கடைசிப் பந்தில், மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியை அடித்து விரட்டினார் ரோகித். சாஹர் அடுத்து பந்து வீசவில்லை. மாற்றுவீரராக (சப்ஸ்டிட்யூட்) சேனாபதி களத்துக்குள் வந்தார். இப்போது, மொத்த திட்டத்தையும் கலைத்து புது திட்டம் தீட்ட வேண்டும் தோனிக்கு. தனது பவுலர்களை கலைத்துப் போட்டு ஆடினார்.

2வது ஓவரை வீசவந்தார் தேஷ்பாண்டே. 2வது பந்து, ஒரு அகலப்பந்து. அதற்கு மாற்றாக வீசபட்ட பந்தில் ஒரு லெக் பஸ். எக்ஸ்ட்ரா கொடுக்க ஆரம்பிச்சுட்டார் தேஷ்பாண்டே என கதறத் துவங்கியது மஞ்சள் படை. ஓவரின் 4வது பந்தை, பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு தட்டினார் ஹிட்மேன். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார் துஷார்.

Rohit Sharma

ஐ.பி.எல் தொடரில் தனது முதல் ஓவரை வீசினார் மகாலா. அவரை பவுண்டரியுடன் வரவேற்றார் இஷான். 3வது பந்தில், மிட் ஆஃப் திசையில் இன்னொரு பவுண்டரி, 4வது பந்தில், மிட் விக்கெட் திசையில் மற்றுமொரு பவுண்டரி. மகாலாவின் ஆரம்பமே அலைக்கழிப்பாக அமைந்தது. 4வது ஓவரை வீசவந்தார் தேஷ்பாண்டே. முதல் பந்தை, பாயின்ட் திசையின் மேல் சிக்ஸர் ஒன்றை கொளுத்தினார் ரோகித். மும்பை ரசிகர்கள், இலவசமாக கிடைத்த கொடியை வேகவேகமாய் ஆட்டினார்கள். `கொடிபறக்குதா' என மும்பைவாலாக்கள் ஆர்வமாக, `ஸ்டெம்ப் பறக்குதா' என ரோகித்தின் விக்கெட்டை கழட்டினார் துஷார். அற்புதமான பந்து. ரோகித்துக்கு ஒன்றும் புரியவில்லை.

5வது ஓவரை வீசவந்தார் சாந்தமான சான்ட்னர். லாங் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார் க்ரீன். மீண்டும் வந்தார் மகாலா. மிட் ஆஃபில் ஒன்று, மிட் ஆனில் ஒன்று, திசைக்கொரு பவுண்டரியை பையில் போட்டு கொடுத்தார் கிஷன். பவர்ப்ளேயின் முடிவில் 61/1 என நன்றாகவே ஆடியிருந்தது மும்பை. 7வது ஓவரை வீசவந்தார் ஜடேஜா. ஓவரின் 4வது பந்தை, லாங் ஆன் திசையில் கிஷன் தூக்கி அடிக்க, அது ப்ரிட்டோரியஸின் கைகளுக்குள் சென்று விழுந்தது. சூர்யகுமார் களத்திற்குள் வந்தார். வந்தவர், அடுத்த ஓவரிலேயே அவுட். சூர்யகுமார் லெக் திசையில் வீசினார் சான்ட்னர். அதை ஸ்வீப் ஆடப்போய் சூர்யாவின் க்ளவில் உரசி, தோனியின் க்ளவில் தஞ்சமடைந்தது. சூர்யகுமாரின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. அடுத்து ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன் திலக் வர்மா வந்தார். அதே ஓவரில் ஒரு பவுண்டரியும் வாங்கித் தந்தார்.

Ishan Kishan

ஜடேஜா வீசிய 9வது ஒவரில், ஃபுல் லெந்த் வீசப்பட்ட பந்த மடாரென பவுலரை நோக்கி அடித்தார் க்ரீன். ஜடேஜா படாரென கையை நீட்ட, பந்து அவரைப் பிடித்துக்கொண்டது. பரிதாபமாக வெளியேறினார் க்ரீன். அடுத்த ஒவரின் முதல் பந்திலேயே, சான்ட்னரிடம் தனது விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார் அர்ஷாத் கான். 10 ஓவர் முடிவில் 84/5 என பாதாளத்தை நோக்கி பாய்ந்திருந்தது மும்பை. 11வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஜடேஜா. 12வது ஒவர் வீசிய ப்ரிட்டோரியஸோ, வெறும் 6 ரன்கள். ஜடேஜா வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் ஒரு சிக்ஸரை வெளுத்தார் திலக் வர்மா.

`திலக், நீ கலக்கு' என மகிழ்ச்சி அடைந்தார்கள் மும்பை வாலாக்கள். அடுத்த பந்திலேயே, திலக்கை எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கி மும்பை வாலாக்கள் முன்பு 1000 வாலாவை கொளுத்தினார் ஜட்டு. ப்ரிட்டோரியஸ் மீண்டும் வந்தார். 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சான்ட்னர் வீசிய 15வது ஓவரிலும் 4 ரன்கள் மட்டுமே. 15 ஓவர் முடிவில் 109/6 என வான்கடேவில் நன்றாக வாங்கிக்கட்டியிருந்தது மும்பை.

மகாலா வீசிய 16வது ஒவரில், ஸ்டப்ஸும் அவுட்டானார். எல்லைக் கோட்டின் அருகே ப்ரிட்டோரியஸும் ருதுராஜும் ஜோடிப்போட்டு நான்கு கைகளில் ஒரு கேட்சைப் பிடித்தனர். `தூக்கிப்பிடிச்சா கொடி. திருப்பி பிடிச்சா தடி' என வெறியானார்கள் பல்தான்கள். 17வது ஓவரை வீசவந்தார் தேஷ்பாண்டே. முதல் பந்திலேயே டிம் டேவிடின் கேட்சை விட்டார் ருதுராஜ். 3வது பந்தில், பவுலரின் தலைக்கு மேல் நேராக ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் டேவிட். அடுத்த பந்து, ஸ்வீப்பர் கவரில் பவுண்டரிக்கு ஓடியது. அதற்கடுத்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் இன்னொரு சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டேவிட். தேஷ்பாண்டே மீது மனசைவிட்டார்கள் சென்னை ரசிகர்கள்.

அதில் வெறியான தேஷ்பாண்டே, அடுத்த பந்திலேயே டேவிட்டின் விக்கெட்டைக் கழட்டி வெற்றிக்குறி காட்டினார். அந்த வெற்றிக்குறியை ஆபத்துக்கான அறிகுறி என பல்தான்கள் பம்மினார்கள். ப்ரிட்டோரியஸ் மீண்டும் பந்துவீசி, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 19வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் மகாலா. முதல் மூன்று ஓவர்களையும் சிறப்பாக வீசியிருந்த ப்ரிட்டோரியஸ், கடைசி ஓவரை வீசவந்தார். அந்த ஓவரில் மட்டும் ஷொகீன் மூன்று பவுண்டரிகளை விரட்ட, 157/8 எனும் டீசென்ட்டான ஸ்கோரை எட்டியது மும்பை.

158 எனும் இலக்கை 120 பந்துகளில் எட்டிப்பிடிக்கும் வேலையோடு களமிறங்கியது கான்வே - ருதுராஜ் ஜோடி. பெஹ்ரென்டார்ஃப் முதல் ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகளிலும் புள்ளி வைத்த கான்வே, 4வது பந்தில் போல்டாகி அதிர்ச்சி கொடுத்தார். 2வது ஓவரை வீசிய அர்ஷத் கான், வெறும் 6 ரன்கள் மட்டுமே தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பெஹ்ரன்டார்ஃப் வீசிய 3வது ஓவரில், டீப் ஃபைன் லெக் திசையில் ஓர் குட்டி சிக்ஸரை அடித்தார் ரஹானே. 4வது ஓவரை வீசவந்த அர்ஷத் கானை, டீப் ஃபைன் லெக்கில் இன்னொரு சிக்ஸரை அடித்து வரவேற்றார் ரஹானே. அடுத்த பந்தை, பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு தட்டினார். 3வது பந்தை, ஷார்ட் தேர்டு திசையில் மீண்டுமொரு பவுண்டரி அடித்தார் ரஹானே. மும்பை அணி முளித்தது. 4வது பந்தில், கவர் திசையில் இன்னொரு பவுண்டரி. ஐந்தாவது பந்தில், நச்சென ஒரு ஸ்ட்ரெய்ட் டிரைவ். பந்து பவுண்டரிக்கு தெறித்துக்கொண்டு ஓடியது. முதல் ஐந்து பந்துகளும் எல்லைக் கோட்டைத் தாண்டின. கடைசிப்பந்தில், சிங்கிளைத் தட்டி இன்னும் மும்பை அணி பயமுறுத்தினார் ரஹானே. ஒரே ஓவரில் 23 ரன்கள். 5வது ஓவரை வீசவந்தார் க்ரீன். ஓவரின் 3வது பந்தை, டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ரஹானே.

6வது ஓவரை வீசவந்தார் சாவ்லா. சாவ்லா போட, ரஹானே ஆட. பத்து ஆண்டுகளுக்கு பின்னால் சென்றது போலிருந்தது. 2 மற்றும் 3வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்டிய ரஹானே, இந்த தொடரின் அதிவேக அரைசதத்தையும் பதிவு செய்தார். வெறும் 19 பந்துகளில். அட்டாக் அதிமாகிறது என்பதை உணர்ந்து ஓர் முடிவை எடுத்து ரோகித். டிம் டேவிட்டுக்கு பதில் குமார் கார்த்திகேயாவை இம்பாக்ட் வீரராக உள்ளே கொண்டுவந்தார். அது வேலையும் செய்தது. வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 7 ஓவர் முடிவில், 74/1 என சிங்கநடை போட்டுக்கொண்டிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Ajinkya Rahane

சாவ்லா வீசிய 8வது ஓவரில், ஒரு பவுண்டரியை அடித்த ரஹானே, அடுத்த பந்திலேயே சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். `நான் இன்னும் டொக்கு ஆகலை' என சொல்வது மாதிரியான ஒரு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. டூபே உள்ளே வந்தார். அரைக்குழி பந்துகளாகப் போட்டு அவரை அழவைத்தார்கள். கடைசியில், சுழற்பந்து வீச்சாளர்களால் நெஞ்சுக்கு மேல் வரக்கூடிய அரைக்குழி பந்துகளை வீச முடியாது என்பதால், பந்துவீச வந்த சாவ்லாவை ஓங்கி ஒரு பவுண்டரி அடித்தார் டூபே. இந்தப் பக்கம் ருதுராஜும் குஷியாகி, ஒரு பவுண்டரியை விளாசினார். 10 ஓவர் முடிவில் 97/2 என விசில் போட்டது சென்னை.

க்ரீன் வீசிய 11வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே. ஷொக்கீன் வீசிய 12வது ஓவரில், டூபே ஒரு பவுண்டரி அடித்தார். அப்படியும் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 13வது ஓவரை வீசிய கார்த்திகேயா, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 14வது ஒவரை வீசவந்த ஷொக்கீனை, லாங் ஆன் திசையில் பளாரென ஒரு சிக்ஸரை அறைந்தார் டூபே. ருதுராஜும் அதே ஒவரில், டீப் மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரியை விரட்டினார். கார்த்திகேயாவின் அடுத்த ஓவரில், சுழலில் சிக்கினார் டூபே. பந்தை வெட்டிவிட முயன்று, எட்ஜாகி ஸ்டெம்பில் அடித்தது. தீபக் சாஹருக்கு பதிலாக, அம்பத்தி ராயுடு இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். சாவ்லா வீசிய 16வது ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கிடைத்தது. கார்த்திகேயா வீசிய 17வது ஓவரில், 5 ரன்கள். இன்னும் 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை எனும் நிலை.

Ruturaj Gaikwad and Ambati Rayudu

மீண்டும் வந்தார் பெஹ்ரன்டார்ஃப். தூதுவன் வந்தால் மாரி பொழியும் என்பது போல, பெஹ்ரன்டார்ஃப் வந்ததும், இரண்டு பவுண்டரிகளை பொழியவிட்டார் ராயுடு. 12 பந்துகளில் 5 ரன்கள் தேவை. 18வது ஓவரை வீசவந்த அர்ஷத், முதல் பந்தில் ஒரு அகலபந்தை வீசினார். 2வது பந்தில் ராயுடுவுக்கு ஒரு பவுண்டரியை வாரி வழங்கினார். சென்னை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜாவுக்கு ஆட்டநாயன் விருது வழங்கப்பட்டது.

DHoni

மெரினா டிரைவுக்கும் மெரினா பீச்சுக்கும் நடந்தப் போட்டியில் மெரினா பீச்சே வென்றது. சென்னை ரசிகர்களின் விசில் சத்தத்தில் வான்கடே அதிர்ந்தது!