ஷிவ்பால் சிங் எக்ஸ் தளம்
T20

ஊக்கமருந்து சோதனை | மீண்டும் சிக்கிய இந்திய ஈட்டி வீரர்.. 8 ஆண்டுகள் தடை?

இந்திய ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் மீண்டும் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Prakash J

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான தடகள வீரரான ஷிவ்பால் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாட்டியாலாவில் உள்ள தேசிய சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், ​​போட்டிக்கு வெளியே நடந்த சோதனையின்போது அவரது சிறுநீர் மாதிரியை பரிசோதிக்கப்பட்டது. இதில், அவர் தடைசெய்யப்பட்ட ஒரு பொருளைப் பயன்படுத்தியதாக அறிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (NADA) அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பை தவறவிட்டார்.

ஷிவ்பால் சிங், சிக்குவது இது முதல்முறை அல்ல. 2021ஆம் ஆண்டில் அவரது உடலில் மெத்தாண்டியெனோன் என்ற தடைசெய்யப்பட்ட பொருளின் அறிகுறிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் ஒரு வருட இடைநீக்கம் செய்யப்பட்டார். தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA) ஆரம்பத்தில் நான்கு ஆண்டு தடையை விதித்திருந்தாலும், அவர் சட்டம் மூலம் வென்றார். இல்லையென்றால், நடப்பு ஆண்டு வரை அந்த தடையை அவர் எதிர்கொண்டிருக்க வேண்டும்.

ஷிவ்பால் சிங்

இந்த நிலையில், மீண்டும் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர், “அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவரது இரண்டாவது ஊக்கமருந்து குற்றமாகும்” எனத் தெரிவித்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டு நீண்டகால தடை விதிக்கப்பட்டால், ஷிவ்பாலின் வாழ்க்கை முடிந்துவிடும் எனச் சொல்லப்படுகிறது. நாடா மற்றும் வாடா விதிகளின்கீழ், ஒரு தடகள வீரர் இரண்டாவது முறையாக ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்கு அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஷிவ்பால் சிங் மறுத்துள்ளார். அவர், ”அது உண்மையல்ல. நான் எந்த இடைநீக்கத்திலும் இல்லை. நான் இன்னும் பாட்டியாலா பயிற்சி மையத்தில்தான் இருக்கிறேன். என்னைப் பற்றி யார் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

ஷிவ்பால் சிங்

ஆனால், அவரது கூற்றை இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) தலைவர் அடில் சுமாரிவாலா நிராகரித்துள்ளார். அவர், ”அவர் முகாமிலும் இல்லை, பாட்டியாலாவிலும் இல்லை. நெறிமுறைகளின்படி AFI அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23 தேதியிட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) உத்தரவைத் தொடர்ந்து, தேசிய சிறப்பு மையத்திலிருந்து ஷிவ்பால் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பதும், அப்போது அவர் 86.23 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.