இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. முதல் சர்வதேச டி20 சதமடித்த ஸ்மிரிதி மந்தனா வெற்றிக்கு வித்திட்டார்.
இந்நிலையில் கவுண்டி கிரவுண்ட்டில் நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் வெற்றிபெற்றிருக்கும இந்திய மகளிர் அணி 2-0 என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 181 ரன்கள் சேர்த்தது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெமிமா மற்றும் அமஜோத் இருவரும் அரைசதங்கள் அடித்து அசத்தினர்.
182 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 இருதரப்பு தொடரில் முதல்முறையாக முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது இங்கிலாந்து அணி. அதுமட்டுமில்லாமல் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் 5-0 என தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து தற்போது முதல் தோல்வியை பதிவுசெய்துள்ளது.
மேலும் இதுவரை இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெல்லாத இந்திய மகளிர் அணி புதிய வரலாறு படைக்க உள்ளது.