india womens exit from the t20 world cup cricinfo
T20

ஆஸியிடம் படுதோல்வி.. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா..!

ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது.

Rishan Vengai

2026 மகளிர் டி20 உலகக்கோப்பையில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்து மண்ணில் நடந்த இந்த தொடரில் இந்தியா தொடக்கத்தில் இரண்டு வெற்றிகள் பெற்றும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஹர்மன்ப்ரீத்தின் 56 ரன்கள் வீணாகி, பெர்ரி-கார்ட்னர் கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைத் தந்தது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முதல்முறை வென்ற ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி, 2026 டி20 உலகக்கோப்பை தொடரிலும் வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் இந்தியாவிற்கு சாதகமான சூழல் இருக்காது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து 2 போட்டிகளில் அற்புதமான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி, முக்கியமான போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது. அந்தப்போட்டியில் இந்திய அணி தங்களுடைய மோசமான ஃபீல்டிங்கால் தோல்வியை தழுவியது.

harmanpreet

இந்தசூழலில் அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வெல்லவேண்டும் என்ற சூழலில் இன்று மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஹர்மன்ப்ரீத்தின் அபாரமான அரைசதத்தின் உதவியால் 20 ஓவரில் 170 ரன்கள் குவித்தது. 200 ஸ்ட்ரைக்ரேட்டில் 27 பந்தில் 56 ரன்கள் மிரட்டிய ஹர்மன்ப்ரீத் இந்தியாவை நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

171 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆஸ்திரேலியா அணி வழக்கம்போல தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா நன்றாக தொடங்கினாலும் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பெர்ரி மற்றும் கார்ட்னர் இருவரும் அடுத்தடுத்த அரைசதமடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர். இந்த தோல்வியின் மூலம் 2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது.