இந்திய கால்பந்து அணிக்காக ஜூனியா் மற்றும் சீனியா் பிரிவுகளில் 17 ஆண்டுகள் களம் கண்டவர் அதிதி செளகான். இவர், ஐரோப்பிய தொழில்முறை கால்பந்து போட்டியில் களம் கண்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை கொண்டவர் ஆவார். இங்கிலாந்து கால்பந்து கிளப்பான, வெஸ்ட் ஹாம் யுனைடெட்டுக்காக அவா் 20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். இதுதவிர இந்தியாவில் கிளப் நிலையிலான போட்டிகளில் கோகுலம் கேரளா, ஸ்ரீபூமி அணிகளிலும் களம் கண்டுள்ளாா்.
தெற்காசிய சாம்பியன்ஷிப்பில் 2012, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனான இந்திய அணியில் இவரும் அங்கம் வகித்தாா். இந்திய சீனியா் அணிக்காக அவா் 57 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். இந்த நிலையில், அதிதி சௌகான் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அதிதி செளகான், “கால்பந்து என்னை வடிவமைத்து, என்னைச் சோதித்து, என்னை வழிநடத்தியதற்கு நன்றி. மறக்க முடியாத 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் தொழில்முறை கால்பந்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். நான் இப்போது ஆடுகளத்திற்கு அப்பால் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறேன்.
இனி ஒரு வீரராக அல்லாமல், அந்த நம்பிக்கையை என்னுடன் சுமந்து செல்கிறேன். அடுத்த தலைமுறைக்கு ஒரு வலுவான பாதை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு உறுதியளித்த ஒருவராகச் செல்கிறேன். எனது இரண்டாம் பாதி, எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த ஆட்டத்திற்குத் திருப்பிக் கொடுப்பது பற்றியது ஆகும். சூத்திரம் அப்படியே உள்ளது. பெரிய கனவு காணுங்கள், உங்களை நம்புங்கள், வேலையில் ஈடுபடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.