மகளிர் ஆசிய கோப்பையை 8வது முறையாக கைப்பற்றிய இந்திய அணி, 2026 மகளிர் ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டிலும் அதே ஆட்டத்தை தொடர்கிறது. காலிறுதியில் ஜப்பானை 57 ரன்னில் ஒழித்து, 5 ஓவரில் இலக்கை அடைந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஸ்ரீசரணி 4 விக்கெட் எடுத்து முக்கிய பங்கு வகித்தார்.
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை தோற்கடித்து 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி. அதைத்தொடர்ந்து தற்போது 2026 மகளிர் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 8 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் ஆசிய விளையாட்டு போட்டி நாக்அவுட் போட்டிகளாக நடைபெறுகிறது.
முதலில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி, 57 ரன்னில் அவ்வணியை சுருட்டி 5 ஓவரில் அடித்து வெற்றிபெற்றது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீசரணி மீண்டும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
காலிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. நாளை மறுநாள் நடக்கவிருக்கும் அரையிறுதிப்போட்டிகளில் இந்தியா-வங்கதேசமும், பாகிஸ்தான் - இலங்கையும் மோதவிருக்கின்றன.