IND vs AFG
IND vs AFG pt desk
T20

IND vs AFG | ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய துபே: பட்டைய கிளப்பிய ஜெய்ஸ்வால் - தொடரை வென்றது இந்திய அணி!

webteam

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் துபேவின் அதிரடி அரை சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

IND vs AFG

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குல்பதின் நெய்ப் (57) அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸத்ரான் (23), ஜனட் (20), முஜீப் உர் ரஹ்மான் (21) என மூவரும் 20 ரன்களுக்கு மேல் எடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் 3, ரவி பிஸ்னோவ் 2, அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்களை சாய்த்தனர்.

173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்திலே க்ளீன் போல்ட் ஆனார். முதல் விக்கெட் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. விராட் கோலி 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 29 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை நாலா புறமும் பறக்கவிட்டனர். ஜெய்ஸ்வாலும் சிக்ஸர் மழை பொழிந்தார். துபேவும் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

INDIA

அதனால், இந்திய அணியின் வெற்றி எளிதில் உறுதியானது. 34 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா டக் அவுட் ஆனாலும் துபேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிவம் துபே 32 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உட்பட 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரையும் வென்றுள்ளது. துபே அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார். அக்ஸர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.