india, icc x page
T20

இனி டெஸ்ட் போட்டி 4 நாட்கள்.. ஆதரவு தெரிவித்த ஐசிசி.. ஆனால்..? - முழு விவரம்!

2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்காக சிறிய கிரிக்கெட் நாடுகளுக்கும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திட்டமிட்டுள்ளது.

Prakash J

கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவங்களும், ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போதைய கிரிக்கெட்டில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில இடங்களில் 10 ஓவர் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிகவும் அனுபவம் வாய்ந்த அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில், 2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்காக சிறிய கிரிக்கெட் நாடுகளுக்கும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திட்டமிட்டுள்ளது.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணி

இதன் நோக்கம், சிறிய அணிகள் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மேலும் நீண்ட தொடர்களை நடத்த வேண்டும் என்பதைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஒன்பது நாடுகளுக்கு இடையே, 27 டெஸ்ட் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதில் 17 தொடர்கள் வெறும் இரண்டு போட்டிகளுடன் முடிந்துவிடும். இன்னும் சில 3 போட்டிகளுடன் முடிந்துவிடும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் மட்டுமே ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகின்றன.

இந்த நிலையில் ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஐந்து நாள் போட்டிகளை நடத்த ஆகும் அதிக செலவும், கால தாமதமும் சிறிய நாடுகளை டெஸ்ட் கிரிக்கெட் நடத்துவதிலிருந்து தயங்க வைக்கிறது என்பதே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் பாரம்பரிய ஐந்து நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படும் எனவும், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஐந்து நாள் போட்டிகளின் தற்போதைய வடிவத்தில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி

ஐ.சி.சி முதன்முதலில் 2017இல் இருதரப்பு போட்டிகளுக்கு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதித்தது. அடுத்து, 2019 மற்றும் 2023இல் அயர்லாந்திற்கு எதிராக நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, கடந்த மாதம் டிரென்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து ஜிம்பாப்வேயுடன் நான்கு நாட்கள் விளையாடியது. நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் மேலும் விதிமுறைகள் சேர்க்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஒருநாளைக்கு 90 ஓவர்கள் வீசப்படும் நிலையில், இதில் 98 ஓவர்கள் வீசப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.