ruturaj
ruturaj Twitter / ruturaj
T20

”சிஎஸ்கே அணிக்கு அடுத்த சுரேஷ் ரெய்னாவாக இருக்க விரும்புகிறேன்!” - ருதுராஜ் விருப்பம்

Rishan Vengai

சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 635 ரன்களை குவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை 4ஆவது முறையாக வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். தற்போது தொடங்கப்பட்டிருக்கும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பேட்டிங்க் பார்மை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ், 2 போட்டிகளில் சேர்த்து 149 ரன்கள் சேர்த்து அதிக ரன்களுடன் தொடரை தொடங்கியுள்ளார். தன்னுடைய கூர்மையான டைமிங் பேட்டிங்கால் தொடர்ந்து அசத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட்டை, பல சிஎஸ்கே ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவோடு ஒப்பிட்டு எப்போதோ கொண்டாட தொடங்கிவிட்டனர்.

ருதுராஜ் கெய்க்வாட் குறித்து முன்னர் பேசியிருந்த சுரேஷ் ரெய்னா ருதுராஜின் பேட்டிங்கை பாராட்டியிருந்தார். மேலும் டொமஸ்டிக் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜை, தோனிக்கு பிறகான சிஎஸ்கே கேப்டனாக பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

dhoni ruturaj

ருதுராஜ் குறித்து பேசிய அவர், “மஹி பாய் அவரை சுற்றி ருதுராஜை வளர்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். தோனி இளைஞர்களை சுற்றி எப்போதும் இருக்கிறார். ஆம் தோனிக்கு பிறகான கேப்டனாக ருதுராஜ் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். ருதுராஜ் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிக்காட்டி வருகிறார். அவர் அதை இந்திய அணிக்காகவும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியானது முதல்முறையாக சின்னதல என சிஎஸ்கே ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல் போட்டியை சேப்பாக்கத்தில் விளையாடியது. ’நான் இல்லாமல் சென்னைல போட்டியா’ என போட்டியை பார்ப்பதற்கு நேராக சேப்பாக்கமே வந்திருந்தார் சின்னதல சுரேஷ் ரெய்னா.

csk

அப்போது போட்டி தொடங்குவதற்கு முன்னர் மைதானத்திற்கு சென்ற சுரேஷ் ரெய்னாவை ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டார் ருதுராஜ் கெய்க்வாட். இந்நிலையில்தான் ருதுராஜ் “ சிஎஸ்கே-விற்காக நான் சுரேஷ் ரெய்னா போல் விளையாட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா குறித்து பேசியுள்ள ருதுராஜ், “சுரேஷ் ரெய்னா தான் எனது இன்ஸ்பிரேஷன். சிஎஸ்கேவிற்கு அவர் ஒரு நிலையான வீரராக இருந்து, பல சாதனைகளை புரிந்துள்ளார். அவரை தொடர்ந்து அந்த இடத்தை நான் நிரப்ப விரும்புகிறேன். ஐபிஎல்-ல் மிஸ்டர் ஐபிஎல் சாதித்தை போன்றே நானும் சாதிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

ruturaj

ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில் சுரேஷ் ரெய்னா 5528 ரன்களை குவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக 176 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, 4687 ரன்களை குவித்துள்ளார். தற்போது சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் ருதுராஜ், 38 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதம் உட்பட 1356 ரன்களை குவித்து விளையாடிவருகிறார்.