RCB pt web
T20

இது பழைய ஆர்சிபி இல்லை! செயலுக்கேற்ற எதிர்வினை உண்டென்றால் நிச்சயம் ’ஈ சாலா கப் நம்தே’!

உங்களது கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள்... எத்தனை துயரங்கள் வந்தாலும், உலகமே உங்களுக்கு எதிராக நின்றாலும் உங்களது கனவுகளை மட்டும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்...

Angeshwar G

பழைய ஆர்சிபி இல்லை

உங்களது கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள்... எத்தனை துயரங்கள் வந்தாலும், உலகமே உங்களுக்கு எதிராக நின்றாலும் உங்களது கனவுகளை மட்டும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்... எங்கோ படித்த ஞாபகம்.. ஐபிஎல் கோப்பை என்பது ஆர்சிபிக்கு கிட்டத்தட்ட 17 ஆண்டுகால கனவு.. ஏகப்பட்ட வீரர்கள் அக்கனவுகளை தங்களது தோள்களில் சுமந்திருக்கின்றனர். இப்போதோ அக்கனவு செயலுரும் காலமாக கனிந்திருக்கிறது.

ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. ஏலத்தின் போதும், போட்டிக்கு இடையேயும் பல தவறுகளைச் செய்திருக்கிறது. ஆனால், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் நடப்பு சீசனில் தவறுகள் என்பதோ மிகவும் குறைவு.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது பழைய ஆர்சிபி இல்லை.

இப்போதிருக்கும் ஆர்சிபி அணிக்கான விதையைப் போட்டவர் மைக் ஹெசன். ஆம், தற்போது பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து போட்டிகளின் பயிற்சியாளாராக இருக்கிறாரே அவர்தான். ஏலத்தின்போது மிகப்பெரிய வீரர்களின் மீது தங்களது பெரும்பான்மையான கவனத்தை செலுத்தும் ஆர்சிபியின் நடைமுறையை உடைத்தவர். கோப்பையை வெல்லும் ஆர்சிபி அணிக்கான பாதையை சமைத்துக் கொடுத்தவர். கடந்த கால ஆர்சிபி வீரர்கள் தேர்வையும் செயல்பாடுகளையும் உற்று நோக்கினால் இதைக் காண முடியும். சூப்பர் ஸ்டார் அல்லாத ரஜத் படிதாரை ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமித்தது அதன் விளைவாகக் கூட இருக்கலாம். நமக்கு நட்சத்திர வீரர்கள் தேவையில்லை... அணிக்கு நீண்ட காலம் தேவைப்படும் வீரர்கள் மட்டுமே தேவை,,,, ஏனெனில் ரிஷப், ஸ்ரேயாஷ், கே எல் ராகுல் என பல முன்னணி வீரர்கள் இருந்தும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி.. மறந்துவிட வேண்டாம்.. மேற்கண்டவர்கள் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக செயல்பட்டவர்களும் கூட.

உதாரணத்திற்கு ஜிதேஷ் சர்மா

வழக்கமாக ஆர்சிபி தனது வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.. ஓரிரு போட்டிகளில் சரியாக செயல்படவில்லை என்றால் உடனடியாக பெஞ்சில் உட்கார வைப்பதை ஆர்சிபி வழக்கமாக வைத்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்தத் தவறுகள் நிகழவில்லை. இதை மைக் ஹெசன் வார்த்தைகளின் மூலமே உணரலாம்.. “ஆர்சிபி கோப்பை வெல்லவில்லை. ஆனால், அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. வீரர்கள் தங்களது திறமைகளைக் காட்ட சில அணிகள் அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக நினைக்கின்றேன்” எனத் தெரிவித்திருந்தார். இப்போதிருக்கும் ஆர்சிபி அதையும் செய்கிறது. உதாரணத்திற்கு ஜிதேஷ் சர்மா...

ஆர்சிபி அணிக்கு வரும்போது அவர் ஒரு அரைசதம் கூட அடித்திருக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கிற்கு மாற்றாக, 11 கோடி ரூபாய்க்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்த சீசன் முழுவதும் ஜிதேஷ் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் என்ற ஒன்றை ஆடவில்லை. ஆனாலும், தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டது. பலன், முக்கியமான போட்டியில் லக்னோ அணியை துவம்சம் செய்த ஜிதேஷ் ஆர்சிபிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார். அவர் தேடித்தந்துள்ள வெற்றியின் மூலமே ஆர்சிபி முதலிரு இடங்களில் லீக் சுற்றை முடித்துள்ளது.

பந்து வீச்சாளர்கள் மேல் கவனம்

ஐபிஎல்லில் வெற்றிகரமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் தங்களிடம் இருக்கும் வீரர்களிடமிருந்து அதிகபட்ச திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கும். இதுதொடர்பாக தோனி ஒருமுறை பேசியிருக்கிறார்.. “சிலர் அழுத்தமான சூழலை விரும்புவார்கள். சிலர் விரும்பமாட்டார்கள். வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் அதை அறிந்துகொண்டீர்கள் என்றால் வீரர்களின் பலவீனத்தில் கவனம் செலுத்தி அதை சரிசெய்ய ஆரம்பித்து விடுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். அதாவது, அந்த வீரரின் பலவீனத்தை மறைத்து பலத்தை அதிகமாக வெளிப்படுத்த வைப்பதன் மூலம் அவரை வெற்றிகரமான வீரராக மாற்றுவது. ஆர்சிபி வரலாற்றில் அப்படிப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை குறைவு.

எப்போதும் நட்சத்திர வீரர்களை மட்டுமே நம்பி களமிறங்கும் ஆர்சிபி, கோப்பை வெல்வதற்கு நட்சத்திர வீரர்கள் மட்டும் போதாது என்பதை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், சரியான பந்துவீச்சுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல், பல முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் கேப்டன்கள் ஏலத்தில் கிடைத்தபோதும் தங்களுக்கான சரியான வீரர்களுக்காக பந்து வீச்சாளர்கள் மேல் கவனத்தை செலுத்தியது. ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் என இருவருக்கு மட்டும் ரூ.22.50 கோடியை செலவிட்டுள்ளது. இதில் ஹேசில்வுட் 18 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 14 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யஷ் தயால் போன்றோர் எந்த ஒரு கட்டத்திலும் பந்துவீசக்கூடியவர்கள். இதிலிருந்தே தெரிய வேண்டாமா? இந்த ஆர்சிபி பழைய ஆர்சிபி அல்ல.

ஈ சாலா கப் நம்தே!

இந்தத் தொடரில்கூட ஆர்சிபி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முழுமையான அணியாக இருக்கிறது. ப்ளே ஆஃப் வரைக்கும் வந்துள்ளார்கள் என்றால் இளமை, அனுபவம், அதிரடி, தேவையான நேரத்தில் நிதானம் என அனைத்தும் கலந்த அணியாக கட்டமைக்கப்பட்டதே காரணம். மிக முக்கியமாக தனிப்பட்ட வீரரைச் சார்ந்திருக்கும் நிலையில் தற்போது ஆர்சிபி இல்லை. அணியிலிருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன? அதை எப்போது முழுவீச்சில் செயல்படுத்துவது என்பது தெரியும்.. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், இக்கட்டான சூழ்நிலைகளில் ஆர்சிபியின் மிடில் ஆர்டர் செயல்படும் விதத்தினைச் சொல்லலாம்.

விராட் கோலி

மிக முக்கியமாக கோலி... 8 அரைசதங்களுடன் 602 ரன்களைக் குவித்துள்ளார். எப்போதும் ஆர்சிபி விராட் கோலியைச் சார்ந்திருக்கும். ஆனால், இந்த தொடரில் விராட்டைச் சுற்றி அவர்களது ஆட்டம் கட்டமைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது. அதாவது, விராட் கோலி களத்தில் இருப்பார்... எதிர்முனையில் இருக்கும் வீரர்கள் அதிரடி காட்ட வேண்டும். ஒருவர் சென்றால் மற்றொருவர்..

ஆர்சிபியின் கட்டமைப்புக்கு உதாரணமாக அவர்கள் வெளியூர் மைதானங்களில் பெற்ற வெற்றிகளைச் சொல்லலாம். ஏழு போட்டிகளில் ஏழிலும் வெற்றி பெற்று வெவ்வேறு மைதானங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொண்டு விளையாடியுள்ளனர். இது இதற்கு முந்தைய சீசன்களில் இல்லாதது. மொத்தமாக சொல்லவேண்டுமானால் இது பழைய ஆர்சிபி இல்லை. செயலுக்கு ஏற்ற எதிர்வினை இருக்குமென்றால் இந்த ஆண்டு ஆர்சிபிக்கு கோப்பை கை கூட வேண்டும்... ஈ சாலா கப் நம்தே!