18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. இரண்டு சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்த சூழலில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 203 ரன்கள் குவித்த நிலையில், 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிவருகிறது.
லக்னோவில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் 60, 53 ரன்கள் அடித்து அசத்தினர். இறுதியாக வந்த ஆயுஸ் பதோனி 30 ரன்களும், டேவிட் மில்லர் 27 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 203 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது லக்னோ அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீச்சிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டனாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பிரமாண்ட சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஐபிஎல் கேப்டன்கள்:
* ஹர்திக் பாண்டியா (MI) vs LSG - 5 விக்கெட்டுகள் - 36 ரன்கள் - 2025
* அனில் கும்ப்ளே (RCB) vs DC - 4 விக்கெட்டுகள் - 16 ரன்கள் - 2009
* அனில் கும்ப்ளே (RCB) vs DC - 4 விக்கெட்டுகள் - 16 ரன்கள் - 2010
* ஜேபி டுமினி (DC) vs SRH - 4 விக்கெட்டுகள் - 17 ரன்கள் - 2015